
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, கொடைக்கானல் மலை அடிவாரத்தின் அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பாரம்பரியத் தமிழ்ச் சூழலில் வளர்ந்த நான், உயர்கல்விக்காகத் திருச்சிக்கு வந்தபோது, அது எனக்குப் புதியதோர் வியப்பு உலகிற்குள் நுழைந்த அனுபவத்தைத் தந்தது. திருத்தெப்பக்குளத்தின் அருகிலிருந்த செயின்ட் ஜோசப் கல்லூரியின் கிளைவ்ஸ் விடுதியில் காலெடுத்து வைக்கையில், எனக்குள் ஒரு விசித்திரமான வரலாற்றுத் தலைசுற்றல் ஏற்பட்டது. எனக்கென இருந்த கட்டுப்பாடான, ஒழுங்கான வாழ்க்கை முறை, குடும்பச் சூழல், நண்பர்கள் குழாம், கிராமத்தின் அமைதியான தனிமை — இவை அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. விளங்காததொரு பாதுகாப்பின்மை உணர்வு மனதுக்குள் ஊர்ந்து வந்தது.
குழம்பியிருக்கும் போது நாம் தலையைத் தூக்கி ஆண்டவா என மேல்மூச்சு விடுவது வழக்கமல்லவா. அங்ஙனம் திகைத்துழன்று திரிந்த நான் மேல்நோக்கும்போது, எனக்கு ஓர் உன்னத காட்சி. பரபரக்கும் நகரக் காட்சியைத் தாண்டி, வானத்தை ஆட்கொண்டபடி உயர்ந்து நின்ற மலைக்கோட்டையின் உச்சியில் எழுந்தருளியிருந்த உச்சிப் பிள்ளையார் கோயில் கோபுரம் அது!
பாரம்பரியத்தில் வளர்ந்த அச்சிறுவனுக்கு, அந்தக் காட்சி அனைத்தையும் மாற்றிவிட்டது. சில நிமிடங்களுக்கு முன்பு இறை உணர்வற்றதாகவும் அந்நியமாகவும் தோன்றிய நகரம், இப்போது கோபுரம் வானத்தை முட்டும் அக்காட்சியால் ஆழ்ந்த ஆன்மிகப் பாதுகாப்பை அளித்தது. “இந்த நகரம் புதிதாக இருக்கலாம்; ஆனால் இங்கும் உச்சிப் பிள்ளையார் அமர்ந்து எல்லாவற்றையும் காக்கிறார்” என்றதொரு உள்நிலை நம்பிக்கை உருவானது. வெட்கமும் தயக்கமும் முழுவதும் மறைந்துவிடவில்லை; ஆனால், அவற்றுக்குள்ளே ஒரு அமைதியான பக்தி முதுகெலும்பாக நிமிர்ந்து நின்றது.
அதன்பின் கோயிலுக்குச் சென்று வந்த அடிக்கடி தரிசனங்களும், சிவபெருமானின் (தாயுமானவ சுவாமிகளைப் பற்றிய) சித்திரங்களும், கோயில் சுவர்களில் எழுதப்பட்டிருந்த தாயுமானவர் பாடல்களும் என் மனநிலையை மெதுவாக ஒரு அமைதியான, உள்ளார்ந்த உறுதியாக மாற்றின. என் அச்சங்களையும் பாதுகாப்பின்மையையும் மனதிற்குள் ஒதுக்கி வைத்து, என் தந்தை சிறுவயதிலிருந்தே என்னுள் விதைத்திருந்த ஒழுக்கம், முயற்சி, சாதக மனப்பான்மை ஆகியவை — பயமும் குழப்பமும் இருந்தபோதிலும், மனதை அடக்கிக் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற ஓர் உள்ளார்ந்த உறுதியில் என்னை நிலைநிறுத்தின.
