நாநாவித பவததி ப்ராப்த தீர்கா அபராத: – பலவித பிறவித்தொடர்கள் மூலம் சேகரித்த, நீண்ட பெரிய அபராதங்களை உடைய
அஹம் – நான் க்லேஶ அம்போதிம் – துன்பக் கடலை
கதம் அஹம் – எங்கனம் நான்
த்வத் ப்ரஸதாத் ருதே – உன் அருள் இன்றி
தரேயம் – கடந்திடுவேன்
விளக்கம்
“உன்னை சரணாகதி செய்யும் நான் பெரிய அபராதி என்று தெரிவித்துக்கொள்ளுகிறார். ஹேசந்த்ர கலாதரனே! உன் கட்டளைகளை மீறி நடந்தவன் நான். ஸ்ருதி ஸ்ம்ருதி புராணங்களின் மூலம் உன்னால் போதிக்கப்பட்ட கர்மாக்களையும் தர்மங்களையும் சரிவர அனுஷ்டிக்காதவன். புத்தி பூர்வமாக உன் விதிகளை மீறிவிட்டு பயமும் வெட்கமும் கூட இல்லாமல் ஒரு விலங்கைப்போல விஷய ஸுகங்களையே பல இடையூறுகளுக்கு மத்தியில் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்விதம் நான் அபராதியானது இந்த ஜன்மாவில் மட்டுமில்லை பலவிதமான அநேக கோடி ஜன்மாக்களிலும் இப்படியே அபராதியாக இருந்துள்ளேன். எல்லையற்ற துக்கக் கடலை உன் தயவின்றி வேறு எவ்விதம் நான் தாண்டப் போகிறேன்!”
தவறான பாதையில் சென்று, தவறு என்று உணரந்தவருக்கு குற்ற உணர்ச்சி எழலாம். அவைகளை நீக்கிக்கொள்ள இத்தகைய ஸ்லோகங்கள் உதவுகின்றன.
ஏன் உலகோரால் போற்றப்படுகிறான் இறைவன். ஏனெனில் அனைவரும் விரும்புவது இன்பம். பேரின்பமே இறைவன் என்கிறது நமது மறைகள். பேரின்பம் எது என்றறியாமல், பெருந்துன்பத்திற்கு (பிறவிப்பிணிக்கு) காரணமான சிற்றின்பங்கள் நாடிஓயாது உழைக்கின்றனர் உலகோர். இறைவனின் கட்டளை என்பது ஷ்ருதி, ஸ்ம்ருதிகளின் கட்டளை.
விலங்கைப் போல – விஷய சுகங்கள் பின் அலைவது என்பது “வந்த வரவை மறந்து, மாதர்பொன்பூமி மயக்கத்தில்” ஆழ்ந்து என்பதைக் குறிப்பது.
மனதில் நூறு கெட்ட எண்ணங்கள் எழுந்தால், அவைகளை இறைவன் துணையைடன் ஐந்து நல்ல எண்ணங்களால் அழிக்க முடியும் என்ற மகாபாரத தத்துவத்தினை உள்வைத்தது இந்த ஸ்லோகத்தில், ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிறார் அப்பைய தீட்சிதர் (குறள் 190).
துன்பக் கண்ணீரில் துளைந்தோர்க்கு உன் ஆனந்த
இன்பக் கண்ணீர் வருவது எந்நாள் பராபரமே
என்ற தாயுமானவர் பாடல், தீக்ஷிதரின் உள்ளத்தை பிரதிபலிக்கிறது.
மிக்க கடினம் யாதெனில் “மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது”. ஆராய்ந்தால், உடலானது உயிரைத் துன்புறுத்துகிறது என்பதை உணரமுடிகிறது.
“ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம்
என்னை மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா நின் திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன், எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது இரங்கி மகிழ்ந்து தேவரீர் வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம் வீணாகி போகுதென் குறை தீர்த்த பாடுமில்லையே!! அடுத்து வந்த என்னை தள்ளலாகாது அரஹரவென்று சொன்னாலும் போதாதோ!! தடுத்து வந்தருள சமயம்
“திருவடிசரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்” என்ற கோபால கிருஷ்ண பாரதி பாடல் , கருவிலிருந்து வலியுடன் களைப்பாய் வெளிவரும் பிறப்பினை நொந்துவதற்கான “ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம். “இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சது பகீரென்னும் துயில் உறாது” என்கிறார் தாயுமானவர்.
“இந்த்ரிய நிக்ரஹத்தில் அசக்தனாயும் ஸம்ஸார வேதனைகள் விலக்க விரும்புகிறவனாயுமிருக்கும் எனக்கு சரணாகதியைத் தவிர வேறு கதியில்லை என்பதைத் தெரிவிக்கிறார் தீக்ஷிதர்”.
மந்திரம் கூறும் கருத்து
ஸம்ஸாரவாழ்க்கையின் கஷ்டங்களை (பிறப்பு இறப்புச் சுழலில்) நினைத்து நினைத்து பயம் கொண்டு இதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கவலை உண்டானவர்களுக்கு, விஷயங்களில் இயற்கையாகவே நுழையும் இந்திரியங்களை அடக்க முடியாதது பற்றி துக்கம் ஏற்படுகிறது.
மாசுகள் படிந்த மனதிற்கு அடிமையான சித்தத்திற்கும் முக்தியை விரும்பும் ஜீவனுக்கும் ஏற்படும் போராட்டட்தில் சளையுற்ற ஜீவனின் புலம்பல் இது. “என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? எனக்கு எது உபாயம்? ஸ்வாமி ஒன்றும் வகையறியாத நான் உன் இரு கமல மலர்ப் பொற்பாதங்களை சரணடைகிறேன், எனக்கு வழி காட்டி நீ ஒருவனே என்ற சீவன், சிவனை நோக்கிப் புலம்புவதே இந்த ஸ்லோகம்.
