சங்கரனின் வைரக்கூடம் 10 – காரணம் அறிவாய்

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

நிலையற்ற இவ்வுலகில், நிலையாதவற்றை நன்கு அறிந்து, நிலையாமையை உணர்ந்து உள்நோக்கினால்தான், இல்லாதது ஒன்றில்லை, எல்லாமே நீயென்று சொல்லாமல் சொல்லிவைத்த பரம்பொருளை அறியும் ஞானம் நல்லோர் இணக்கத்தால் நமக்கு கிட்டும் என்பதனை ஆதி சங்கரர், முந்தைய ஸ்லோகங்கள் வழியாக அறிவிலிகளான நம் மூடமனதிற்கு எடுத்துரைத்தார்.

நம்மைப் போன்ற சாமானியர்களிடம் ஒருவர் நிலையானது மற்றும் நிலையற்றது என்ற ஆழ்ந்த தத்துவங்களை உணர வைக்க முயலும் போது, நமக்கு விருப்பமான, நமக்குள் இணந்து, நாம் எளிதில் பிடித்துக்கொள்ளக்கூடிய இரண்டு விஷயங்களையாவது சம்பந்தப்படுத்தி (இணைத்து) பேசினால் நமது கவனம் அந்த தத்துவங்களின் மீது நிலைக்கும். இது ஆசான்கள் கடைப்பிடிக்கும் ஒரு யுக்தி.

இவைகள்தான் காமம் மற்றும் செல்வம்; முந்தையது இயற்கையாகவே உள்ளுணர்வு (உடலியல் மற்றும் உயிரியல் தேவை) மற்றும் இரண்டாவது நமது உறவுகள் (சமூக ரீதியாக தூண்டப்பட்டவை) மூலம் நம்மிடம் இணைக்கப்பட்டுள்ளது.

ஆதி சங்கரர் இந்த இரண்டையும் எடுத்துக்கொண்டு, நமது அன்றாட வாழ்வில், பலன் இல்லையேல் பந்தம் இல்லை, பலன் இருக்கும் வரையே பந்தம் என்றும், காரணத்தை விட்டுவிட்டு விளைவுகளை மட்டுமே நோக்கமாக வைத்து வாழ்வது மடமை என்றும் நமக்கு புரிய வைக்கிறார், இந்த ஸ்லோகத்தில்.

வாருங்கள், சங்கரனின் வைரக் கூடத்தில் இவைகளை ஆராயலாம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

वयसि गते कः कामविकारः

शुष्के नीरे कः कासारः ।

क्षीणे वित्ते कः परिवार:

ज्ञाते तत्त्वे कः संसारः ॥१०॥

ஆதி சங்கரர்

தமிழ் ஒலி பெயர்ப்பு

வயஸி க3தே க: காமவிகார:

சு’ஷ்கே நீரே க: காஸார: |

க்ஷீணே வித்தே க: பரிவார:

ஜ்ஞாதே தத்வே கஸ் ஸம்ஸார: ||

தமிழ் மொழி பெயர்ப்பு

முதுமை வயதினில் காமம் எங்கே

நீர்வடி பின்னர் குளம்தான் எங்கே

செல்வம் குறைந்தால் சுற்றம் எங்கே

தத்துவ மறிந்தால் பிணியும் எங்கே

சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்

वयसि गते - வயஸி கதே , வயதானபின்பு, 

कः कामविकारः- க: காமவிசார - எங்கே சிற்றின்பம்

शुष्के नीरे - சுஷ்கே நீரே – நீர் வற்றிய பின்பு,

क: कासार: - க: காஸார:, ஏரி எங்கே இருக்கிறது?

क्षीणे वित्ते - க்ஷீணே வித்தே – செல்வம் போனபின்பு,

कः परिवार: - க: பரிவார: , யார் பின்தொடர்வார்?

ज्ञाते तत्त्वे - ஞாதே தத்வே- ஆத்மாவை உணர்ந்தவனுக்கு,

कः संसारः - க: சம்சார: , பிறவிப்பிணி/சம்சாரம் ஏது?

விளக்கவுரை

நேரடி பொருள்
முதிர்ச்சி அடையும்போது (அதாவது இள வயது போய் வயதாகும்போது) என்ன காம விசாரம்? ஜலம் வற்றின் பிறகு எங்கே தடாகம் (ஏரி)? தனமில்லதாகும் பொழுது எங்கே சுற்றத்தார்கள்? இதனை அறிந்தால் பிறவிப்பிணி எங்கே? 
விளக்கம்
முதல் மூன்று சொற்றொடர்களின் விளக்கம்

இளமையே இல்லாத நிலையில் உடலில் காமம் எப்படி வெளிப்படும்? இளமை கழிந்தால், காமம் இருக்க முடியாது. ஏனெனில் இளமை ஒரு காரணம், காமத்தின் வெளிப்பாடு ஒரு விளைவு. காரணம் இல்லாமல் போனால் விளைவு நிலைத்திருக்க முடியாது என்பது கருத்து. இளமை, காமம் இவைகளின் நிலையற்ற தன்மையும் ஸ்லோகம் 3, 7ல் விவாதிக்கப்பட்டது.

