ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்துதி 25 – இதய முடிச்சுகள் அறுப்பு

முகவுரை

இந்த ஸ்துதி (25) மிகவும் நுண்ணியமான வேதாந்த சாரத்தைக் அடக்கியது. குறிப்பாக, ஹிரண்யகர்பன் (ब्रह्मा) உருவாக்கம், அவனுக்கு ஞானம் கிடைத்த விதம், அதே ஞானமே ஜீவனின் இதய முடிச்சுகளின் அவிழ்ப்பிற்கு ( ஹ்ருதய-க்ரந்தி விநாஷத்திற்கு) காரணம் என்பதை கூறி, மெய்யறிவு பெற வேண்டுகோள், குரு உபதேச அவசியம், ஞானமே முக்தி என்ற அத்வைத சித்தாந்தம் என்பதை உட்கருத்தாக வைத்த ஸ்துதி இது.

ஸ்துதி 


यो देवानां प्रथममशुभद्रावको भक्तिभाजां
पूर्वं विश्वाधिक शतधृतिं जायमानं महर्षिः ।
दृष्ट्यापश्यत्सकलजगतीसृष्टिसामर्थ्यदात्र्या
स त्वं ग्रन्थिप्रविलयकृते विद्यया योजयास्मान् ॥ २५॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

யோ தேவாநாம் ப்ரதமமஶுபத்ராவகோ பக்திபாஜாம்
பூர்வம் விஶ்வாதிக ஶதத்ருதிம் ஜாயமாநம் மஹர்ஷி: ।
த்ருஷ்ட்யாபஶ்யத்ஸகலஜகதீஸ்ருஷ்டிஸாமர்த்யதாத்ர்யா
ஸ த்வம் க்ரந்திப்ரவிலயக்ருதே வித்யயா யோஜயாஸ்மாந் ॥ 25॥

தமிழாக்கம்


அண்டம் படைத்திடும் ஆற்றலதனை அயனுக்கு
அருள்விழியால் அளித்திட்ட அண்டமுதலோனே 
பக்தர்களின் பாவங்களை பரிவுடனே தீர்ப்போனே 
இதயமதை இறுக்கிப்பிணை முடிச்சுகள் அவிழ்ந்திட
இணைத்திடுவாய் மெய்யறிவுடனே எம்மை நீயே !! 25

சொற்களின் பொருள்

விஶ்வாதிக - உலகைக் கடந்தவரே! ப்ரஞ்சத்திற்கு அப்பாற்பட்டவரே! 

பக்திபாஜாம் - பக்தர்களின்
அஶுப த்ராவகோ - பாபங்களை (குறைகளை) தீர்ப்பவரான,
மஹர்ஷி: மஹரிஷியான
யஹ - எவர்

தேவாநாம் - தேவர்களுக்கு
ப்ரதமம் - முதலில்
ஜாயமாநம் - தோன்றுகின்ற
ஶதத்ருதிம் - பிரம்மனை (பிரம்மனின் பெயர்)

பூர்வம் - படைக்கும் காலத்தில்
ஸகலஜகதீ ஸ்ருஷ்டி ஸாமர்த்த்ய தாத்ர்யா - அனைத்து உலகங்களையும் படைக்கும் திறன் தரும்
த்ருஷ்ட்யா - பார்வையுடன்
அபஶ்யத் - பார்த்தாரோ
ஸஹ த்வம் - அத்தகைய நீவிர்

க்ரந்தி ப்ரவிலயக்ருதே - (அறியாமை, ஆசை, செயல் முதலிய) முடிச்சுகள் அவிழும் பொருட்டு (மோக்‌ஷத்தின் பொருட்டு)
அஸ்மாந் - எங்களை
வித்யயா - ப்ரம்மவித்யையுடன்
யோஜயஹ - இணைத்திடுவாயாக

விளக்கம்

யாரை நோக்கி இந்த ஸ்லோகம் ? 

சிவபெருமானுக்கு, “ருத்ர:”  எனும் பெயர் உண்டு. “ருத்ர” என்பதற்கு “ருதம் த்ராவயதி இதி ருத்ர:” என்ற பொருள்; அதாவது துன்பத்தை நீக்குபவன் ருத்ரன். ஆகையினாலே தீக்‌ஷிதர் கூறும் “அஶுப த்ராவகஹ” என்ற சொல் “ருத்ரஹ” எனும் சிவன் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவரே “விஶ்வாதிக”, உலகைக் கடந்தவர்; ப்ரஞ்சத்திற்கு அப்பாற்பட்டவர் ! 

யாருடைய துன்பத்தை நீக்குகிறான் ருத்ரன் ? 

“பக்திபாஜாம்” என்கிறார் அப்பையர். “பக்திபாஜாம்  அசுப த்ராவகோ யஹ ஸஹ த்வம்” என்பதற்கு விளக்கம்  பகவத்கீதை 18.45,46ல் காணலாம். 

“மனிதர்கள், தங்கள் உள்ளார்ந்த குணங்களால் பிறந்த,  தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம், முழுமையை அடைய முடியும். ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவர் எவ்வாறு பரிபூரணமாக முடியும் என்பதை இப்போது என்னிடம் கேள் (18.45). ஒருவரின் இயற்கையான தொழிலைச் செய்வதன் மூலம், எல்லா உயிரினங்களும் யாரிடமிருந்து தோன்றியதோ, யாரால் முழுப் பிரபஞ்சமும் வியாபித்திருக்கிறதோ, அந்த படைப்பாளியை ஒருவர் வணங்குகிறார். அத்தகைய வேலையின் மூலம், ஒரு நபர் முழுமையை அடைகிறார்.(18.46).”

அவரவருக்கு வகுக்கப்பட்ட (உள்ளார்ந்த குணங்களால் பிறந்த இயல்பான) கடமைகளை முறையாக செவ்வனே செய்தலே பக்தி எனப்படும்.  இத்தகைய “பக்திபாஜாம்”, பக்தர்களின் பிறவிப்பிணி தீர்ப்பவன் (ஸம்ஸாரத்தில் உண்டாகும் ஸகலவித துக்கங்களையும் விலக்குகிறவர்) ஈசன், “அசுப த்ராவக:”.

யார் அந்த ஈசன் ? ஈசனின் திறன் எப்படிப்பட்டது ? 

அத்தகைய ஈசன் அனைத்தும் அறிந்தவன் (“ஸர்வஜ்ஞன்”). ஆதலால் தனது முதல்படைப்பாக உண்டாகும் ப்ரம்மதேவனை (ஹிரண்யகர்பன்) அருளோடு நோக்குகிறார். இதுவே சாக்ஷுஷ தீக்ஷையாகும். குரு திருஷ்டி மாத்திரத்தினால் தன்னிடமுள்ள ஞானத்தை சிஷ்யனிடம் தோற்றுவிப்பது சாக்ஷுஷதீக்ஷை எனப்படும். இதனால் ப்ரம்மதேவனுக்கு ஸகல உலகங்களையும் படைக்கும் திறமையுண்டாகிறது. 

அப்படிப்பட்ட ஈசனிடம் என்ன வேண்டுகிறார் தீக்‌ஷிதர்? 

“க்ரந்திப்ரவிலயக்ருதே வித்யயா யோஜயாஸ்மாந்”, முடிச்சை அவிழ்த்து பிரம்ம மேவனுக்குப் புகட்டிய அந்த மெய்யறிவினைப் புகட்டு என்பது வேண்டுதல். 

எத்தகைய முடிச்சு ? 

அறியாமை, ஆசை, செயல் என்ற மூன்றே இதய முடிச்சுகள் என்று முண்டக உபநிஷத் விளக்கவுரையில் (பாஷ்யம்) ஆதி சங்கரர் கூறுகிறார். நீக்கமற நிறைந்திருந்து அனைத்தையும் அறியும் தூய உணர்வெனும் ஆத்மாவே தான் என்பதை அறியாமல், தான் உறையும் உடல் மன வளாகத்தினால், ஒலி, ஊறு, மணம், ஒளி, சுவை எனும் ஐம்புலனின்பங்களின் பின் அவா கொண்டு அலைந்து வினைகள் புரிவதனைக் குறிப்பது இந்த இதய முடிச்சுகள். 

