ஶ்ரீமந் நாராயணீயம் – தசகம் 7 – முகவுரை

ஒருவரின் இயல்பு (“ஸ்வரூபம்”) என்பது, “சத்சித்அனந்தம், சச்சிதானந்தம், இருப்பு -அறிவு (உணர்வு)-பேரின்பம் என்றெல்லாம் அழைக்கப்படும் இருமையற்ற பரம்பொருளான பிரம்மம் என்பதே  என்று அறிந்துணர்வதே அனைத்து மனித முயற்சிகளின் இறுதி இலட்சியம் என்கின்றன நமது மறைகள். இந்த முயற்சிகளின் போது, நாம் பல பிறப்புகளையும் வடிவங்களையும் எடுக்கலாம். எனவே அரிதான இப்பிறவியில் மனிதராகப் பிறந்த, மிகவும் அதிர்ஷ்டசாலிகளான நாம், நமது உண்மை இயல்பான பரம்பொருளெனும் பிரம்மத்தை அறிய, இப்பிறவியிலேயே முயற்சிக்க வேண்டும்.

இம்முயற்சியில் நமக்கு உதவ, ஸ்ரீ. நாராயண பட்டத்திரி தனது காவிய படைப்பான ஸ்ரீமன் நாராயணீயத்தின் முதல் அத்தியாயத்தை (தசகம் 1) இருமையற்ற பிரம்மத்தின் பண்புகள், மகிமை மற்றும் மகத்துவத்தை விவரிப்பதன் மூலம் தொடங்கி, பிரம்மம் இங்கேயே குருவாயூரப்பனின் வடிவத்தில் உடனடியாகக் கிடைக்கிறது என்று கூறினார்.

பின்னர், பரவசத்தில் மூழ்கி, தசகம் 2 இல் பரம்பொருளான, குருவாயூரப்பனின் மகிமையான வடிவத்தை விவரித்தார்.

அடுத்த தசகம் 3, பக்தியில் கவனம் செலுத்துகிறது. பக்தி மார்கம், சுய உணர்தலுக்கான ஆரம்ப பாதையாகவும் இறுதியில் பிரம்மத்தை நோக்கியதாகவும் அவர் கருதுகிறார். இந்த தசகத்தில், தெய்வீக அருளைத் தேடும் ஒரு பக்தரின் உண்மையான இயல்பையும், “வைராக்யம் மற்றும் சிரத்தை”யின் அவசியத்தையும் வலியுறுத்தி அவர் விவரிக்கிறார்.

ஒரு பக்தன்/ ஆன்மீக சாதகன், தன்னுள் இருக்கும் இறையுணர்வினை/ஆன்ம ஆற்றலை அறிந்து அவ்வாற்றலைப் பயன்படுத்தி இறைநிலைக்கு உயர்ந்து இறைவனுடன் ஒன்றிணையும் நிலையே தியான யோகம் எனப்படுகின்றது. இதனைத் தமிழில் தவம் என்பர். இவ்யோக நெறிகள் பலவாகும். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவது அட்டாங்க யோகமாகும். இவ்வட்டாங்க யோகத்தையே

‘‘இயம நியமமே எண்ணிலா ஆசனம்

நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம்

சயமிகு தாரணை தியானம் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவது மாமே.

( திருமூலர் – திருமந்திரம்.10 பா.542) என்று திருமூலர் கூறுகிறார்.

தசகம் 4 இல், பட்டத்திரி, இந்த அஷ்டாங்க யோக நுட்பங்களை கோடிட்டுக் காட்டுகிறார். பக்தர்கள் ஆதி அந்தமிலா, நீக்கமற நிறை, இருமைகளிலா பரம்பொருளான குருவாயூரப்பனை அறிந்துணர தியானம் இன்றியமையாத சாதனம்.

அறிவதற்கரிதான இந்த பரம்பொருள் தத்துவத்தை தியானிப்பது என்பது, தேய்ந்து சிதையும் உடல்-மன வளாகத்திற்குள் பிணைக்கப்பட்டு, புறநோக்குடன் பொருளின்பம் தேடும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு மிகவும் கடினம். எனவே, பட்டத்திரி தசகம் 5 துவங்கி, படிப்படியான அணுகுமுறையின் மூலம் பரம்பொருளான குருவாயூரப்பனை அறிய உதவுகிறார்.