இன்று, அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, பணமும் வசதிகளும் நிறைந்த அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்தின் நீளத்தீவினுள் (Long Island), அமெரிக்காவின் மிக உயர்ந்த சமூக, அரசியல், நிதி வட்டாரச் செல்வந்தர்கள் கோடைகாலங்களில் தங்கும் புகழ்பெற்ற தெற்கு ஹேம்ப்டன் (Southampton) எனும் செழிப்புமிகு பகுதியில், பரந்து விரிந்த பசுமைத் தோட்டத்துடன் கூடிய ஒரு ஆறு படுக்கை அறைகளடங்கிய மாளிகையின் பின்புறத்தில் அமைந்த பெரும் நீலமேக வண்ண நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்து, இறையருளால் எவ்விதக் கவலையின்றி இங்கிருக்கும் என்னிடத்தில் எந்த மாறுதலும் இல்லை; ஆடம்பரம் ஏதுமில்லா எளிய, ஆசைகளடங்கிய வாழ்க்கையில், திருச்சியில் செய்த அதே செயலைத்தான் இன்றும் இங்கே செய்து கொண்டிருக்கிறேன் — ஆம்! இங்கே அமர்ந்தபடியே திருச்சிராப்பள்ளி தாயுமானவரின் சின்மயானந்த குருவை நாடிச் செல்கிறேன். வெளிப்புறச் சூழல்கள் மாறியிருக்கலாம்; ஆனால், உள்ளத்தின் தேடல் மாறவில்லை. உண்மையிலேயே நான் பாக்கியசாலி. இறைவனுக்கு இணையேதுமில்லை அல்லவா. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. இறையருள், தாய் தந்தையரின் ஆசிகள் அனைத்தும்.
எனது குரு, பூஜ்ய ஸ்ரீ ஓங்காரானந்த சுவாமிகளின் “ஆத்ம வித்யா” எனும் மெய்யறிவுக்கல்வித்திட்ட அருளுரைகளும், பூஜ்ய ஶ்ரீ ஸ்வாமி சித்பவானந்தரின் விளக்கங்களும் (1978ல் வெளிவந்த புத்தகம்), தாயுமானவரின் இந்த அரிய பாடல்களை மேலும் ஆழ்ந்து ஆராய வேண்டும் என்ற பேராவலை என்னுள் எழுப்பின. தினமும் சில மணி நேரங்களை ஒதுக்கி, அவற்றைக் கேட்டு, சிந்தித்து, குறிப்பெடுத்து வந்தேன். அந்த எளிய குறிப்புகளே பதிவுகளாக வளர்ந்துள்ளன.
இந்த பதிவுகள் என் அறிவை உலகிற்கு அறிவிப்பதற்கல்ல இதில் உள்ள சிந்தனைகளும் ஞானமும், குருமார்களின் அருளுரைகளின் தொகுப்பேயாகும். என்னுடையது என்று ஏதுமில்லை. என்றோ ஒருநாள், எங்கோ, அறியாமை என்னும் இருள்சூழ் வனத்தில் வழிக்குதவியாக ஒளியைத் தேடிடும் என்னைப் போன்ற யாரோ ஒருவருக்கு, மின்மினிப்பூச்சியின் ஒளிபோல இந்தத் தொகுப்பு உதவியாக அமைய வேண்டும் என்ற பணிவான எண்ணமே இந்த முயற்சிக்குக் காரணம்.
இந்த பதிவுகளில் உள்ள குறைகள் அனைத்தும் எனது புரிதலின் வரம்புகள் காரணமாக ஏற்பட்டவையே. அவற்றிற்காகக் குருமார்களின் மன்னிப்பை வேண்டி, இந்த பதிவுகளை அவர்களின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
श्रुति स्मृति पुराणानाम् आलयम् करुणालयम्।
नमामि भगवत्पादम् शङ्करं लोकशङ्करम्॥
ஜூலை 11 நாள் தொடங்கி, மாதம் ஒரு பாடலாக எடுத்து ஆராய்வோம் நாம் இனிவரும் பதிவுகளில்.
பின்குறிப்பு
இப்பதிவுகளின் ஆங்கில சுருக்கவுரையைக் காண, கீழ்காணும் வலைதளப் பகுதியைப் காணவும்.
Leave a comment