அஹம் கிம் வா குர்வே – நான் என்னதான் செய்ய முடியும்
ஸ்மரஹர – காமனை எரித்தோனே
தர்பஜ்வரபரஜுஷா – திமிர் மிகுதியானால் கொதிப்புள்ள
தாவதா – பாய்ந்தோடும்
உக்ஷ்ணா ஸாகம் – காளையுடன் கூடிய
ஏபத்ர யுகே – ஒரே நுகத்தடியில்
பத்த: – பூட்டப்பட்ட
ஶ்ராம்யந் – சிரமத்தினால் சோர்வுற்ற
வத்ஸ: – இளங்கன்று
கிம் கரோது – என்ன செய்யக்கூடும்
விளக்கம்
முன் சுலோகத்தில் கூறியதை இங்கு விரித்துரைக்கின்றார். ஸுலபமான துக்க நிவ்ருத்தி மார்க்கத்தை அறிந்திருந்தும் நான் துஷ்டத்தனமுள்ள விஷய வாஸனையினால் தோற்கடிக்கப் பட்டவனானேன். பார்ப்பதற்கு ஸுகம் போலவும் இறுதியில் துக்கத்தைத் தருவதுமான இந்திரியார்த்தங்களில் ஆவேசத்துடன் பாயும் அநேக காலவாஸனா ஜடிலமான என் மனம் என்னைத் தூக்கி வாரிக் கொண்டுபோய் அனர்த்தங்களுக்கு உள்ளாக்கி விடுகிறது.
நான் என்ன செய்வேன், ஒரு முரட்டுக் காளையுடன் ஒரே வண்டியில் பூட்டப் பெற்ற இளங்கன்று என்ன செய்யும்? காளை மேடுபள்ளம் பார்க்காமல் திமிரிக் கொண்டு அதிவேகமாய் ஓடவாரம்பிக்கும் போது இளங்கன்று எவ்வித பரிதாப நிலையை அடையும்?
வாஸனை முடிச்சுக்களேறிய திமிர் கொண்ட என் மனத்துடன் நானும் இச்சரீரமாகிற வண்டியில் கட்டப்பட்டிருக்கிறேன். பலமற்ற நான் (ஜீவன்) துஷ்டவாஸனைகளால் அடக்க வொண்ணாத என் மனம் இழுத்த இடமெல்லாம் பரிதபித்துக் கொண்டே ஒடுகிறேன். என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஒரே நுகத்தடியில் பூட்டப்பட்ட முரட்டுக்காளையும், இளங்கன்றும் என்ற உருவகத்தைப் பயன்படுத்துகிறார் தீக்ஷிதர். கட்டுக்கடங்காது ஒடும் முரட்டுக்காளையுடன் இளம்கன்று படும்பாடு என்ற உருவகத்தைக் கூறி, முரட்டுக்காளை எனும் மனத்துடன், ஜீவன் எனும் இளங்கன்றின் நிலையை எடுத்துரைக்கிறார் அப்பையர்.
சீராரும் நின் தேஜோமயானந்த
தெரிசங் காட்டு பகலே
தேகாதியாகும் ப்ரபஞ்ச இருளாகியே
திண்டாடும் மும்மலப் பேய்
போராடுது என்னுடன், நான் ஏழை, அதனுடன்
போராட முடிவதில்லை ,
புலையாடல் ஒருநாள் இரண்டு நாளோ? இது
பொறுக்கவும் படுவதில்லை
ஆரோடு சொல்லி என் குறையாறுவேன்? எனக்கு
அன்னையே! அப்பனே! உன்
ஆறுதலையன்றி வேறில்லை , நீ நழுவவிடில்
அடியேன் அலைந்து போவேன்
ஓராலின் நிழலில் உறைந்து சனகாதியர்க்கு
உள்ளபடி அருள் தெய்வமே!
ஒன்றாகி ஆனந்த உருவாகி என் உயிர்க்கு
உயிரான பரமசிவமே!
என்ற, தரும்புர ஆதினம் பத்தாவது குருமகாசன்னிதானம் சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளிய தக்ஷிணாமூரத்தி திருவருட்பா, மும்மலப் பேய்களின் போராட்டம் தனையே பிரதிபலிக்கிறது.
உணரச்சிப் பெருக்கு நிறைந்த உள்ளத்துடன் இணைந்திருக்கும் என்னை, உள்ளத்திலிருந்து விடுவிப்பாயாக என்பதே இப்பண்ணின் சாரம்.
எருக்கம் தும்பை மலரால் பூசை என்றே உரைத்தன மறை நான்கும்! அப்பூசை தரும் முக்திப் பேரின்பமென அறிந்தும் காலம் வினையம் புரிந்து ஐம்புலனின்ப மயக்கம் கொண்டு ஆத்ம துரோகியென அதிவிரைவாய் அதலம் நோக்கி வீழ்கின்றேன் பரமாத்மனே சிவபெருமானே !! ,8
உன்னை ஆராதிப்பது அடியேனுக்கு சிரமமான காரியமில்லை. எருக்கு தும்பை முதலிய மணமற்ற, யாரும் வேண்டாத, எங்கும் கிடைக்கக்கூடிய புஷ்பங்களால் உன்னை அர்ச்சனை செய்தால் போதும். இவ்வளவு ஸுலபமான ஆராதனைக்கு ஏற்படும் பலமோ வீடுபேறு. இதை அறிந்திருந்தும் முக்தியைத் தேடிக்கொள்ளாத நான் ஆத்ம துரோகி என்பதில் ஐயமென்ன? சிவ சிவ என்ன பரிதாபம், நான் வீணாகக் காலத்தை விஷய சபலனாகவே கழித்து வருகிறேன். அதன் பயனாக அதோகதியை அடைகிறேன்.
