ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்துதி 26 – அண்ட வெளிப் பாய்

முகவுரை

இந்த மந்திரம், முந்தைய மந்திரத்தைப் போல் ஷ்வேதாஷ்வதர உபநிஷத் மந்திரத்தின் (6.19)  விளக்கமாக அமைகிறது. 

“யதா சர்மவதாகாசம் வேஷ்டயிஷ்யந்தி மாணவாஃ |
ததா தேவமவிஜ்ஞாய துஃகஸ்ய நிவ்ருத்திர்பவேத் || 6.19 ||”

ஆகாயம் எல்லா பொருள்களுக்கு ஆதாரமாக இருக்கும். அதை தோல் போன்று சுற்றி மூட முடியாது. அதுபோல் பரமாத்மா ஸ்வயப்ரகாசமாகவே எல்லா ஜீவராசிகளிலும் இருக்கிறார். அவரை உணராமல் (அவிஜ்ஞாய) துக்கநிவ்ருத்தி ஏற்படும் என நினைப்பது முரணானது. ஆக, “அவித்யை” (அஞ்ஞானம்)தான் துக்கத்திற்கும் பந்தத்திற்கும் காரணம். அதற்கு நிவ்ருத்தி ஏற்பட வேண்டுமானால் பரமாத்ம ஞானமே மார்க்கம் என்கிறார் ஆதி சங்கரர்.

இதனை இந்த மந்திரம் விரிவுபடுத்துகிறது.

ஸ்துதி 


यद्याकाशं शुभद मनुजाश्चर्मवद्वेष्टयेयुः
दुःखस्यान्तं तदपि पुरुषस्त्वामविज्ञाय नैति ।
विज्ञानं च त्वयि शिव ऋते त्वत्प्रसादान्न लभ्यं
तद्दुःखार्तः कमिह शरणं यामि देवं त्वदन्यम् ॥ २६॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

யத்யாகாஶம் ஶுபத மநுஜாஶ்சர்மவத்வேஷ்டயேயு:
து:கஸ்யாந்தம் ததபி புருஷஸ்த்வாமவிஜ்ஞாய நைதி ।
விஜ்ஞாநம் ச த்வயி ஶிவ ருதே த்வத்ப்ரஸாதாந்ந லப்யம்
தத்து:கார்த: கமிஹ ஶரணம் யாமி தேவம் த்வதந்யம் ॥ 26॥

தமிழாக்கம்


அண்டவெளிதனை தோற் பாயென அள்ளிச் சுருட்டிடுனும் 
அடைவதில்லை மானிடர் அல்லலுக்கு முடிவு உன்னறிவின்றி !
அவ்வறிவு அடைய இயலாது எவராலும் உன்னருளொன்றின்றி !
அல்லலுறும் அடியேன் யான் உனையன்றி வேறெவரிடமும்
அண்டிடுவனோ அடைக்கலம் நாடி சிவபெருமானே !! 26

சொற்களின் பொருள்

ஶுபத - நலமருள்வோனே 
ஶிவ - சிவபெருமானே
மநுஜா - மனிதர்கள்

ஆகாஶம் - ஆகாயம்
சர்மவத் - தோலைப் போன்று
யதி - ஒருவேளை
வேஷ்டயேயு: - சுருட்ட முடியுமெனில்
தத் அபி - அப்பொழுதும்கூட (அதிலும்)
த்வாம் - உம்மை
அவிஜ்ஞாய - அறியாமல்,
புருஷ: - மனிதன்
து:கஸ்ய - துன்பத்திற்கு
அந்தம் - முடிவை
ந யேதி - அடைவதில்லை
த்வயி ச - உம்மைப்பற்றிய
விஜ்ஞாநம் - மெய்யறிவு (வேதாந்த ஸ்ரவண, மனந, நித்த்யாஸனம்)
த்வத் - உம்முடைய
ப்ரஸாதாத் ருதே - அருளின்றி
ந லப்யம் - அடையப்படுவதில்லை

தத் - அத்தகைய
து:கார்த: - துன்பமுடையவனாகிய (நான்)
இஹ - இவ்வுலக வாழ்வில்
த்வத் அந்யம் - உம்மைத் தவிர வேறு
கம் - எந்த
தேவம் - தெய்வத்தை
ஶரணம் யாமி - சரணமடைவேன்

விளக்கம்

வானத்தைப் பாய்போல் (அக்காலத்தில் மர உரி எனும் தோலே பாய்) சுருட்டுவது முற்றிலும் முடியாத காரியம். இந்த மானிடவர்க்கம் அதையும் சாதித்து விட்டாலும் சாதித்து விடலாம். ஆனால் உன்னை அறியாமல் துக்கத்தை மட்டும் கடக்க முடியாது. உன்னை யறிவது என்பதோ உன் கருணையினாலல்லது கிடைக்கக் கூடியதல்ல. ஆதலால் துக்கத்தைக் கடக்க விரும்பும் நான் உன்னைச் சரணமடைவதைத் தவிர வேறு வகையறியேன். ஆதலால் உன்னருளைப்பெற உன்னையே சரணமடைகிறேன். வேறு யாரைச் சரணமடைய முடியும்?

ஒருவன் எவ்வளவுதான் கற்றறிந்தவனாக இருந்தாலும், இறைவனுடைய திருவருள் (பிரசாதம்) இல்லாமல் உண்மையான ஞானம் அவனுக்குச் சித்திப்பதில்லை. ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதற்கு ஏற்ப, அவனை அறிவதற்கும் அவனது அருளே!

முடிவுரை

இந்த ஸ்லோகம் பக்தியின் உச்சத்தைக் காட்டுகிறது. “இறைவா! நீயே ஞானத்தைத் தருபவன், நீயே அந்த ஞானத்தின் இலக்கு, நீயே என் துயரத்தைத் தீர்க்கும் மருந்தும் கூட” என்று அப்பய்ய தீக்ஷிதர் இதில் வேண்டுகிறார்.

தர்க்க ரீதியாகச் சொன்னால்:

• இலக்கு: துக்க நிவர்த்தி (துன்பம் நீங்குதல்).

• வழி: சிவ ஞானம்.

• ஞானத்திற்கான கருவி: இறைவனின் அருள்.

• முடிவு: சரணாகதி.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க ! 


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Unknown's avatar

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading