
தமிழ் ஒலித் தொடர் பதிவு இணைப்பு (Link to the Tamil Podcast)
இன்றய காலக் கட்டத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை, இரு வகையாகப் பிரிக்கலாம். 1. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். 2. தமிழ் எழுத, படிக்க தெரியாது; ஆனால் பேச முடியும்; அடுத்தவர் பேசினால் புரிந்து கொள்ள முடியும்.இந்த இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவருக்காக, இந்தப் பதிவின் ஒலித் தொடர் பதிவை (podcast) கீழ்காணும் இணைப்பில் கேட்கலாம்.
https://soundar53.substack.com/podcast
ஏன் பிறந்தாய் மகனே ? ஏன் பிறந்தாயோ? ……….. நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே!
கவிஞர் கண்ணதாசன், திரைப்படம்-பாகப்பிரிவினை
63 வருடங்களுக்கு முன் வந்த பிரபலமான தமிழ் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள். வருடங்கள் பல கடந்தாலும் இக்கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதையும் வருட்டி எடுக்கும் (இடர்கள் நம்மை சூழும் போதாவது) என்றால் அது மிகையாகாது. இந்த திரை இசைப் பாடலில் அடங்கிய தத்துவத்தை இப்போது ஆய்ந்திடலாம்.
மனிதப் பிறவியின் நோக்கம்
மனிதப் பிறவியின் நோக்கம் என்ன? இவ்வினாவிற்கு இப்புவியிலே இன்றும் எண்ணற்ற ஆன்மீகவாதிகள், துறவிகள், முனிவர்கள், தனிநபர்கள், நன்னெறி தத்துவம் பற்றிய எழுத்தாளர்கள், மற்றும் பலர் விடையளிக்க முயன்று கொண்டு வருகின்றனர். இவர்கள் வேறுபட்ட பாதைகளில், மாறுபட்ட கருத்துக்களுடன் ஆராய்ந்த போதிலும் அனைவரும் ஒப்பும் ஒரு உண்மை:
“ஆறறிவு பெற்ற மானிடர் அனைவருமே துன்பம் தவிர்த்து நிலையான இன்பமடையவே அவர்தம் பணிகளின் குறிக்கோளாக வைத்து அவரவர் பணிகளைப் புரிகின்றனர்”
என்பது. இதில் ஐயமேதுமில்லை.
வட மொழியில் வாழ்வின் பொருள் என்பதை புருஷார்த்தம் என்பர். புருஷார்த்தம் என்பது தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எனபவைகளுக் குறிக்கும். இதனையே அறம், பொருள், இன்பம், வீடு என தமிழில் கூறுவர்.
அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்பதுவே இவ்வழி முறையாகும். அதாவது, முதலில் தர்மத்தை அறம் என்று சொல்லி, அதைத் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து, அப்புறம் இந்தச் சின்ன சின்ன இன்பங்களை எல்லாம் விடுத்து, இறுதியில் நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே வாழ்வியல் முறை எனும் நான்கு புருஷார்த்தங்கள்.
பாரதியாரின் எளிமையான வாக்கில் இந்நான்கும் இதோ:
தன்னைக் கட்டுதல் அறம்
பிறர் துயர் தீர்த்தல் பொருள்
பிறர் நலம் நாடுதல் இன்பம்
உலகு காக்கும் ஒருவனைப் போற்றுதல் வீடு.
மனிதப் பிறவியின் நடப்பு
அந்த ஆனந்தத்தை அடைய முயலும் நம் அனைவரின் வாழ்க்கையிலும் அன்றாடம் இடைவிடாது, முக்கியமான மூன்று பெரும் தத்துவங்கள் தொடர்பு கொள்கின்றன. அவை, மனிதன், உலகம் (படைப்பு), இறைவன்.
இவைகளை வாழ்வில் உபயோகித்து (அனுபவித்து) , வினைகள் புரிந்து, “பொருள்” தேடி, “இன்பம்” துய்த்து, களைத்து, முடிவில்
“நாம் வந்த கதை என்ன? நாம் கொண்டது என்ன, கொடுப்பது என்ன? மன்னைத் தோண்டி தண்ணீர் தேடும் நாம், நம்மைத் தோண்டி ஞானம் கண்டோமா? இல்லை, நம் மனமெங்கும் தெருக் கூத்து, பகல் வேஷமா?”
என்றெல்லாம் பிதற்றி, தன்னை அறிவதே தனது பிறவியின் நோக்கம், அதனை அறிய முயலாமல் வாழ்நாளை வீனாக்கினோமே என துன்பமுற்று, வருந்தி மடிகிறோமே. இது தானே நடப்பு.
