
வலை ஒலிப் பதிவு (Podcast) இணைப்பு
https://soundar53.substack.com/p/1#details
ஒளிப்பதிவு இணைப்பு
முகவுரை
சங்கரனின் பட்டறைக்கு வருகை தந்து, முதல் சம்மட்டி அடி வாங்கிட ஒப்பிய உங்களனைவருக்கும் மிக்க நன்றி.
இறை வணக்கம் போல் துவங்குகிறார் ஆதி சங்கரர் அவரது முதல் சம்மட்டி அடியை.
“கோவிந்தனைத் துதி; உனது மரண காலத்தில் உன்னை ஏட்டறிவு காத்திடாது”. இது தான் இந்த பண்ணின் (அடியின்) சாரம்.
விழும் முதல் அடியை பார்க்கும் பொழுது, மெதுவான அடி போலத்தான் தெரியும். பொதுவாக, விழுந்த பின்தான் தெரியும் அடியின் வலி. அதைப் போல, இந்த அடியின் வலிமையை உணர, பண்ணின் உட்கருத்தை ஆராய வேண்டும்.
வாருங்கள், விழும் அடியை ஆராயலாம். சங்கரனின் இந்த அடிக்குப் பெயர் யாக்கை நிலையாமை.
சமஸ்க்ருத ஸ்லோகம்
भज गोविन्दं भज गोविन्दं,
गोविन्दं भज मूढ़मते।
संप्राप्ते सन्निहिते काले,
न हि न हि रक्षति डुकृञ् करणे॥१॥
தமிழில் ஒலி பெயர்ப்பு
ப4ஜ கோ3விந்த3ம் ப4ஜ கோ3விந்த3ம்
கோ3விந்த3ம் ப4ஜ மூட4மதே |
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி ‘டு3க்ருஞ் கரணே’ ||
தமிழில் மொழிபெயர்ப்பு
துதி கோவிந்தனை துதி கோவிந்தனை
கோவிந்தனைத் துதி மூட மனமே
விதித்திட்ட வேளையில் காயம் அழியும்
காத்திடுமோ உனை வாழ்வியல் பாடம்.
விளக்கவுரை
பஜ
“பஜ“ என்ற சொல்லிற்கு நினை, பூசி, துதி என்ற பொருட்கள் உண்டு. பஜனம் என்பதற்கு சேவை என்ற பொருள்.
இந்தப் பண்ணில் ஆதி சங்கரர் இந்தச் சொல்லையும், கோவிந்தம் என்ற அடுத்த சொல்லையும் மூன்று முறை பயன்படுத்துகிறார்.
ஏன் மூன்று முறை? அதற்கு முக்கியத்துவம் உள்ளதா?
உள்ளது. ஏன் என்பதற்கான சுருக்கமான விளக்கம் இங்கே.
மூன்று வகையான தடைகளை நீக்குவது அல்லது மூன்று வகையான துன்பங்களை (துக்கங்களை) நீக்குவது என்பது வாழ்க்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று நமது மறை நூல்கள் நமக்குச் சொல்கின்றன.
மூன்று வகை துன்பங்கள் வெளிப்படையாக வரையறுக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு வர்ணனையாளரும் பின்வரும் மூன்று வகையான துன்பங்களைக் குறிக்கின்றனர்:
1. ஆதிதைவிகா (தெய்வீக தோற்றம்) - கடவுளின், இயற்கையின் செயல் காரணமாக வரும் துன்பங்கள். இயற்கையின் சீற்றத்தால் விளையும் துக்கங்கள்.
2. ஆதிபௌதிகா (உடல், ஜட உயிரினங்களில் உருவானது) - வெளிப்புற தாக்கங்கள் காரணமாக வரும் துன்பங்கள்
3. அத்யாத்மிகா (நாமே உருவாக்கியது) - உடல் நோய்கள், மனப்பிரச்சனைகள் (ஆசை, கோபம், பயம், வெறுப்பு, பொறாமை, மோகம், சோகம், அவமானம், காழ்ப்பு…..) முலம் வரும் துன்பங்கள்
இம்மூவகை துக்கங்கள் (தாபத்ரையம்) நீங்கிட இறை வழிபாட்டில் மூன்று முறை முறையிடுதல் மரபு.
கோவிந்தம்
இந்த சொல் கோ, விந்தம் என்ற இரு சொற்களடங்கியது. முதலில் கோ என்ற சொல்லின் பொருளைக் காண்போம்.
