
தமிழ் வலைதல ஒலிப்பதிவுத் தொடர் இணைப்பு (Tamil Podcast Link)
https://soundar53.substack.com/p/3#details
முகவுரை
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்ற இரண்டு முக்கியமான தத்துவங்களை இரண்டு செயல்முறைகளாகப் பெற்ற நாம், இப்பொழுது சங்கரனின் வைரக் கூடத்தில், மூன்றாவது செயல்முறைக்குத் தயாராகுவோம்.
பொதுவாக, நாம் ஆசைப்படும் பொருட்களின் மீதுள்ள பற்று (முறையற்ற ஆசைகள் என்றும் கூறலாம்) விலக வேண்டும் என்றால், அந்த ஆசைப் பொருட்களில் உள்ள குறைபாடுகளைப் பார்ப்பது ஒரு சக்திவாய்ந்த யுக்தியாகும். இதனை வடமொழியில் விஷய தோஷ தர்சனம் என்பர். இந்த யுக்தியை ஆதி சங்கரர், இந்த மூன்றாவது செயல்முறையில் (ஸ்லோகத்தில்) கையாளுகிறார்.
கம்பனின் கவிதையும், வாலியின் கேள்வியும்
இந்த மூன்றாவது செயல்முறையைக் காணும் முன், கம்பன் காட்டும் கவிதைச் சித்திரத்தைக் காணலாம்:
வார் குலாம் முலை, வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது, பிறங்கு முகத்தினான்,
தேர்கிலான் நெறி; அந்தரில் சென்று, ஒரு
மூரி மா மத யானையை, முட்டினான்!
வார் குலாம் முலை – ஒரு அழகியின் கச்சை அணிந்த மார்பங்களின் மீது
பேர்கிலாது வைத்த கண் வாங்கிட – வைத்த கண்களை எடுக்க முடியாமல் அதையே பார்த்துக் கொண்டு நடந்த
பிறங்கு முகத்தினான் – விளங்குகின்ற முகத்தை ஒரு இளைஞன்
நெறி தேர்கிலான் – தான் செல்ல வேண்டிய வழி தெரியாமல்
அந்தரில் சென்று – குருடனைப் போலச் சென்று
ஒரு மூரி மா மதம் யானையை – வலிமை கொண்ட ஒரு மத யானை மேல் சென்று
முட்டினான் – மோதினான்.
அதாவது கச்சை அணிந்த பெரிய மார்பகங்களைக் கொண்ட அழகி அவள்!அவளை வைத்த கண் விடாமல் பார்க்கிறான் அந்த இளைஞன்.அவள் நடக்க, இவன் நடக்க, அவளையே பார்த்து நடந்து கொண்டிருந்த இளைஞன் தான் செல்ல வேண்டிய வழியை விட்டுக் குருடன் நடந்தது போல நடந்து ஒரு வலிமையுள்ள பெரிய மத யானையின் மீது போய் முட்டினான்.ஆவென்று அலறினான். மற்றவர்கள் சிரித்தார்கள் – நடந்தது என்ன என்று தெரிந்து கொண்டு.
இக்கவியை மனதில் கொண்டோ என்னவோ, கவிஞன் வாலி இப்படி கேட்டான்.
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போகும் பாதையை மறந்து போகலாமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆதி சங்கரர் உள்ளங்கை நெல்லிக் கனி போல, “உறைக்கும்” உண்மையை எடுத்துரைத்து, நமக்கு விடையளிக்கிறார்.
சங்கரனின் பதில் – சமஸ்க்ருத ஸ்லோகம்
नारीस्तनभरनाभीदेशं
दृष्ट्वा मा गा मोहावेशं |
एतन्मांसवसादिविकारं
मनसि विचिन्तय वारं वारं ||
தமிழ் ஒலிபெயர்ப்பு (Tamil Transliteration)
நாரீ ஸ்தனப4ர நாபீ4 தே3ச’ம்
த்3ருஷ்ட்வா மாகா3 மோஹாவேச’ம் |
ஏதன் மாம்ஸ வஸாதி3விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம் ||
தமிழ் மொழிபெயர்ப்பு (Tamil Translation)
மகளிர் மார்பகம் மேகலை உறைவிடம்
மயங்கியே கண்டு மனதினில் மோகம்
மாமிசம் கொழுப்புடன் மாறிடும் தேகம்
மனதில் சிந்தனை வேண்டும் வேண்டும்.
ஸமஸ்க்ருத சொற்களின் பொருள்
नारीस्तनभरनाभीदेशं - नारी स्तनभर नाभीदेशं - நாரீ, ஸ்தனப4ர, நாபீ4 தே3ச’ம் - பெண், மார்பகம், மேகலை இடை வெளி
दृष्ट्वा मा गा मोहावेशं - दृष्ट्वा मा गा मोह आवेशं - த்3ருஷ்ட்வா மாகா3 மோஹ ஆவேச’ம் - பாரத்து/கண்டு, அடையாதே/கொள்ளாதே, மோகம்/மயக்கம், உணர்ச்சிவசப்படுதல்,
एतन्मांसवसादिविकारं एतन्मांसवसादि विकारं ஏதன் மாம்ஸவஸாதி3 விகாரம் - இவை மாமிசம், உவர்நீர் முதலான, மாற்றம்
मनसि विचिन्तय वारं वारं - மனஸி விசிந்தய வாரம் வாரம் - மனதில் சிந்திப்பாய் மீண்டும் மீண்டும்
விளக்கவுரை
ஆணினத்தவர்க்கு பெண்ணின் மார்பு (கொங்கை)யும், மேகலை அணியும் இடைப்பகுதியும் காம இச்சையை தூண்டிவிடும். இந்த இச்சை இயற்கை இயல்பு.