தாயுமானவர் இந்த நடப்பைத்தான் இப்படி கூறுகிறார்:
“ஆசைக்கோரளவல்லை அகிலமெல்லாம் கட்டி
ஆளினும் கடல்மீதிலே ஆனை செலவே நினைவர்,
அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநாளிருந்த பேரும் நிலையாகவேயினுங்
காயகல்பந்தேடி புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாகடியும் உள்ளதே போதும்
நான் நான் எனக்குளறியே ஒன்றைவிட்டு ஒன்றைப்பற்றி
பாசக்கடற்குள்ளே வீழ…”
இன்பம் பயக்கா இருள் – ஏன்?
சரி, நமது வாழ்க்கை அனுபவம், நம்மை, நமது வாழ்வின் பொருளை நோக்கிச் செலுத்தவில்லையே! ஏன்?
இந்தக் கேள்விக்கு, இதோ! மூன்று பதில்கள் - கேள்விகள் வடிவில்:
1. அனுபவிக்கின்றவனை அனுபவிக்காமல், அனுபவிக்கப்படுவைகளை அனுபவிக்க முயலும் அறிவிலிகளாக அலைகிறோம் நாம்; அல்லவா! (ஆஹா! நம்ம மொபைல் ஃபோனில் இருந்து நம் சொந்த மொபைல் எண்ணயே அழைக்கிறேனே! எப்படி பதில் கிடைக்கும்? அது போல இருக்கே இந்தக் கேள்வி).
2. அறிவைத் தரும் கருவிகளின் துணை கொண்டு, அறியப்படும் பொருள்களை அறியும் நம்மை, எந்த அறிவைத் தரும் கருவிகளைக் கொண்டு அறிவது என்று என்றேனும் ஆராய்ந்தோமா?
3. “நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குதற் சோதி நான்”
என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி கூறிய “நான்” ஆக இல்லாமல், “இன்பமாகிய நாம், தம்மை இன்பெமென அறியாமல், துன்பத்தின் பின்னால், துன்பத்தில் இன்பம் இருக்கின்றதென்று ஏன் ஓடிக்கொண்டிருந்தோம்”.
கேள்விக்கு என்ன பதில்?
சரி. குழம்பி இருக்கும் நம்முடைய கேள்விகளுக்கு பதில் கூறாமல், கேள்விகளையே திருப்பி வைத்தால், நாம் என்ன செய்வது? எங்கு செல்வது? - நம் அனைவரின் சிந்தனை, அல்லவா!
சுலபம். வாருங்கள், நம் அனைவரையும் ஒரு கொல்லன் பட்டறைக்கு கூட்டிச் செல்லலாம். அங்கே நமக்கு விடைகள் கிடைக்கும். ஆனால், ஒரு நிபந்தனை! அங்கே ஆசாரி நமக்கு 31 சம்மட்டி அடிகள் கொடுப்பார். அவைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஒன்று மட்டும் நிச்சயம்/உத்தரவாதம். அந்த முப்பதொன்று அடிகளை, கொல்லன் பட்டறையில் இரும்பு வாங்கும் அடிகளாக நாம் ஏற்றிட்டால், கனிந்து மாறிடும் இரும்பு போல,
இருள் நீங்கி இன்பம் பயக்கும்
மருள் நீங்கி மாசறு காட்சி
நமக்கு கிட்டி, நாம் மாறுவோம். அதில் சந்தேகமே இல்லை. சம்மதமா?
பயம் தவிர்த்து, அந்த உத்தரவாதத்துடன் வாருங்கள் ஆதி சங்கரனின் பட்டறைக்கு.
வருக! வருக! மாதம் ஒருமுறையாவது, சங்கரனின் பட்டறைக்குச் செல்வோம், சம்மட்டி அடிகள் வாங்குவோம். பின், நமது நிலையை உணர்வோம்.
சங்கரனின் சம்மட்டி அடி 1 - நவம்பர் 11ம் தேதியில் - கற்ற கல்வியும் சுற்றி விழும் காலன் கயிறும் - யாக்கை நிலையாமை - அடுத்த பதிவில். அதுவரை
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க
முக்கிய குறிப்பு: இப்பதிவும், வரும் தொடர் பதிவுகள் அனைத்தும், பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காரானந்தாவின் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்டு, சுவாமிஜியின் சொந்த விரிவுரைகளில் இருந்து அடியேன் அறிந்து கொண்டது. இப்பதிவுகளில் காணும் கல்லாப் பிழை, கருதாப் பிழை, எல்லாப் பிழைகளுக்கும் அடியேனின்அறியாமையே காரணம். அவைகளை சுட்டிக்காட்டின், அடியேனின் அறியாமையைக் களைய உதவும். நன்றி.

Excellent & interesting introduction. Pujaya Shri Swami Omkarananda was
great Scholar in Sanskrit & Tamil
We are delighted to learn from you Adi Sankara Teachings .
We Wish Your Good Efforts Great Success
Thank you Sir 🙏