1. “கோ” என்றால் - பசு, உயிரினம் (சைவ சித்தாந்தத்தில் பசு என்பது உயிரினங்கள்/மனிதர்களைக் குறிக்கும்), கால்நடை என்று பொருள்.
2. விந்தம் என்றால் - பேணுதல் (காத்தல்), அறிதல்
பசுக்களை/உயிரினங்களை அறிந்து பேணிக் காப்பவன் கோவிந்தன்.
காக்கும் கடவளாம் திருமாலுக்குப் பயன்படுத்தப்படும் அடைமொழிகளில் ஒன்று கோவிந்தா. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 187, 539 வது நாமங்களாக இந்த சொல் உபயோகிக்கப் படுகிறது. இவ்வார்த்தை இரண்டு விளக்கங்களை வழங்குகிறது.
1. முதலாவது வேதங்களின் மூலம் அறியப்பட்டவர். பிரம்மசூத்திரம், வேதங்கள் மூலம் மட்டுமே பிரம்மம் உணரப்படுகிறது என்று கூறுகிறது (गोपिः वेत्ति इति गोविन्दः gopi: vEthi iti gOvinda:).
2. இந்த வார்த்தையின் இரண்டாவது விளக்கம், உயிர்களை அறிந்தவர் (गाः विन्दति इति गोविन्दः கா: விந்ததி இதி கோவிந்த:). இல்லாததொன்றுமில்லை, எல்லாமே அவன் என்று நீக்கமற நிறைந்திருப்பதால், இடம், காலப் பரிமாணங்களைக் கடந்து, உயிரினங்களையும் அவற்றின் செயல்களையும் அறிந்திருப்பவர் கோவிந்தன்.
ஆக, ப்ரம்மம், பரம்பொருள் என்ற தூய இருப்பு, தூய உணர்வு, தூய இன்பம் தான், கோவிந்தன் என்ற சொல்லுக்குப் பொருள்.
மூட மதே
மனிதர்களாகிய நாம் மற்ற உயிரினங்களை விட மிக உயர்ந்த மனமும் புத்தியும் உடையவர்களாக இருக்கிறோம். வேண்டியது, வேண்டாதது, நல்லது, கெட்டது, என்று பகுத்தறியும் தன்மை நம்மிடம் மட்டுமே உண்டு. வெறும் உள்ளுணர்வால் (உயிரியல் மற்றும் உடலியல் தூண்டுதல்களால்) மட்டும் நாம் வாழ்வதில்லை; உயர்ந்த குறிக்கோள்களால் நிர்வகிக்கப்படுகிறது நம் வாழ்வு.
ஆயினும்கூட, அன்றாட வாழ்வில் இந்த மனம் நம்மை எங்கெலாம், எப்படியெல்லாம் “ஒன்றை விட்டு ஒன்று பற்றிப் பாசக் கடலக்குள் வீழ்த்திட” அழைத்துச் செல்கிறது. மனதைப் பற்றிய இந்தப் பாமரனின் விளக்கத்தை, கீழ்காணும் வலைப் பதிவில் காண்க. https://soundar53.substack.com/p/-6-
முந்தைய பதிவில் கூறியபடி, அன்றாட வாழ்வில் நடப்பு வேறு. அறிவில்லாத ஒன்றை அறிவு என்றும், தெளிவிலாத ஒன்றை தெளிவு என்றும், நிலையற்றவற்றை நிலையானவை என்றும், முழுமையற்றவற்றை முழுமையானவை என்றும் எண்ணும் நம் மனதை, ஆதி சங்கரர் “மூட மனமே” “அறிவிலியே” என்று அழைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நேரடி மொழி பெயர்ப்பு என்பது “குறித்த நேரம் வந்திடினில்” என்று பொருளாகும். யாருக்கு, யார் குறித்த, எந்த நேரம்? நமக்கு, காலன் குறித்த, மரண நேரம் என்பது நேரடி விடை. நாட்கள் கடக்க கடக்க, காலன் வரும் நேரமும் நெருங்குகிறது. அது சரி, மரணம் யாருக்கு?
“மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆத்மா மரணம் எய்யாது. மறுபடிப் பிறந்திருக்கும். மேனியைக் கொல்வாய். நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி சென்றுதான் தீரும் ஓர் நாள்” என்று போர்க்களத்தில் அறிவுரை கூறினானே பாரத்தசாரதியான இறைவன் கண்ணன்.