பேரழிவுக் காலமதில் தன்னிடம் ஒடுங்கிய அனைத்தையும், பரம்பொருளான குருவாயூரப்பன் தன் இயக்க இச்சையால், உலகு படைத்திட்ட பரிணாம செயல்முறைகளை விவரிக்கின்றார் தசகம் 5 இல். அண்டங்களனைத்துமடங்கிய மொத்த நுண்நிலை வெளிப்பாடான “ஹிரண்யகர்பம்”, பருநிலை வெளிப்பாடான “விராட்” இரண்டுமே பரம்பொருளான குருவாயூரப்பனே என எடுத்துரைக்கிறார். ஆக, பரம்பொருளை தியானிக்க ஞானியர் புரியும் இரு உபாசனைகளை (ஹிரண்ய கர்ப உபாஸநா, விராட் உபாஸநா) கோடிட்டுக் காட்டுகிறது இந்த தசகம்.

அதைத் தொடர்ந்து “விராட்” என்று அழைக்கப்படும் அண்ட மொத்த பருநிலை வடிவத்தை விளக்குகிறார். வேதங்களில் போற்றப்படும்படி உள்ள, பதினான்கு உலகங்களைக் கொண்ட அண்ட உடல், எண்ணற்ற கைகள், கால்கள், முகங்கள் போன்ற ஒரு வடிவத்தை அவர் முன்வைக்கிறார். தசகம் 6 இல் விராட் ரூப வடிவத்தின் பல்வேறு பகுதிகளை விவரிக்கத் தொடங்குகிறார். அந்தச் செயல்பாட்டில் அவர் பல்வேறு பகுதிகளை பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளுடன் அடையாளம் காண்கிறார். இது “விராட் உபாஸநா” புரிய உதவம், ஆன்மீக சாதகர்களுக்கு.

“பருநிலையில் முக்குணங்களுடனாகிய “விராட்” வடிவத்தில் கவனம் செலுத்தக்கூடிய இந்த தியான செயல்முறைக்குப் பிறகு, பட்டத்ரி பக்தர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் தசகம் 7ல். இதில் குருவாயூரப்பனாக காட்சி தரும் பிரம்மத்தின் வெளிப்பாடு நுட்பமாகிறது. இதில் பரம்பொருளான குருவாயூரப்பனே, “ஹிரண்யகர்ப்பர், நான்முகக் கடவுள், படைப்பாளர் என்றெல்லாம் அழைக்கப்படும் பிரம்மாவின் வடிவமெடுத்து, அண்டங்களின் படைப்புத் தொழிலை நான்முகனாக நடத்துவதை கூறுகிறார் பட்டத்ரி.இது “ஹிரண்யகர்ப உபாஸநா” புரிய உதவம், ஆன்மீக சாதகர்களுக்கு.

பரம்பொருளான, ஶ்ரீ குருவாயூரப்பன் அருளினாலே, தசகம் 7 பற்றிய எனது கல்வியை, இந்த கருட பஞ்சமி நாளில் துவங்கியுள்ளேன். விரைவில், எளியோன் யான் அறிந்ததை, தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !

Sriman Narayaneeyam – Dasakam 7 – Introduction

 

Understanding and Realising that one’s own nature (“svarupa”) is nothing but the embodiment of Existence-Knowledge-Bliss (called the non dual Brahman),  is the ultimate goal of all  human endeavours. These endeavours may cover several births and forms of ours. We, the extremely fortunate ones to be born as humans in this birth, therefore should endeavour to Understand and Realise the Brahman, our true Selves. 

To help us in our endeavour, Sri. Narayana Bhattathri begins the first Chapter (Dasakam 1) of his epic creation Sriman Narayaneeyam by describing the characteristics , glory and greatness of the non dual Brahman and states that Brahman is readily available, right here in the form of Lord Guruvayurappan Himself. 

Subsequently, overcome with ecstasy, he describes the glorious form of Lord Guruvayurappan in Dasakam 2. 

In the next Dasakam 3, focuses on devotion, which he considers as the earliest path to Self Realisation and ultimately to the Brahman. He describes the true nature of a devotee seeking the divine grace stressing the need for “Vairagya and Shraddha”.

In Dasakam 4, Bhattathri outlines the Ashtanga Yoga techniques, the eight fold discipline of Yoga. This will enable the devotees to practice meditation on the Absolute Brahman, the Existence-Consciousness-Bliss.

As concentrating and meditating on an abstract non dual concept of Existence-Consciousness-Bliss, is extremely difficult for ordinary mortals like us bound inside a decaying body-mind complex, Bhattathri adopts an alternate step by step approach by first describing the Cosmic Evolution processes in Dasakam 5 followed by a presentation of the Cosmic Gross Form called as “Virat”. He presents a picture of the Cosmic Body consisting of the fourteen worlds with innumerable hands, legs, faces etc as the collective living form of all the worlds as extolled in the Vedas. This gross manifestation is with Its inherent three “Gunas” viz., Satva, Rajas and Tamas. This is essentially to facilitate the devotees to do “Virat Upasana”, meditate on the Virat Rupa of Brahman.

He then starts describing the various parts of the form of Virat Rupa in Dasakam 6. In that process he identifies the various parts with the various regions of the Cosmos. This is primarily to assist the faithful devotees to meditate on the form/part of the Brahman in which the devotee is comfortable. 

After this meditation process where the devotees are able to concentrate on Virat form with three “gunas”, Bhattthri is now taking the devotees to the next level where the manifestation of Brahman becomes subtler and the manifested form has “two gunas” viz. Predominant Rajas and traces of Satva., called. “Hiranya Garbha”, generally known as “Brahma”: the Creator.

With the Blessings of Lord Guruvayurappan, I have commenced my study of this Dasakam 7. I will be sharing with you shortly, whatever little knowledge that I get from the study.

God Bless

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 4

ஸ்லோகம்

आनन्दाद्यः कमपि च घनीभावमास्थायरूपं
शक्त्या सार्धं परममुमया शाश्वतं भोगमृच्छन् । भोगमिच्छन्
अध्वातीते शुचिदिवसकृत्कोटिदीप्ते कपर्दिन्
आद्ये स्थाने विहरसि सदा सेव्यमानो गणेशैः ॥ ४॥

ஆநந்தாத்ய: கமபி ச கநீபாவமாஸ்தாயரூபம்
ஶக்த்யா ஸார்தம் பரமமுமயா ஶாஶ்வதம் போகம்ருச்சந் । (போகமிச்சந்)
அத்வாதீதே ஶுசிதிவஸக்ருத்கோடிதீப்தே கபர்திந்
ஆத்யே ஸ்தாநே விஹரஸி ஸதா ஸேவ்யமாநோ கணேஶை: ॥ 4॥

தமிழாக்கம்

பேரின்பப் பெருங் கடல்நீரின்  உறைபனியென
பெயரிலா வடிவமுடன்  உமையொரு பாகனாய்
அழியாப் பேரின்பம் விழைந்து,  இருமூன்று
பாதைகளுக் கப்பால் கோடை கால கோடிசூரிய
ஒளியுடனே என்றும்  முதல்வனாய் உலவுகிறாய், 
முக்கணங்கள் போற்றிடும் செஞ்சடையனே !! 4

சொற்களின் பொருள்

கபர்திந் - ஜடாதாரிந் - சடைமுடி தரித்தோனே (நமஹ் கபர்திநே ச - என்று ஶ்ரீருத்ரம் கூறுகிறது)

ஆநந்தாப்த்ய: - பேரின்பக் கடலின் (இன்பப் பெருக்கின்) அப்தி - நீர், கடல்

கநீபாவம் - உறைவடிவமாக (இறுக்கமாக) கநீ - உறைந்த, இறுகிப்போன

கமபி ச  - (கிமபி ச) ஏதோ ஒரு, வர்ணிக்க முடியாத 

ரூபம் - வடிவத்தை

ஆஸ்தாய - எடுத்துக்கொண்டு

ஶக்த்யா - சக்திதேவியாகிய (மாயையுடன்) 