அறியாமை, ஆசை, செயல் இவை களைந்திடத் தேவையான, மெய்யறிவினை அறிவதற்கான பயிற்சியில் இணைந்திட அருள்புரிவாய் ஆலமுண்ட அண்ணலே என இறையிடம் வேண்டுகிறார் அப்பையர்.

முடிவுரை

“யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்

யோ வை வேதாம் ஶ்ச பஹிணோதி தஸ்மை |

தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாஶம்

முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே || 6. 18 ||”

என்று ஷ்வேதாஷ்வதரோபநிஷத் கூறுகிறது.

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் – “யார் அந்த பிரம்மனை (சிர்ஜன கார்யத்தில்) முதலில் (பூர்வம்) ஸ்ருஷ்டி செய்து அறிவை அளித்தாரோ”

யோ வை வேதாம் ஶ்ச பஹிணோதி தஸ்மை  – “யார் அந்த பிரம்மனுக்கு வேதங்களை உபதேசித்து அவர் மூலமாக பிரபஞ்சத்தைப் படைத்தாரோ”

தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாஶம் –  “அந்த தேவனை, என் (ஜீவனின்) அஜ்ஞானத்தை அகற்றி, புத்தியை ஒளிர்வித்து  “சாக்ஷாத் சச்சிதானந்த ரூபம்” (சுத்த சைதன்ய ரூபமாக, சத்தியம) என்  ஸ்வரூபம் என அறிய வைக்கும், அந்த இறைவனை.

முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே – “முமுக்ஷுவான நான், அவரிடம் சரணாகதி செய்கிறேன்”. இங்கு சங்கரர் ‘முமுக்ஷு’ என்பதைக் “பந்த விமோட்ச ஆர்த்தி” (பிரபல மாயை பந்தத்திலிருந்து விடுபட விரும்புகிறவன்) என்று குறிப்பிடுகிறார். சரணாகதி — தன்னுடைய அஹங்காரத்தையும், கர்த்த்ருத்வ பாவத்தையும் விட்டுவிட்டு ஈஸ்வரனையே ஒரே புகலிடமாக ஏற்கும் நிலை.

அதாவது

1. ஈஸ்வரனே காரணம்: பிரம்மன், வேதம், ஜீவன் — அனைத்திற்கும் பரம காரியம் ஈஸ்வரன்.

2. ஆத்ம புத்தி ப்ரகாஶம் — சொரூப ஞானத்தின் வெளிச்சம். இது அனாதி. அவித்யா எனும் அறியாமையை நீக்கும். (avidya-வினை நிவர்த்தி செய்யும்).

3. முமுக்ஷு சரணாகதி — ஞானப்பிராப்திக்கே உரிய பாக்யமான உபாயம்.

4. ஞானமே முக்தி மார்க்கம் — கர்ம, உபாஸனா முதலியவை சகாய உபாயங்கள் மட்டுமே.

“அதிகாரி (முமுக்ஷு) பண்டிதனாக இருந்து ஞான மார்க்கத்தை பின்பற்றிக் கொண்டு, இறைவனிடம் சரணாகதி செய்து, ஸ்வசுரூப அனுபவத்தின் மூலம் பந்தம் நிவர்த்தி செய்து முக்தி அடைய வேண்டும்.”

பிரபஞ்சத்தின் ஆதிகாரணமாகிய பரபுருஷனே, வேதங்களை வழங்கும் ஞானகரனே, எனது அஞ்ஞான இருளை அகற்றி ஆன்ம புத்தியில் வெளிச்சம் தரும் பரமேஸ்வரனே, பிறவிப் பந்தத்திலிருந்து விடுபடவேண்டுமென்ற எனக்கு ஒரே சரணாக நீ இருக்கின்றாய். எனவே உன்னை சரணாகதி செய்கிறேன்.”

என்ற இந்த உபநிஷத்தின் விளக்கமாக அமைகிறது, அப்பையரின் இந்த ஸ்லோகம்.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க ! 


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Unknown's avatar

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading