Here is my dedication to Lord Krishna; the Tamil translation of the ten Slokas of Dasakam 55 of Narayaneeyam.
நாராயணீயம் – பதிகம் 55 – காளிங்க நடனம்
நதிவாழ் நச்சுடை நாகம்தனை வெருட்டிட உறுதியிட்டு
நதிக்கரையில் நச்சுக்காற்றினால் நலிந்து மக்கிய இலைமிகு
கதம்ப மரம் ஏறினான் கருமைநிற மாயக் கண்ணன்….1
கொழுந்திலைத்தளிரென ஒளிமிகு கமலமலர்ப் பாதமுடன்
காழ் மர உச்சிக்கொம்பு ஏறி எழும்பித் தலைகீழ் பாய்ந்து
சுழிர்நிறை நதியில் வெகுஆழம் சென்றான் செல்லக் கண்ணன்..2
மூவுலகுச்சுமைதாங்கும் முகுந்தன் முக்குளித்ததும்
முழுநீரும் சுழன்று பொங்கி ஆர்பரிக்கும் ஓசையுடனே
மூழ்கடித்தே நதிக்கரையை வில் நூறுஅம்பு செல் தூரம்..3
ஆழ்சுழி நீர் பொங்கி எட்டுத்திக்கும் கரைபுரண்டோட
ஆர்ப்பரிக்கும் ஒசைகேட்டு எழு அரவரசன் காளிங்கன்
அடைந்திட்டான் நிலைகலங்கி சீற்றமுடன் கடுஞ்சினம்…4
முகடுபல நிறை கருமலைத் தொடரென பன்னாயிரம் படம்எடுத்து
திரள்வந்திழியுஞ்சாரலென அனல்மிகு தீப்பிழம்புடன் விடநீரும் கக்கும்
சினமிகு காளிங்கனை முன்நின்று கண்டான் மோகனக் கண்ணன்..5
கண்கள் அனல்கக்க கொடுவிடக்காற்று வெளிமூச்சாய் வந்திட
கடும்வெப்பம் சூழ கடித்திட்டான் காளிங்கன்! கடுவிடம் பயனற்றிடவே,
மறுகனம் சிக்கெனப்பற்றி சுற்றிவளைத்தான் சின்னக்கண்ணனை…6
கண்ணனைக் காணா கடுந்துயர் கொண்டு ஆநிரையும்
ஆயர்ரபாலகரும் நதிக்கரை சென்றனர் இழிசகுனம் பலகண்டு
ஆயர்பாடியில் ஆயரும் விரைந்தனர் யமுனை நதி நோக்கி….7
மாயவனைக் காணா மாளாத்துயர் கொண்டு மாண்டிடுவோமென
மக்கள் உறுதியிட்ட நேரம்தனில் மின்னலென அரவுப்பிடிவிடுத்து
குறுநகையுடன் நதி வெளி உதயமானான் நந்தகுமாரன்….8
சின்னஞ்சிறுபதங்கள் சிலம்பொலிக்க கைவளை காப்பு குலுங்க
சிறு எழில்மென்மலர் பாதங்கள் பெரு ஐதலைநாக மகுடமேற
சிறப்புடனே ஆனந்த நடனம் ஆடினான் அச்சுதனாம் நாராயணன்…9
மகிழ்நீர் சொரி ஆயர்குழாம் நடனமாட, முனியோர் கரியவனின் துதிபாட,
விண்ணவர் மலர் சொரிந்து மகிழ, ஜதியுடன் பதம் சேர்த்து நடனமாடும்
குருவாயூரப்பனே! என்னுள் உறை மாளாத் துயர்நீக்கி அருள்வாயே!..10