உமயா  - உமையோடு

ஸார்தம் - கூடியவராய் 

பரமம் - மேலான

ஶாஶ்வதம் - அழிவிலா, நிலையான 

போகம்ருச்சந் । (போகமிச்சந்) - போகம் இச்சந் - இன்பத்தை விரும்பியவராய்

அத்வாதீதே - ஆறு பாதைகளிக்கப்பால், ஆதாரங்களுக்கப்பால்

ஶுசி கோடி திவஸ க்ருத் - கோடைகால கோடி சூரியனுக்கு நிகரான

தீப்தே - ஒளியுடன் 

கணேஶை: - கணங்களால் 

ஸேவ்யமாநோ - வழிபடப்படுவராய் 

ஸதா - எப்பொழுதும்

ஆந்நே ஸ்தாநே - முதலிடத்தில்

விஹரஸி - உலவுகிறீர்

பொருள் விளக்கம்

ஆதிதேவன் வேதங்கள் வாயிலாக அறியப்படுகிறார் – வேதங்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக அநுமானத்தின் மூலமாக நமக்கு விளங்க வைக்கிறது என்ற உட்கருத்தை முந்தைய ஸ்லோகத்தில் கூறிய அப்பைய்ய தீக்‌ஷிதர், இந்த ஸ்லோகத்தில் அவ்வித ஆதி தேவனாகிய பரமேசுவரனுக்கு, 

  1. எவ்வித ஸ்வரூபம், 
  2. எந்த ஸ்தானம், 
  3. எவ்வித பரிவாரங்கள் 

என்பதை விரித்துரைக்கின்றார். இறைவனின் உயர்ந்த நிலையை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. உயர்ந்த நிலையை தியானிப்பவன் எப்பொழுதும் உயர்ந்த நிலையிலேயே இருப்பான். 

இறைவனின் ஸ்வரூபம்

இறைவன் துன்பமே இல்லாத பேரின்ப வடிவமாக இருக்கிறார். இதனை “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்றார் திருநாவுக்கரசர். 

இறைவன் இருப்பது ஆனந்தமலை, ஆனந்தக்கடல். “ஆநந்தாப்த்ய”: “கநீபாவம், அதாவது பேரின்பக் கடலின் (இன்பப் பெருக்கின்), உறைவடிவமாக (இறுக்கமாக) என்பது. ஜலம் உறைந்து பனிக் கட்டியாவது போல் ஆனந்த வெள்ளம் கெட்டியாகி ஒரு ஸ்வரூபமானது என்று சொல்லக்கூடியது பரமேசுவரனின் ஸ்வரூபம். இது நிர்விகல்ப சமாதி நிலையைக் குறிப்பது.

அவருடைய சக்தியே உமையாகி அவரோடு சேர்ந்தது. இதனைக் குறிப்பதே “ஶக்த்யா ஸார்தம் பரமமுமயா”  என்ற சொற்றொடர்.  சக்திதேவியாகிய (மாயையுடன்) உமையோடு கூடியவராய் என்பது சவிகல்ப சமாதியைக் குறிக்கும். 

“ ஶாஶ்வதம் போகம்ருச்சந்” என்ற சொற்றொடருக்கு, இரு விளக்கங்கள் கூறப்படுகின்றன:

  1. இந்த உமையொருபாகனான இறைவனே, உடல் எடுத்து, இந்த பிரபஞ்சத்தில் உள்ள இன்பத்தை அனுபவிக்க விரும்புகிறார் என ஒரு விளக்கம். (பால கிருஷ்ணன் ஆலிலையிலிருந்து கொண்டு, தனது வலது கால் கட்டைவிரலையே சுவைப்பது போல ) 
  1. பரம்மானந்த ஸ்வரூபமான பரம்பொருள் மாயா சக்தியுடன் இணைந்து, உலகில் அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்க விரும்புகிறார் என்று மற்றொரு விளக்கம்.

அது பழச்சுவையென அமுதமென அறிதற்கு

அரிதென எளிதென அமரரும் அறியார்

என்று இதனை அழகாக வர்ணிக்கின்றார் மாணிக்கவாசகர். 