நமது செல்வம் நம்மிடம் இல்லாதபோது, நம்மைப் பின்தொடர்பவர்கள் எங்கே? இங்கு செல்வம் என்பது பணம், அதிகாரம், பதவி அல்லது சில திறமைகளைக் குறிக்கிறது. இந்த விஷயங்கள் இருக்கும் வரை மட்டுமே மக்கள் உங்களைப் காண்பார்கள், உங்களைப் பின்தொடர்வார்கள். காரணம் இல்லாதபோது, விளைவும் இருக்காது. இதை ஸ்லோகங்கள் 2 & 5ல் விரிவாகப் படித்தோம்.

நீர் நிரம்பினால் நீர்நிலைகளில் பறவைகள் கூட்டமாக வருவதும், தண்ணீர் வற்றியவுடன் மற்ற இடங்களுக்கு இடம்பெயரும் நாம் காணும் அன்றாட நிகழ்வினை சுட்டிக்காட்டி ஆதி சங்கராச்சார்யர் இந்த நிலையாமையை எடுத்துக்காட்டுகிறார்.

அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல
உற்றுழி தீர்வார் உறவு அல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

என்ற ஔவையின் பாடலும்,

குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே

கவிஞர் கண்ணதாசனின் இப் பாடலும் இதைத் தழுவியதே.
இந்த உவமான உவமேயங்களை வைத்து, இறுதி சொற்றொடரில், நமக்கு தத்துவங்களப் போதிக்கின்றார் ஆதி சங்கரர்.
இறுதி சொற்றொடரின் விளக்கம்
ஜ்ஞாதே தத்வே கஸ் ஸம்ஸார: - (ஆத்ம) ஞானம் கிடைத்தபிறகு ஏது ஸம்ஸாரம்? என்பது நேரடி பொருள். இதன் உட்பொருளில், இரண்டு தத்துவங்களை உள்ளடக்கியது இந்த சொற்றொடர்; சம்சாரம் (பிறவிப் பிணி), ஆத்ம ஞானம் (மெய்ப்பொருள் அறிவு). இவைகளை இப்பொது சுருக்கமாக அறிய முயலலாம். 

சம்சாரம் (பிறவிப்பிணி)

இந்த தத்துவத்தை அறிய ஒரு வினாடிவினா கேள்வியும் விடையும். இதோ!

உண்டதும் தீரும், உரிய காலத்தில் திரும்பி வரும். அது என்ன?

ஒன்று பிறப்பு; இன்னொன்று பசி. மணிமேகலை பசியை பிணி என்றே கூறுகிறது. பசிப்பிணி தீர்க்க அட்சயபாத்திரம் பெற்றாள் மணிமேகலை என்பது இலக்கியம். பசியானது உணவு உண்டதும் போய்விடும், ஆனால் சிறிது கால இடைவெளியில் திரும்ப வந்துவிடும்;அது போலவே பிறவியும் ஒருவகையில் பிணியே; ஏனெனில் இப்போது இருப்போம், இறப்போம். மீண்டும் பிறப்போம், மீண்டும் இறப்போம். அதனால் தான் பெரியவர்கள் பிறவியை பிணி என்றனர்

பிணி என்ற சொல்லுக்கு உரைநடையில் நோய், வியாதி என்ற பொருள் சொல்வோம். ஆனால் ஆன்மீகத்தில் உள்ள பிணி என்பதன் பொருள் வேறு. எப்படி? வியாதி நோய் போன்றவை மருந்து சாப்பிட்டால் தீரக்கூடியவை. ஆனால் பிணி என்பது தீராதது.

சம்சாரம் என்றால் என்ன? ஸ்வாமி விதிதாத்மானந்தா கூறுகிறார்

‘ஸம்யக் சரதி அஸ்மிந் இதி ஸம்ஸாரஹ’ என்று கூறுவர் வடமொழியில். சம்சாரம் என்ற சொல் சம் மற்றும் சாரத்தால் ஆனது. சர என்ற மூல வார்த்தையிலிருந்து உருவானது. சர என்றால் அசைவு, இயக்கம் என்று பொருள. சம்ய என்றால் மாறா அல்லது இடைவிடா என்று பொருள். அதாவது இடைவிடா இயக்கம் எனப்பொருள். இது என்ன வகையான இயக்கம்? பிறப்பு-இறப்பு-பிறப்பு எனும் இயக்கமே. இதனைத்தான் சம்சாரம் என்று கூறுகிறது மறைகள்.