உலகத்தில் கடுமையான துன்பத்தை அனுபவிக்கும் ஒருவன் அதினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டு மஹத்தான சுகத்தையும் அடைய வெகு எளிய வழியை அறிந்திருந்தும் அதற்கு முயற்சி செய்யாமல் துக்கத்திலேயே உழன்று கொண்டிருப்பானாகில் அவன் எவ்வளவு மூடன், என
ஜீவனாகிய நான் சிவனாகிய உன்னைச் சார்ந்திருப்பதை விட்டுவிட்டு அஸிவமாமாகிய உலகப் பொருட்களையும் உறவுகளையும் சாரந்திருக்கிறேன். என்னைப் பொருத்தருள்வீர் என்கிறர் தீக்ஷிதர் இந்த ஸ்லோகத்தில்.
இதுவும் ஆத்ம நிந்தனை முறையில் பக்தி. உடலுக்கு நன்மை செய்து, உயிருக்குக் கெடுதல் செய்யும் பாவியான ஆத்மத்ரோஹீ நான் என்கிறார்.
ஆத்மத்ரோஹீ – விளக்கம்
உயிருக்கு பிறப்பு, இறப்பு இல்லை. உயிர் வருவதும் போவதும் இல்லை. உயிருக்கு உடல் கிடைத்தது, மனிதன் பெற்ற பெரு வாயப்பு.
உயிருக்காகத்தான் உடல். உயிர் மனமுடன் இணைந்திருக்கிறது. இந்த மனமே பரு உடலை, உயிருடன் இணைக்கிறது. அதனால் உயிர், உடலுக்கே உழைக்கிறது. உடல் உயிரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உண்மையில் உயிருக்காக இருக்கும் கூடு உடல். உயிருக்காக உடலைக் கவனி. உடலுக்காக உடலைக் கவனித்தால், உயிர் திரும்பித் திரும்பி உடலையே நாடும். மனிதன் ஒருவனுக்கே மீண்டும் உடல் எடுக்கா வாய்ப்பு உள்ளது. அப்படி அரிதாகப் பெற்ற உடலை வீண்டிப்பது கூடாது.
இதனை ஈஸாவாஸ்ய உபநிஷத் (3),
असुर्या नाम ते लोका अन्धेन तमसावृताः । तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः ॥ ३ ॥
அசுர குண மடமையுடன் இருள் கொண்டு குருடரென அகமுறை இறை உணர்வறியா ஆன்மக் கொலையாளிகள்
ஈஸாவாஸ்ய உபநிஷத் (3)
அல்லலெனும் மாசாம் பிறவிப் பிணி பெருவரே மூடரவர் என்று தன்னுடைய உடலைத் தான் எனக் கருதுபவது தற்கொலை என்பதைத் தெளிவாக கூறுகிறது.
எனவே, உயிருடன் இணைந்த மனம் (தன்னுணர்வு) அழிய வேண்டும். அது அழிந்தால்தான், உயிர் உடலுடன் அடையாளம் கண்டுகொள்ள இயலாது. அதற்கு மெய்யறிவு தேவை. மெய்யறிவிற்கு இன்றியமையாதது, இறையருள். இறையருளை நாடுவதே ஆன்மீகத்தின் முதல்படி.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே –
என்று உடலை வளர்ப்பதனை திருமந்திரம் கூறுகிறதே என திருமந்திரத்தை தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.
திருமந்திரம் கூறும் உடம்பை வளர்க்கும் உபாயம், உடல் பரம்பொருளின் உறைவிடம் என்ற ஐயம் திரிபு அற்ற மன உறுதியுடன், நன்னெறி வழியில் உடலைப் பாதுகாப்பது என்பதே.
சிவபெருமானை, ஸ்மரஹர என்று அழைக்கிறார் தீக்ஷிதர். ஸ்மர என்றால் நினைத்தல். எல்லாராலும் எப்பொழுதும் நினைக்கப்படுவது காமம் (இனக் கவரச்சி, பாலுணர்ச்சி). எனவே ஸ்மர என்பது காமனைக் குறிப்பது. ஸ்மர அரி என்பது காமத்தை அழிப்பது எனவாகும். மன்மதனை அழித்தவன் என்பது சொற்பொருளாயினும் இதன் கருப்பொருள் இவ்வாறு:
இந்த சொல், விஷயத் த்யானத்தைப் பற்றிய எச்சரிக்கை. இந்திரிய விஷயங்கள் பற்றிய முதல் எண்ணங்களை ஏற்காது, அந்த எண்ணங்கள் நுழையும்போதேஅவற்றைப் பகைவர்கள் என்று அறிகிறான் அறிவாளி. பொருளின்ப எண்ணங்கள், பொருட்களுடனான உறவை ஏற்படுத்தும். அந்த உறவு ஆசையில் அவாவில் தள்ளும். அவா எனும் காமத்தடையினால் கோபம் வரும். கோபம் வந்தால் புத்தி தடுமாறும். குழப்பம் ஏற்படும். குழப்பத்தினால் சாஸத்திரத்தில் கற்றது மறக்கும். கற்றது மறந்தால், புத்தியிருந்தும் பயனில்லை. பயனிலா புத்தியால் பிறவியால் பயனேதுமில்லை.