அத்3வாதீதே – இறைவனின் இடம் (ஸ்தானம்) – விளக்கம்

அத்3வாதீதே என்பது ஆறு பாதைகளைக் கடந்து, ஆறு ஆதாரங்களுக்கு அப்பால், ஆறு தத்துவங்களுக்கு அப்பால்  என்ற பொருளாகும்.  அத்வா என்றால் மார்கம். அத்வாதீதம் என்பது மார்கத்தின் முடிவு (மார்கத்தைக் கடந்தது)

ஆகம சாஸ்த்திரங்களில் இது விரிவாக கூறப்பட்டுள்ளது. இவைகளை உடல், மனம், வாக்கிற்கு அப்பாற்பட்டவராக, ஆன்மீக சாதனையின் எல்லையாக, அதாவது 

  1. மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களைக் கடந்து என்றும்
  • மூலாதாரம் –  தொப்புளுக்குக் கீழ்
  • ஸ்வாதிஷ்டானம் – தொப்புளுக்குக் கீழ்
  • மணிபூரகம் – தொப்புள்
  • அநாஹதம் – ஹ்ருதயம்
  • விஷுத்தி – கழுத்து
  • ஆஞ்ஞா – புருவமத்தி

 2.  இயற்கையின் வெளிப்பாடுகளாகளைக் கடந்ததாகவும்

  • வர்ணம் – எழுத்து
  • பதம் – சொல்
  • மந்த்ரம் – மந்திரம்
  • புவநம் – பிரபஞ்சம்
  • தத்துவம் – ஐம்பூதத் தத்துவங்கள்
  • கலா – ஸூக்‌ஷும ஐம்பூதங்கள்.

அறியலாம்.

ஆக, அரூபமான பரமேசுவரனும் லோகானுக்ரஹத்தின் பொருட்டு லீலா விக்ரஹமெடுத்துக் கொள்ளுகிறார் என்பது சாஸ்திரங்களின் கொள்கை. அவர் இருப்பதோ கோடி ஸூர்யப்ரகாசமான ஒரு ஸ்தானம். அது ஸ்ருஷ்டிக்கு முன்னால் பரமேச்வரனின் இச்சையால் ஆனது. அந்த ஸ்தானம் அத்வாக்கள் என்ற தத்துவங்களுக்கு அப்பாலுள்ளது. வர்ண, பத, மந்த்ர, புவன, தத்வ, கலா என்பன ஆறு அத்வாக்கள், மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூர, அனாஹத, சிவபதமடைய வேண்டியவர் செல்ல வேண்டும் என்ற உட்கருத்துடையது இந்த ஸ்லோகம்.

அந்த ஸ்தானத்தில் தன் அம்சம் பொருந்தின சிறந்த கணங்களால் ஸேவிக்கப்படுகிறார்.(கணங்கள் – தேவ, ரிஷி, பூத கணங்கள்). 

ஸ்லோகத்தின் கருத்துரை

ஆனந்தமே வடிவான சிவபெருமானை, மாயையுடன் (சக்தியுடன்) கூடி, ஆனந்தத்தை விரும்புவர் போல் செயல் புரியும் பரமேஸ்வரனை, அனைத்து தாவர ஜங்கமும் (பூத கணங்களாய்ப்) போற்றுகின்றன.. 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்ற திருவாசகமே இந்த ஸ்லோகத்தின் சாரத்தைப் பிரதிபலிக்கிறது.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 3

ஸ்லோகம்

इन्द्रं मित्रं वरुणमनिलं पुनरजं विष्णुमीशं
प्राहुस्ते ते परमशिव ते मायया मोहितास्त्वाम् ।
एतैः साकं सकलमपि यच्छक्तिलेशे समाप्तं
स त्वं देवः श्रुतिषु विदितः शम्भुरित्यादिदेवः ॥ ३॥

இந்த்ரம் மித்ரம் வருணமநிலம் பத்மஜம் (புநரஜம்) விஷ்ணுமீஶம்
ப்ராஹுஸ்தே தே பரமஶிவ தே மாயயா மோஹிதாஸ்த்வாம் ।
ஏதை: ஸாகம் ஸகலமபி யச்சக்திலேஶே ஸமாப்தம்
ஸ த்வம் தேவ: ஶ்ருதிஷு விதித: ஶம்புரித்யாதிதேவ: ॥ 3॥

தமிழாக்கம்

அவரவர் உன் மாயையால் மருவுகொண்டு உனை
அமரன் மித்ரன் வருணன் வாயு பிரம்மன் விஷ்ணு 
ஈசனென அழைத்திடுவர் உறுதியுடன் நிச்சயித்து !
இவரனைவரும் எவராற்றலின் துளியில் அடங்கிடுமோ
அப்பரம் ஆதிசம்புவே நீயென அருமறைகள் விளி !! 3