“சம்சாரத்தின் அடிப்படை பிரச்சனை என்னையே நான் அறியாமல் இருக்கும ஒரு நிலையான நீரோட்டம்தான். நான் இப்போது இருக்கும் விதத்தில் திருப்தி இல்லை. இந்த நிலையை, நான் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை,இதனை பொறுத்துக் கொள்ளவும் முடியாது. எனவே, நானே ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக மாறுவதற்கான உடனடி உந்துதல் அல்லது தூண்டுதல் என்னுள் உள்ளது. எனவே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆவதற்கான முயற்சி அல்லது நடவடிக்கை என்னில் எழுகிறது. ஒரு ஏழை பணக்காரன் ஆக விரும்புகிறான், பலவீனமானவன் பலமாக மாற விரும்புகிறான், வலிமையற்றவன் வலிமையாக விரும்புகிறான், படிக்காதவன் கல்வி கற்க விரும்புகிறான், கிழக்கில் உள்ளவன் மேற்கு நோக்கிச் செல்ல விரும்புகிறான். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஏதோவொன்றாக மாற விரும்புகிறார்கள்; இந்தத் தேவை ஒருவரின் தற்போதைய நிலையில் உள்ள அதிருப்தியை பிரதிபலிக்கிறது. எனவே, மனிதனின் அடிப்படைப் பிரச்சினை, அவன் தன்மீது உள்ள நிலையான அதிருப்தியே. இந்த சிக்கல் ஏன் மனிதனில் எழுகிறது? இது தன்னை ஏற்றுக்கொள்ளாததன் விளைவாக எழுகிறது. நமக்குள் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருக்கிறது; இதுதான் சம்சாரம்” என்கிறார் சுவாமி விதித்தாத்மானந்தா.

ஆத்ம ஞானம் (மெய்ப்பொருள் அறிவு)

அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல் அதிகாரத்தில் திருவள்ளுவர், குறள் 355ல்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றுரைத்தார். இதற்கு, பரிமேலழகர் அவரது விளக்க உரையில், “யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும், அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது. (பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று)” என்கிறார்.

எவ்வித அறிவும் நிகழ்வதற்கு நான்கு அம்சங்கள் தேவை. இவை நான்கும் இன்றியமையாதவை.

1. அறிவு நிகழ்வதற்கு நிலைக்களனான அறிபவன். இவனை வடமொழியில் பிரமாதா என்பர்.
2. அறியப்படும் பொருள். இது பிரமேயம் எனப்படும்.
3. அறிவு வரும் வழி. இதனை பிரமாணம் என்பர்.
4. அறிவு. இது பிரமிதி எனப்படும்.

ஆத்ம ஞானம் எனும் மெய்ப்பொருளை அறிய இந்த நான்கிலும் நமக்கு தெளிவு வேண்டும்.

“உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”

என்ற திருமந்திரத்திற்கிணங்க, உடம்பு, உள்ளம், ஊண், சீவன், சிவன் என்ற தத்துவங்களை படிப்படியாக அறிந்துணருவதே மெய்ப்பொருள் அறிவு.

இந்த அறிவை அடைவதற்கு நான்கு அடிப்படையான, மிகவும் இன்றியமையாத தகுதிகள் ஒவ்வொருவருக்கும் தேவை. இதனை ஸாதன சதுஷ்டைய சம்பத்து என்பர் வடமொழியில். இவைகள் கீழ்வருமாறு:

1. பகுத்தறிவு (நிலையானவை, நிலையற்றவை எவை என்று அறியும் நித்ய அநித்ய விவேகம்),
2. மன உறுதி (நிலையற்ற பொருட்களின் மீதான பற்றின்மை எனும் வைராக்கியம்),
3. மறைகள் விதித்த விலக்கப்பட வேண்டியவைகளை மனதால் நாடாத, நினையாத சமாதிஷட்3கம்,
4. மனதிலுள்ள நிறைவின்மையிலிருந்து முழுமையாக விடுதலை வேண்டும் என்ற உறுதியான புத்தி எனும் முமுக்ஷுத்வம்.

ஆத்ம ஞானம் அடைவதற்கு விசாரம் என்கின்ற ஒரேயொரு பாதைதான் இருக்கிறது. உபநிஷத்தும், குருவும் ஆத்ம ஞானத்தை அடைய உதவும் பிரமாணங்கள். இவைகளை பயன்படுத்தி நான் யார்? (ஜீவன் சம்பந்தமான கேள்வி) பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த உலகம் எப்படி தோன்றியது? (ஜகத் விஷயமான கேள்வி) இதற்கு காரணமாக இருப்பவர் யார்? (ஈஸ்வரன் விஷய கேள்வி) எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது எது? என்ற கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அதற்கான பதிலை தேடி அடைவதே ஆத்ம விசாரம் செய்ய வேண்டியமுறையாகும்.