பற்று – ஆசை – கோபம் – மயக்கம் (பகுத்தறிவின்மை) – நினைவு தவறுதல் – புத்தியின் அழிவு – அழிவு (வாழ்வின் குறிக்கோளை அடையத் தகுதியற்றவனாகுவது) என்று ஒன்று மற்றொன்றை விளைவித்து, அழிவிற்கு இட்டுச் செல்வன. எனவே
தர்மானுஷ்டானம் விஷய க்ரஹனம் ப்ரஸாத ஹேது: – முறையான அறவழியில் செல்கின்ற புலனின்ப நுகர்ச்சி, உள்ளத்தைத் தெளிவுபடுத்திப் புலனின்பங்களிலிருந்து நம்மை விடுவிப்பதைக் குறிப்பது. இதற்கு “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்ற குறள் சொல் மிகப் பொருத்தமானது.
ஆக, ஸ்மர ஹரி என்று இறைவனை அழைப்பது, என்னுடைய காமத்தையும் அழித்திடுவாய் என்ற பிராரத்தனை.
“இந்திரியாநாம் சாபலாத் த்வத்பாதார்சாவிமுகஹ்ருதய” என்ற சொற்றொடர்,
“மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய” என்றும், “இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்” என்றும் மாணிக்கவாசகர்
கூறுவதிற்கு ஒப்பு.
இந்திரிய கட்டுப்பாடில்லை என்றால் “பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” என்று மாணிக்கவாசகர் கூறும் புலையனாவோம் நாம் என்பதை ஆத்ம நிந்தனை மூலம் நமக்கு எடுத்துரைத்து, பொய்மையைப் பெருக்காதே என்று அறிவுரைக்கும் ஸ்லோகம் இது.
ஸ்லோகத்தின் உட்கருத்து
இந்த ஸ்லோகம் “ஆத்ம நிந்தை” – தன்னுடைய குற்றங்களைக் கூறுதல் என்ற வடிவில் அமைந்துள்ளது. இத்தகைய ஸ்லோகங்கள் மூலம் நாம அறிவது, அரிதாகப் பெற்ற இப்பிறவியின் மூலம் நமக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது. இடைவிடாது இறைவன் நாமத்தில் நிலைத்திட வேண்டும் என்று முந்தைய இரு ஸ்லோகங்களில் கூறப்பட்ட கருத்து இந்த ஸ்லோகத்திலும் வலியுறுத்தப்படுகிறது.
வர்ணாஶ்ரம விதி ரதா: – வாழ்வியல் வகுத்த நெறி வழி நடந்து மகிழ்ந்து, வர்ணாஸ்ரம விதிகளைக் கடைப்பிடித்து மகிழ்பவர்களாய்
த்வதாஜ்ஞாம் – த்வத் ஆஜ்ஞாம் – உனது ஆணையை
பாலயந்த: – காப்பாற்றுகிறார்கள்
ஸர்வம் – இவை அனைத்தையும்
ஹித்வா – விட்டுவிட்டு, தவிர்த்து
ஏஷஹ – இந்த
கோர – கொடூரமான
பவஜலநிதௌ – பிறவிப் பெருங்கடலில்
மஜ்ஜாமி – மூழ்கிக் கிடக்கிறேன், அந்தோ!
பொருள் விளக்கம்
இந்த ஸ்லோகம் “உன்னை நான் அணுகவும தண்ணருள் வகுக்க இலையோ” என்று இறையிடம் தாயுமானவர் தன்னைத் தாழ்ந்த நிலையில் வைத்துப் பாடுதல் போல அமைந்துள்ளது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்கிணங்க, அப்பைய தீக்ஷிதரின் தன்னடக்கத்தின் வெளிப்பாடு இந்த ஸ்லோகம்.
இறையை அடைய உலகோர் கடைப்பிடிக்கும் மூன்று வழிகளைக் கூறுகிறார் தீக்ஷிதர்.
தியான மார்கம் (நிதித்யாஸன மார்கம்)
வேதங்கள் கூறும் வைதீக கர்ம அனுஷ்டானம்
வாழ்வியல் நெறிகள்வழியான லௌகீக கர்மானுஷ்டானம்
1. தியான மார்கம்
“த்யாயந்தஸ்த்வாம் கதிசந பவம் துஸ்தரம் நிஸ்தரந்தி” என்ற முதல் சொற்றொடருக்கான விளக்கத்தை நாம் பகவத் கீதையில் காணலாம்.
“தை3வீ கு3ணமயீ ஏஷா மம மாயா து3ரத்1யயா (பகவத் கீதை 7.14), தெய்வீகமானதும் (ப்ரம்மனை அதிஷ்டானாமாகக் கொண்டதும்), குணங்களின் வடிவமுமான இந்த என்னுடைய மாயையானது கடப்பதற்கு கடினமானது” என்றும், “எண்ணற்ற மனிதர்களுள் யாரோ ஒருவர்தான் மோக்ஷ மார்கத்தில் முயற்சிக்கிறார். முயற்சி செய்து மோக்ஷ மார்க்கத்தில் இருப்பவர்களுள்ளும் யாரோ ஒருவர்தான் என்னை அறிகிறார்”
அனுதினமும் இவ்வழிமுறைகளை கடைப்பிடிப்பத “த்வத்பாதாப்ஜம் விதிவதிதரே நித்யமாராதயந்த:” என்று கூறிகிறார் அப்பையர்.
3. வாழ்வியல் நெறிகள் வழியான லௌகீக கர்மானுஷ்டானம்
சமூகத் தொழில்களைப் பற்றியது வர்ண தர்மங்கள்; தனி மனித கடமைகளைப் பற்றியது ஆஸ்ரம தர்மங்கள்.