ஆக உடலினுள் உயிர் ஒண்டுக் குடித்தனம். வாடகைதான் வாழ்வு.
நஹி நஹி ரக்ஷதி
“காப்பாற்றாது, காப்பாற்றாது” என்பது நேரடி மொழிபெயர்ப்பு. யாரை, எப்போது, எது காப்பாற்றாது?
விளக்கம் இதோ:
யாரைக் காப்பாற்றாது - “என்றும் அழியும் இக்காயம், மலம் ஊறித் ததும்பும் இவ்வுடலை மெய்யென்று கொண்டு பிழைத்திடும்” மூட மனமுடை அறிவிலிகளாகிய நம்மை
எப்போது காப்பாற்றாது - விதித்திட்ட வேளையில் - அதாவது “காலனின் பாசக் கயிறு நம்மைச் சுற்றி விழும்” நேரம். எமனின் ஓலை நமை அடையும் நேரம். உடலை விட்டு உயிர் பிரியும் நேரம்.
எது காப்பாற்றாது - இதற்கு விளக்கம் அடுத்த சொல்லில்
டுக்ருங் கரனே
டுக்ருங் என்பது சமஸ்கிருத இலக்கணத்தில் (வ்யாகரந) கர்ணே (கரனே) என்ற செயலைக் கொண்ட ஒரு வேர் சொல். இலக்கண விதிகளை மனனம் செய்வது என்று பொருள்.
வேதங்கள் மற்றும் வேதாந்தம் படிக்க சமஸ்கிருத இலக்கண அறிவு மிகவும் விரும்பத்தக்கது. பெரிய இலக்கண அறிஞர் பாணினி போன்ற பல அறிஞர்கள் வடித்த சூத்திரங்களை பாட, மனப்பாடம் செய்ய, அறிஞர்கள் இலக்கணத்தில் புலமை பெறுவதற்கான வழிகளில் ஒன்று, "டுக்ருங் கரனே".
இந்தப் பண்ணில் நாம் இதனை வெறும் ஏட்டுக்கல்வி என்று மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், இன்னும் சற்று விரிவான நோக்கத்தில் அறிந்து கொள்ள வேண்டும்.
அறிவு (வித்யா) இரு வகை: 1. இறையறிவு (மெய்ப்பொருள் அறிவு). இதனை பர வித்யா என்பர். 2. இறையறிவில்லா மற்ற அனைத்து அறிவு. இதனை அபர வித்யா என்பர். அதாவது அன்றாட வாழ்வில், நமக்கு வரையறுக்கப்பட்ட (விதிக்கப்பட்ட) உலகியல், இறையியல் வினைகள் (லௌகீக, வைதீக கர்மங்கள்). அபர வித்யா இன்றி, பர வித்யாவை அடைய முடியாது. பர வித்யா இல்லாமல் அபர வித்யா முமழுமை அடையாது.
ஆக இங்கு குறிப்பிடுவது, அபர வித்யா நம்மைக் காப்பாற்றாது என்ற பரந்த அர்த்தத்தில்.
தமிழ் இலக்கியத்தில் யாக்கை நிலையாமை
இச்சொற்களின் சாரத்தை பல தமிழ் ஞானிளும் சைவ சித்தாந்த அறிஞர்களும், கவிஞர்களும் எண்ணற்ற கவி வடிவிலே எழுதியுள்ளனர். யாக்கை நிலையாமை/நிலையாமை என்ற அத்தியாயங்கள் திருமந்திரத்திலும், திருக்குறளிலும் உள்ளன.
திருமந்திரம்
“மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிது உணர்ந்தவார் இல்லை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே”.
(நன்கு நெய்து தயாரிக்கப் பட்ட பட்டாடையும் கிழிந்து போய்விடும். இந்த உண்மையைப்பற்றி உலகத்தவர் சிறிதும் சிந்திப்பதில்லை. அழகிய கருங் கூந்தல் வெண் கூந்தலாக மாறிவிடுவதும் கண்கூடு. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு சிறு பொழுதே உள்ளது. இந்த உண்மைகளைச் சிந்தித்து நன்கு உணர்வீர் உலகத்தோரே).
மேலும்
“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே”
என்று திருமூலர் உரைக்கிறார்.
திருக்குறள்
இதனையே திருவள்ளுவர்:
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு (குறள் 340)
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்பொரு உயிரிடை நட்பு (குறள் 338)
என்றும் கூறுகிறார்.