மறைகள், அதை உபதேசிக்கும் குருவின் மீதும் சிரத்தை இல்லாதவர்களுக்கு ஆத்மாவை புரிந்து கொள்வது கடினம்.

ஆத்மாவின் அறிவு எனும் உண்மை எப்போது தெரியும்? உண்மையைப் புரிந்துகொள்வதற்கான ஏணிப்படிகளை ஸ்லோகம் 9ல் விரிவாகப் படித்தோம். “நிர்மோஹத்வே நிச்சலதத்வா”, மனம் ராக த்வேஷங்களிலிருந்து விடுபட்டு, உண்மையைக் காணும் தெளிவான உணர்வைப் பெற்றால்தான் உண்மையை அறிய முடியும்.

இந்த தெளிவு, நல்லோர் இணக்கத்துடன், குருவின் உபதேசத்துடன், இறையருளால், இறையை வணங்குவதன் விளைவாக வருகிறது, எனவே “பஜ கோவிந்தம்” என்கிறார் ஆதி சங்கரர்.

ஆக, இந்த சம்சாரத்திலிருந்து விடுதலை என்றால், நாம் யார் என்பதை அறிந்து நம்மை நாம் உணர்வது. இந்த அறிவைத்தான் ஆதி சங்கரர் தத்துவம், உண்மை என்கிறார்.

தன்னைத் தான் உணரத்தீரும் தகையறு பிறவி என்பது
என்னைத் தான் மறையும் மற்றத் துறைகளும் இசைத்த வெல்லாம்
முன்னைத் தான் தன்னை ஓரா முழுப்பிணி அழுக்கின்மேலே
பின்னைத் தான் பெறுவது அம்மா நறவுண்டு திகைக்கும் பித்தோ

–கிட் கிந்தா காண்டம், கம்பராமாயணம்

பொருள்:-
ஒருவன் தன்னை அறிந்துகொண்ட அளவில் பிறவிப்பிணி நீங்கிவிடும் என்று வேதங்களும் மற்ற சாத்திரங்களும் சொல்லுகின்றன. இந்த மெய்யறிவைப் பெறாததால் பிறவி நோய்க்காளாகும் இந்த அழுக்குடலைப் பெற்றிருக்கிறேன் இத்தோடு நில்லாமல், போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்ற பழமொழிக்கு ஏற்ப கள்ளை உண்டு மனமும் மயங்குவது தகுமோ! (சுக்ரீவன் வருந்திச் சொன்ன பாடல் இது). குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வருத்தப்படும் சுக்ரீவனின் வாய் வழியாக இந்தப் பெரிய கருத்தை வலியுறுத்துகிறான்.

ஜ்ஞாதே தத்வே கஸ் ஸம்ஸாரஹ. ஆத்ம ஞான தத்துவம் அல்லது உண்மையை அறிந்தால், சம்சாரம் எங்கே என்கிறார் ஆதி சங்கரர்.

முடிவுரை

ஆதி சங்கரர் இங்கே சொல்வது காரணங்களையும் அதன் விளைவுகளையும் பற்றியது. ஸ்வாமி சின்மயானந்தா, ‘ஆத்ம விரிவு (Self Unfoldment) என்ற புத்தகத்தில், காரணம் மற்றும் விளைவு பற்றிய நான்கு விதிகளைப் பற்றி பேசுகிறார்.

1. ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. 2. காரணம் என்பது வேறு வடிவத்தில் உள்ள விளைவைத் தவிர வேறில்லை. 3. காரணம் நீக்கப்பட்டால், எந்த விளைவும் இல்லை. 4. காரணம் ஒரே நேரத்தில் மற்றும் விளைவில் உள்ளார்ந்ததாக உள்ளது.

இதை ஆழமாகச் சிந்திக்க முடிந்தால், எந்தப் பிரச்சனையையும் காரண மட்டத்தில் எப்படிச் சமாளிப்பது என்பதை நாம் உணர்வோம், அதனால் விளைவு ஒருபோதும் உருவாக்கப்படாது.

துன்பமே விளைவு. அறியாமையே காரணம். அறியாமையை விரட்டுவது ஞானம். அந்த ஞானமே பரம்பொருள் அறிவு. இதனை பரவித்யா என்பர்.

ஆதி சங்கரர் தனது முந்தைய ஸ்லோகங்களின் சாரத்தைப் பிழிந்து ரசமாக நமக்கு இந்த அற்புதமான ஸ்லோகத்தில் வழங்குகிறார். நாம் இதுவரை கற்றவைகளை ஒருங்கிணைத்து, இந்த ரசத்தைப் பருகி, அடுத்த உள்ளீட்டிற்குத் தயாராகி விடுவோம். அதுவரை……

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a comment