வர்ணம் என்பது தொழிற் குழு. அவரவர் தொழிற்குழு விதிப்படி பணி புரிந்து இறையின் நியமத்தை கடைப்பிடிக்கின்றனர்.
ப்ரம்மச்சாரி, க்ருஹஸ்தன், வானப்பரஸ்த்தன், சந்யாஸி ஆகியோர் அவரவருக்குறிய தர்மங்களை கடைப்பிடிக்கிறார்கள்.
தனிமனித வாழ்க்கைக்குறிய பொறுப்புகளையும், சமூகப் பொறுப்புகளையும் இறைப்பணி என்ற மனப்பாண்மையுடன் (கர்ம யோகம்) நிறைவேற்றுவதன் மூலம், இறைவனை வழிபடுகிறார்கள்
பகவத் கீதை 18.41 முதல் 45 வரை இதனையே கூறுகிறது. இதன் விளக்கத்தை முந்தைய ஸ்லோகம் 5ல் கண்டோம்.
அப்பையரின் நிலை உரைத்தல்
ஆறறிவு பெற்ற மானிடர் அனைவருமே “துன்பம் தவிர்த்து நிலையான தூய இன்பமடையவே அவர்தம் பணிகளின் குறிக்கோளாக வைத்து அவரவர் பணிகளைப் புரிகின்றனர்” என்பதில் ஐயமேதுமில்லை.
நம் மறைகள், அறத்தின் வழி நின்று, பொருள் தேடி, முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்ற வழி முறையைக் கூறுகின்றன. இதனை “புருஷார்த்தம்” என்பர்.
அந்த வீட்டினை அடைய முயலும் நம் அனைவரின் வாழ்க்கையிலும், அன்றாடம் இடைவிடாது முக்கியமான மூன்று பெரும் தத்துவங்கள் தொடர்பு கொள்கின்றன. அவை, மனிதன், உலகம் (படைப்பு), இறைவன்.
இவைகளை வாழ்வில் உபயோகித்து (அனுபவித்து) , வினைகள் புரிந்து, “பொருள்” தேடி, “இன்பம்” துய்த்து, களைத்து, முடிவில் “நாம் வந்த கதை என்ன? நாம் கொண்டது என்ன, கொடுப்பது என்ன? மன்னைத் தோண்டி தண்ணீர் தேடும் நாம், நம்மைத் தோண்டி ஞானம் கண்டோமா? இல்லை, நம் மனமெங்கும் தெருக் கூத்து, பகல் வேஷமா?” என்றெல்லாம் பிதற்றி, தன்னை அறிவதே தனது பிறவியின் நோக்கம், அதனை அறிய முயலாமல் வாழ்நாளை வீனாக்கினோமே என துன்பமுற்று, வருந்தி மடிகிறோம்.
ப்ரதிதமஹிமா (விவித மஹிமா) – பல்வேறு விதமான மகிமைகளை உடையவராக
கீயஸே – போற்றிப் புகழ்ந்து பாடப்படுகிறீர்
விப்ராத்யைர் – அந்தணர் முதலான
நிகிலைர் – அனைவராலும்
ஸ்வை: – அவரவர்
கர்மபி:- கர்மங்களால்
இஜ்யஸே – வழிபடப்படுகிறீர்
அந்தர்க்ரந்தி – அக முடிச்சுகள்,
ப்ரவிலயக்ருதே – நன்கு அவிழும் பொருட்டு
த்ருஷ்ட அநுஶ்ரவிக விஷயாநந்தமாத்ரா – இவ்வுலக அவ்வுலக புலனின்பப் பொருட்களில்
வித்ருஷ்ணைர் – வேட்கையொழிந்த
யோகிவ்ருந்தை: – யோகியர் கூட்டங்களால்
சிந்த்யஸே – நன்கு தியானிக்கப்படுகிறீர்
பொருள் விளக்கம்
துன்பம் கலவா இன்பமதனை எப்பொழுதும் வேண்டிடும் நம் அனைவரின் இலக்கு இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காத பேரின்பமான இறைவன் ஒன்றே. ஆழ்மனதில் எப்பொழுதும் இறைநினைப்பு இருக்க வேண்டும் என்பதே இந்த ஸ்லோகத்தின் கருப்பொருள்.
இப்பொருளை விளக்கிட, அப்பைய தீக்ஷிதர்
இறையின் மஹிமைகள் உபநிஷத்துக்களால் பலவாறு போதிக்கப்படுகின்றன என வேதங்களை ப்ரமாணமாக முதலில் கூறி
செய்யும் தொழிலே தெய்வம் என்ற கர்ம யோகத்தின் கருத்தை உள்வைத்து உலகோர் வணங்குவர் உத்தமனை என்று அறிவுரைத்து,
இருமை வகையறிந்து ஈண்டு அறம் பூண்டவர் தியானிப்பதும் அவனையே என்று எடுத்துக்கூறி ஞானயோகம் வழி அவனை அடைவது
என்று வாழ்வதனில் பேரின்ப இலக்கை அடைய, இறையினையே இடைவிடாது நாடிட வேண்டும் என்று கூறுகிறார் அப்பையர்.
இந்த ஸ்லோகத்தில்,இறைவனை இரண்டு விளி வேற்றுமைச் சொற்கள் (ஸம்போதன ப்ரதமா விபக்தி ஏக வசனம்) கொண்டு அழைக்கிறார்:
1. “விஶ்வநேத:”
இந்த சொல், உலகை வழிநடத்திச் செல்பவரே என்று பொருள்படும். இந்த வழிநடத்தலை விளக்கிட
ஆக்கி அளித்துத் துடைக்கும் தொழில்
அத்தனை வைத்தும் எள்ளத்தனை யேனும்
தாக்கற நிற்கும் சமர்த்தன் உள்ள – சாக்ஷியைச்
சிந்திக்கத் தக்கது தோழி
என்ற தாயுமானவர் பாடல் போதுமானது.