சிவ வாக்கியார்
“ மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணமென்று பேணவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் ” (சிவ.பா.80)
என்ற சிவவாக்கியர் பாடல் அழியும் உடல் பற்றி குறிப்பிடுகிறது.
நாட்டுப் பாடல்
''குச்சு வீடுங் கட்டலாம்
குறுங் கதவு சாத்தலாம்
வாழ வேண்டும் என்று சொன்னால்
வாய் மதங்கள் பேசலாம்
காலனுட ஓலை வந்தால்
கனத்தவீடும் தாங்குமோ
குச்சு வீடும் தாங்குமோ
குறுங்கதவும் தாங்குமோ''
என்ற பாடல் மூலம் அறியப்படும் தத்துவங்கள் பலப்பல. உடம்பு ஒரு குச்சு வீடு. அதில் ஆசைகள் கதவுகளாகும். எனவே வாழ நினைப்பவன் ஆசையை அடக்குதல் வேண்டும். உடம்பு ஒரு குச்சுவீடு, அக்குச்சு வீடு எவ்வளவு கனத்திருந்தாலும் அதாவது (புண்ணியம் செய்திருந்தாலும்) காலதேவன் வந்துவிட்டால் கணப் பொழுதும் நில்லாது மறைந்து விடும் என்ற நிலையாமைத் தத்துவத்தை இப்பாடல் நயம்பட கூறுகிறது.
திரை இசைப் பாடல்
பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
செத்தா வெறகுக்காகுமா -
ஞானத்தங்கமே...
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?
கட்டழகு மேனியைப் பார்
பொட்டும் பூவுமா - நீட்டி
கட்டையிலே படுத்துவிட்டா
காசுக்காகுமா?'
முடிவுரை
மேற்கூறிய விளக்கங்கள் எதுவும், வேதங்களின் பூர்வபாகத்தில் (ஆரம்ப பகுதி) பொதிந்துள்ள பல்வேறு சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை இழிவுபடுத்துவதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதில்லை.
பெரும்பாலானவர்களுக்கு, அவை மனதையும் உடலையும் சுத்தப்படுத்துவதிலும், பெரிய பயணத்திற்கு ஒருவரைத் தயார் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.
ஸ்ரீ ஆதி சங்கரரைப் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், விரிவான தயாரிப்புகள் இல்லாமல் நேரடியாக அந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராக பிறந்தவர்கள், அந்த வகையில் மிகவும் வித்தியாசமானவர்கள்.
உண்மையில், இறுதிக்கான வழிமுறைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதையும், சடங்குகளில் மட்டுமே திருப்தியடைவதையும், அவற்றின் உண்மையான நோக்கத்தையும் பொருளையும் புரிந்து கொள்ளாமல் அவற்றைச் செய்வதையும் தவிர்த்து பரம்பொருளை உணருவதை முயலவேண்டும் என்று கூறுகிறது இப்பண்.
ஏன் இறைவன் நாமத்தை சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். இறைவனே இதற்கு பகவத்கீதையில் 8வது அத்தியாயத்தில் பதில் அளிக்கிறார்:
अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் |
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: || 8- 5||
ய: அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரந் = எவன் இறுதிக் காலத்தில் எனது நினைவுடன்
கலேவரம் முக்த்வா ப்ரயாதி = உடம்பைத் துறந்து கிளம்புகிறானோ (இறப்போன்)
ஸ: மத்³பா⁴வம் யாதி = எனதியல்பை எய்துவான்
நாஸ்தி அத்ர ஸம்ஸ²ய: = இதில் ஐயமில்லை.
இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.
வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அல்லவா. ஆகையால் நாம் அனைவரும் நம் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்யது, கரமத்தின் பலனை அவனிடமே விட்டு விட வேண்டும்.
இது தான் இந்த முதல் சம்மட்டி அடி. என்ன ஒரு ஆழமான அடி! இந்த அடியை உள்வாங்கினால், உற்ற தேகத்தின் உயிரையும், உயிரை மேவிய உடலையும் ஊடுருவி, உலுக்கி எடுத்து, நம் உணர்வினை தட்டி எழுப்பும் என்பது உறுதி.
அடுத்த பதிவில் சங்கரனின் இரண்டாவது சம்மட்டி அடி. அதைப் பெறும் வரை…….