உண்மையில், அவ்விரு உடலுறுப்புகள் (அனைத்து உடலுறுப்புகளுமே) வெறும் மாமிசம் மட்டும் உவர்நீரின் (கொழுப்புகளின்) உருமாற்றமே; அவைகளனைத்தும் நிலையானவைகள் அல்ல என்பதால் வெளித்தோற்றத்தால் நிரந்தர இன்பம் அடைய முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
இந்த ஸ்லோகத்தின் சாரம் காம மோஹம் தவிர்த்தல். அதாவது உடல்ரீதியான காம இச்சைகள களைவது.
பொதுவாகப் புறப்பகைகளை வெல்லுதல் ஆண்மை என சமூகத்தால் மதிக்கப்படுகிறது. ஆனால், அகப்பகையான காமம், வெகுளி போன்றவற்றை வெல்லுதல்தான் மிகவும் கடினமான ஒன்று. அதனால் முறையற்ற காமத்தை வெல்லுதல், மதிக்கத்தக்க பேராண்மை என்று பாராட்டப்படுகிறது.
ஆண்மையை விட பெரிய சொல் பேராண்மை. அத்தகைய பேராண்மை உடையவன், பிறர் மனைவியை நோக்காது இருப்பவன்.
தமிழ் இலக்கியத்தில் பேராண்மை
திருக்குறள்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு[திருக்குறள், அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை ]
என்ற குறள் இந்த கருத்தை ஒட்டியதே.
சீவக சிந்தாமணி
சீவக சிந்தாமணியில்
“பெரியவாள் தடங்கண் செவ்வாய்ப் பிறர்மனை பிழைக்கும் மாந்தர் ….. ஆண்பிறந்தார்கள் அன்றே” இந்தக் கருத்தினைப் பிரதிபலிக்கிறது.
கம்ப ராமாயணம்
கம்பனும் இப்பேராண்மையைப் பற்றி கூறுகையில்,
இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகையுற நாண் இலன்,
பச்சை மேனி புலர்ந்து பழிப்படூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ. --- கம்பராமாயணம், பிணிவீட்டு படலம்.
ஆசையின் இயல்பினால் அயலார் மனைவியை விரும்பி (அதனால்) எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்க, வெட்கமற்றவனாய் பசுமையான உடம்பு உலரப் பெற்று பழிப்பை அடைகின்ற இழிவான இவ்வகை ஆண் தன்மையும், சிறந்த குணங்களில் ஒன்றாகச் சேருமா? (சேராது என்றபடி) என்றான்.
நாலாடியார்
நாலடியார், இந்த நற்குணமில்லாருக்கு ஏற்படும் விளைவினைச் சுட்டிக்காட்டி இதே கருத்தினை எடுத்துரைக்கிறார்
செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ –
உம்மைவலியாற் பிறர்மனைமேற் சென்றாரே,
இம்மைஅலியாகி ஆடிஉண் பார்.
நல்லகுணமின்றி, கீழினத்தாரோடு சேர்ந்து, பெரியமார்களை உடைய பெண்களின் தோளிலே முயங்க விரும்பி, ஒருவன் இப்பிறப்பில் தனக்கு உள்ள செல்வம், வலிமை முதலியவற்றால் மற்றவர் மனைவியரை கூடுவாராயின், மறுபிறப்பில் அவர்கள் ஆணும் பெண்ணுமில்லா அலியாகி கூத்தாடி வயிறு பிழைக்க நேரிடும்.
பட்டினத்தார் பாடல்
மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே
மறைகள்
ஒருவரின் மனைவியைத் தவிர மற்ற பெண்களைப் பொறுத்தவரை மற்றும் ஒருவரின் சொந்த மனைவியுடன் சரியான நடத்தையைப் பேணுவதில் இந்த கருத்து பொருந்தும். மேலும், சாஸ்திரங்களில் உள்ள மற்ற அறிவுரைகளும் பெண்களுக்கும் இணையாகப் பொருந்தும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
நமது மறைகள், உண்மையில் மற்றொருவரின் மனைவியை தாயாகவும், மற்றொருவரின் உடைமைகளை அழுக்காகவும், எல்லா உயிர்களையும் தன்னைப் போலவும் பார்க்கும் ஒருவரே தீர்க்தரிசி/ஞானி என்று கூறுகின்றன. (मातृवत् परदारान्स्च परद्रव्याणि लोष्टवत् आत्मवत् सर्वभूतानां यो पश्यति सो पश्यति Maatrvat paradaaranscha paradravyaani loshtavat, aatmavat sarvabhootaanaam yah pasyati sah pasyati).
முடிவுரை
இரண்டு உடலுறுப்புகளை எடுத்துக்காட்டி, இருளென உறையும் நம் அறியாமையை எளிதினில் அறிய வைப்பது, இந்த மூன்றாவது செயல்முறை. உண்மை என்றுமே உறைக்கும் என்பதை உணர வைக்கும் சொற்கள். உள்வாங்கி உணர்வோம் உட்கருத்தினை. நம் உடல், மன, புத்தி வளாகத்தை உறுதிப்படுத்தி, அடுத்த செயல்முறைக்குத் தயாராகுவோம். அதுவரை……..