2. ‘வரத”
வரம் என்பது தேரந்தெடுத்தலைக் குறிப்பது. இங்கே அடியார்களின் தேர்வைக் குறிப்பது. அதாவது, இறைவன், நான் தேரந்தெடுத்ததை அருள்பவர் எனப்பொருள்படும். இதனை பல ஞானியர் எடுத்துரைத்துள்ளனர்:
“எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்” என்கிறார் வள்ளலார் இராமலிங்க அடிகளார்.
மனிதர்கள் தங்கள் உள்ளார்ந்த குணங்களால் பிறந்த தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம், முழுமையை அடைய முடியும். ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவர் எவ்வாறு பரிபூரணமாக முடியும் என்பதை இப்போது என்னிடம் கேள்
என்ற கண்ணனின் அறிவுரை விளக்கமாகிறது. ஒவ்வொருவரும் தங்களது கடமைகளின் மூலம் கடவுளை வழிபடுகிறார்கள். கடமைகளை கடவுள் வழிபாடாகக் கருதி செய்ய வேண்டும். கடவுளுடன் தொடர்புபடுத்தப்பட்ட செயல்களுக்கே கர்மயோகம் என்று பெயர். அது நம்முடைய மனதை பக்குவப்படுத்தும். “யாதாயினும் தொழில் செய்வோம், யாதும் அவன் தொழிலாம்” என்றான் பாரதி.
“அந்தர்க்ரந்தி” எனும் அக முடிச்சுகள் என்ன? முடிச்சு என்பது அறியாமையினால் ஏற்படும் த்ருட பந்தம் – strong attachment என விளக்குகிறார் ஆதி சங்கரர். அதாவது, என்னைப் பற்றிய, ப்ரபஞ்சத்தைப் பற்றிய, நான் உடல், செல்வம் என்னுடையது, நான் இன்பமாக இருக்கிறேன், நான் துன்பமாக இருக்கிறேன் போன்ற விளைவாகிய எண்ணங்கள்அனைத்தினால் (நல்லது கெட்டது உட்பட, வித்யா, அவித்யா மாயையின் குணங்கள்) முடிச்சுகள் ஏற்படுகிறது. இதனின் விளக்கத்தை
அத்வாதீதே - ஆறு பாதைகளிக்கப்பால், ஆதாரங்களுக்கப்பால்
ஶுசி கோடி திவஸ க்ருத் - கோடைகால கோடி சூரியனுக்கு நிகரான
தீப்தே - ஒளியுடன்
கணேஶை: - கணங்களால்
ஸேவ்யமாநோ - வழிபடப்படுவராய்
ஸதா - எப்பொழுதும்
ஆந்நே ஸ்தாநே - முதலிடத்தில்
விஹரஸி - உலவுகிறீர்
பொருள் விளக்கம்
ஆதிதேவன் வேதங்கள் வாயிலாக அறியப்படுகிறார் – வேதங்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக அநுமானத்தின் மூலமாக நமக்கு விளங்க வைக்கிறது என்ற உட்கருத்தை முந்தைய ஸ்லோகத்தில் கூறிய அப்பைய்ய தீக்ஷிதர், இந்த ஸ்லோகத்தில் அவ்வித ஆதி தேவனாகிய பரமேசுவரனுக்கு,
எவ்வித ஸ்வரூபம்,
எந்த ஸ்தானம்,
எவ்வித பரிவாரங்கள்
என்பதை விரித்துரைக்கின்றார். இறைவனின் உயர்ந்த நிலையை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. உயர்ந்த நிலையை தியானிப்பவன் எப்பொழுதும் உயர்ந்த நிலையிலேயே இருப்பான்.
இறைவனின் ஸ்வரூபம்
இறைவன் துன்பமே இல்லாத பேரின்ப வடிவமாக இருக்கிறார். இதனை “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்றார் திருநாவுக்கரசர்.
இறைவன் இருப்பது ஆனந்தமலை, ஆனந்தக்கடல். “ஆநந்தாப்த்ய”: “கநீபாவம், அதாவது பேரின்பக் கடலின் (இன்பப் பெருக்கின்), உறைவடிவமாக (இறுக்கமாக) என்பது. ஜலம் உறைந்து பனிக் கட்டியாவது போல் ஆனந்த வெள்ளம் கெட்டியாகி ஒரு ஸ்வரூபமானது என்று சொல்லக்கூடியது பரமேசுவரனின் ஸ்வரூபம். இது நிர்விகல்ப சமாதி நிலையைக் குறிப்பது.
அவருடைய சக்தியே உமையாகி அவரோடு சேர்ந்தது. இதனைக் குறிப்பதே “ஶக்த்யா ஸார்தம் பரமமுமயா” என்ற சொற்றொடர். சக்திதேவியாகிய (மாயையுடன்) உமையோடு கூடியவராய் என்பது சவிகல்ப சமாதியைக் குறிக்கும்.
“ ஶாஶ்வதம் போகம்ருச்சந்” என்ற சொற்றொடருக்கு, இரு விளக்கங்கள் கூறப்படுகின்றன:
இந்த உமையொருபாகனான இறைவனே, உடல் எடுத்து, இந்த பிரபஞ்சத்தில் உள்ள இன்பத்தை அனுபவிக்க விரும்புகிறார் என ஒரு விளக்கம். (பால கிருஷ்ணன் ஆலிலையிலிருந்து கொண்டு, தனது வலது கால் கட்டைவிரலையே சுவைப்பது போல )
பரம்மானந்த ஸ்வரூபமான பரம்பொருள் மாயா சக்தியுடன் இணைந்து, உலகில் அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்க விரும்புகிறார் என்று மற்றொரு விளக்கம்.
அது பழச்சுவையென அமுதமென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
என்று இதனை அழகாக வர்ணிக்கின்றார் மாணிக்கவாசகர்.
அத்3வாதீதே – இறைவனின் இடம் (ஸ்தானம்) – விளக்கம்
அத்3வாதீதே என்பது ஆறு பாதைகளைக் கடந்து, ஆறு ஆதாரங்களுக்கு அப்பால், ஆறு தத்துவங்களுக்கு அப்பால் என்ற பொருளாகும். அத்வா என்றால் மார்கம். அத்வாதீதம் என்பது மார்கத்தின் முடிவு (மார்கத்தைக் கடந்தது)
ஆகம சாஸ்த்திரங்களில் இது விரிவாக கூறப்பட்டுள்ளது. இவைகளை உடல், மனம், வாக்கிற்கு அப்பாற்பட்டவராக, ஆன்மீக சாதனையின் எல்லையாக, அதாவது
மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களைக் கடந்து என்றும்
மூலாதாரம் – தொப்புளுக்குக் கீழ்
ஸ்வாதிஷ்டானம் – தொப்புளுக்குக் கீழ்
மணிபூரகம் – தொப்புள்
அநாஹதம் – ஹ்ருதயம்
விஷுத்தி – கழுத்து
ஆஞ்ஞா – புருவமத்தி
2. இயற்கையின் வெளிப்பாடுகளாகளைக் கடந்ததாகவும்
வர்ணம் – எழுத்து
பதம் – சொல்
மந்த்ரம் – மந்திரம்
புவநம் – பிரபஞ்சம்
தத்துவம் – ஐம்பூதத் தத்துவங்கள்
கலா – ஸூக்ஷும ஐம்பூதங்கள்.
அறியலாம்.
ஆக, அரூபமான பரமேசுவரனும் லோகானுக்ரஹத்தின் பொருட்டு லீலா விக்ரஹமெடுத்துக் கொள்ளுகிறார் என்பது சாஸ்திரங்களின் கொள்கை. அவர் இருப்பதோ கோடி ஸூர்யப்ரகாசமான ஒரு ஸ்தானம். அது ஸ்ருஷ்டிக்கு முன்னால் பரமேச்வரனின் இச்சையால் ஆனது. அந்த ஸ்தானம் அத்வாக்கள் என்ற தத்துவங்களுக்கு அப்பாலுள்ளது. வர்ண, பத, மந்த்ர, புவன, தத்வ, கலா என்பன ஆறு அத்வாக்கள், மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூர, அனாஹத, சிவபதமடைய வேண்டியவர் செல்ல வேண்டும் என்ற உட்கருத்துடையது இந்த ஸ்லோகம்.
அந்த ஸ்தானத்தில் தன் அம்சம் பொருந்தின சிறந்த கணங்களால் ஸேவிக்கப்படுகிறார்.(கணங்கள் – தேவ, ரிஷி, பூத கணங்கள்).
ஸ்லோகத்தின் கருத்துரை
ஆனந்தமே வடிவான சிவபெருமானை, மாயையுடன் (சக்தியுடன்) கூடி, ஆனந்தத்தை விரும்புவர் போல் செயல் புரியும் பரமேஸ்வரனை, அனைத்து தாவர ஜங்கமும் (பூத கணங்களாய்ப்) போற்றுகின்றன..
பகவான் ஷ்ருஷ்டி கர்த்தா. அவருடைய ஸ்வரூபத்தை எவராலும் அறிய முடியாது. ஆனால் அவர் பக்திக்கு வசப்பட்டவர் என்று முதல் ஸ்லோகத்திலும்,
படைப்பு இருப்பதால், படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும். ஜடப்பொருளாலும், வரையறைகளுக்கு உட்பட்ட ஜீவன்களாலும் படைக்க முடியாது என்பதனால், அனைத்து ஆற்றலும், அறிவையும் கொண்ட இறைவன் ஒருவனால் தான் இதனைப் படைக்க முடியும். எனவே கடவுள் இருக்கிறார் என்ற அறிவுப்பூர்வமான அநுமானத்தை
அப்பையர், இரண்டாவது ஸ்லோகத்திலும் கூறினார்.
இந்த மூன்றாவது ஸ்லோகம் இந்த அனுமானத்தை
“ஆதிதேவன், வேதங்கள் வாயிலாக அறியப்படுகிறார் – வேதங்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக அநுமானத்தின் மூலமாக நமக்கு விளங்க வைக்கிறது”
என்ற ஷ்ருதிப் ப்ரமாணத்தை கூறுகிறது.
“வேதங்கள் ஐயா என ஓங்கி அகழ்ந்து அகன்ற நுண்ணியனே” என்கிறார் மாணிக்க வாசகர். இதுவே இந்த ஸ்லோகத்தின் சாரம்.
பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு. என்பர் சிலபேர் பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே
என்று தாயுமானவரும் கூறுகின்றனர்.
இப்படி, அறியதற்கு அரிதான, பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமயமான இறைவனுக்கு ஒரு வடிவத்தை கூறுவதுபோல அமைந்துள்ளது இந்த ஸ்லோகம். இறைவனை அறிபவர், “அவரவர் தம்தம் தறிவறி வகை வகை” என்கிறார் நம்மாழ்வார்.
ஆயிரம் தெய்வம் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் - பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ !
என பாரதி பண் பாடினான். அப்படிப்பட்ட சாஸ்த்திரம் இறைவனை எப்படி யாருக்கு அறிய வைக்கவேண்டும் என்று வகுத்தறிந்துள்ளது. எனவே
உத்தம அதிகாரிக்கு – உன்னிடத்தில் உணர்வாக இருப்பவரே இறைவன் (விவர்த்த காரணம்)
சிவ – சொல் விளக்கம்
சிவ என்றால் மங்கலம், இன்பம் எனப்படும். அதாவது பொறிகளைப் பயன்படுத்தாமல் அறிவால் அறியக்கூடிய இன்பம் எனப்பொருள். இது பேரின்பம்.
“அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமருரும் அறியார் “ என்றும், “உலப்பலா ஆனந்தமாய் தேனினைச் சொரிந்து” என்றும் வர்ணிக்கின்றார் மாணிக்கவாசகர்.
மித்ரம் வருணம் – விளக்கம்
வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும். மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம். சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.
என்று பொய்யாழ்வர் இந்த மித்ர வருண தத்துவத்தை விளக்கிகிறார். அதாவது,
நாமம்/பெயர்– சிவன், நாராயணன், வாகனம் – ரிஷபம், கருடன், நூல்கள் – ஆகமம், வேதம், வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்), தொழில்/கருமம் – அழித்தல், காத்தல், ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம், உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு, ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)
இதைத் தான் வேதம், மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.
இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.
காரண ப்ரம்மன் அனைத்திற்கும் மூலகாரணமான இறைவன், பரம்பொருள். கார்ய ப்ரம்மன் தேவதைகள். கார்ய ப்ரம்மர்களுக்கு பொறுப்புகள் உள்ளன. காரண ப்ரம்மத்தின் ஆற்றலின் ஒரு சிறு துளியே இத்தேவதைகளனைத்தின் ஆற்றல். இதனை
அந்த அந்த புராணத்தில் அந்தந்த தேவதைகள் காரணப் பரம்மனாக வழிபடப்படுகிறார். உண்மையில் காரண ப்ரம்மத்திற்கு நாம ரூபங்கள் இல்லை. மித்ரம், வருணம் என்று இரு தேவதைகளை கோடிட்டுக் காட்டி இறைவன் எனும் சிவனுடைய ரூபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், ரூபமில்லா இறைவனை நமக்கு உணர்த்துகிறார் அப்பையர் இந்த மந்திரத்தில்.
ஸ்லோகத்தின் கருப்பொருள்
மனம் வடிவத்தைப் பற்றிக் கொண்டாலும், உண்மையில் இறைவனுக்கு வடிவமில்லை என்ற அறிவுடன் இருக்க வேண்டும்.
உண்மையில் வணங்குகின்ற எனக்கும் வடிவமில்லை, வணங்கப்படும் இறைக்கும் வடிவமில்லை. அறியாமையால் என்னை உருவமாக கருதி, காணும் அனைத்தும் நாம, ரூபம் உள்ளவை என அறியாமையினால் எண்ணாத எண்ணமெல்லாம் ஏங்கி ஏங்கித் தவிக்கிறேன். தனித்தன்மைகள் உண்மை என எண்ணுவது மாயை. உணர்ச்சிகள் உண்மை அல்ல, எனினும் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் தேவை.
இத்தகைய எண்ணத்தில் நிலைத்திருக்க, மனதை சமநிலைப்படுத்தி, ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு உதவும், அப்பையரின் இந்த ஸ்லோகத்தின் விசாரம்.
ஒவ்வொரு முறையும் நான் நியுயார்க் நகரில், மன்ஹாட்டனிற்கு வரும்பொழுதெல்லாம், முதலில் என் மனதில் நிலைப்பது ஒரே ஒரு காட்சிதான்.
விண்ணைத் தொடுமளவு உயர்ந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களில், தலையைக் கிறுகிறுக்க வைக்கும் உயரத்திலே, மணிக்கு ஐந்திலிருந்து பத்து மைல் வேகத்தில் அடிக்கும் காற்றையும், நீர் உறையும் குளிர் காலத்திலும், உடல் வேகும் கோடை காலத்திலும், நான்கு இரும்புக் கயிற்றில் தொங்கும் தொட்டிலில், காலை முதல் மாலை வரை வாழ்ந்து, உழைக்கும் தொழிலாளிகளைக் கண்டு ஒருவித அச்சத்துடனும் மாளா வியப்புடனும் நான் காணும் காட்சியே அது.
இம்முறை, அத்வைத வேதாந்த மாணவனாகிய எனது உணர்ச்சிகளை வெளிக்கொட்டுவது என்ற முடிவின் விளைவே இக்கவிதை
நான்கு கரும்பொன் கயிற்றினிலே நானூறடி தாண்டிய உயரத்திலே நாடிகள் நலித்திடும் வாதமனிலே ஆடிடும் காலிலாத் தொட்டிலிலே பாழும் வயிறுப்பாட்டினால் வாழ்ந்தே நாளும் உழைத்திடும் நண்பர்களே! பாவியெனக் கூறவா இவ்வுலகினையே ஆவிபறக் கஞ்சிதரும் அன்னையெனவா பாரெங்கு கேட்டிடினும் பதிலில்லையே ! காலிலாக் கட்டில் சேரும் காயத்திற்காகவே காலிலாத் தொட்டிலில் ஆகாயத்திலே ஆடியே வாயையும் வயிற்றையும் கட்ட வேண்டியுளதே! மாயை எனும் வாழ்வுதனில் இது தேவை என்றிடினும் தேவை நமக்கு ஒன்றே அது ஆத்மஞானமெனும் மெய்யறிவே !!