சொற்களின் பொருள்

பரம சிவ - சிவ பெருமானே (மேலான பேரின்ப வடிவே)

தே தே - (படைப்பின் மூல காரணத்தை ஆராய்கிற) அவரவர்கள்

தே- உம்முடைய

மாயையா - மாயையினால்

மோஹிதாஹ - மயக்கமடைந்தவர்களாய் 

த்வாம்- (உலக முதல்வராகிய) உம்மை

இந்த்ரன் - இந்திரன் என்றும்

மித்ரன் - மித்ரன் என்றும்

வருணன் - வருணன் என்றும்

அனிலம் - வாயு என்றும்

பத்மஜம் - ப்ரம்மா - நான்முகன் என்றும்

விஷ்ணு - திருமால் என்றும்

ஈஸம் - ஈசன் (ருத்ரன்) என்றும்

ப்ராஹு - ப்ரகர்ஷ்யேந ஆவுஹு - நிச்சயமாக கூறுகிறார்கள்

ஏதை: ஸாகம் - இவர்கள் எல்லோரும் சேர்ந்து

ஸகலமபி - அனைத்தும்

யத் - எவருடைய

சக்திலேஶே - இறையின் பேர் ஆற்றலின் சிறுதுளியிலே

ஸமாப்தம் - (இவர்கள் அனைவரின் ஆற்றல்களும்) அடங்கிவிடுமோ

ஸஹ - அந்த 

தேவஹ - பரம்பொருளான 

த்வம் - தாங்கள்

ஆதி தேவஹ - முதற்கடவுளான

ஷம்புஹு - சம்பு 

இதி - என்று 

ஶ்ருதிஷு - வேதங்களில்

விதித: - அறியப்படுகிறீர்

விளக்கம்

பகவான் ஷ்ருஷ்டி கர்த்தா. அவருடைய ஸ்வரூபத்தை எவராலும் அறிய முடியாது. ஆனால் அவர் பக்திக்கு வசப்பட்டவர் என்று முதல் ஸ்லோகத்திலும்,

படைப்பு இருப்பதால், படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும். ஜடப்பொருளாலும், வரையறைகளுக்கு உட்பட்ட ஜீவன்களாலும் படைக்க முடியாது என்பதனால், அனைத்து ஆற்றலும், அறிவையும் கொண்ட இறைவன் ஒருவனால் தான் இதனைப் படைக்க முடியும். எனவே கடவுள் இருக்கிறார் என்ற அறிவுப்பூர்வமான அநுமானத்தை

அப்பையர், இரண்டாவது ஸ்லோகத்திலும் கூறினார். 

இந்த மூன்றாவது ஸ்லோகம் இந்த அனுமானத்தை  

“ஆதிதேவன், வேதங்கள் வாயிலாக அறியப்படுகிறார் – வேதங்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக அநுமானத்தின் மூலமாக நமக்கு விளங்க வைக்கிறது” 

என்ற ஷ்ருதிப் ப்ரமாணத்தை கூறுகிறது.

“வேதங்கள் ஐயா என ஓங்கி அகழ்ந்து அகன்ற நுண்ணியனே” என்கிறார் மாணிக்க வாசகர். இதுவே இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இந்த நுண்ணியனை,

உயர்வறுயர்நலம் உடையவன் எவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்
அயர்வரும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரரு சுடரடி தொழுதெழு என் மன்னே!  

என்று நம்மாழ்வாரும்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 

என அருணகிரிநாதரும்

விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்நிற்குமே 

என திருநாவுக்கரசரும்

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் 
பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் 
கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர்
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் 
நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் 
கருதி நாடில் அருவு. என்பர் சிலபேர்
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் 
பேசில் அருள் என்பர் சிலபேர்
பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் 
பிறவுமே மொழிவர் இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ
பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே 

என்று தாயுமானவரும் கூறுகின்றனர்.

இப்படி, அறியதற்கு அரிதான, பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமயமான இறைவனுக்கு ஒரு வடிவத்தை கூறுவதுபோல அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்.  இறைவனை அறிபவர், “அவரவர் தம்தம் தறிவறி வகை வகை” என்கிறார் நம்மாழ்வார்.

ஆயிரம் தெய்வம் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல்
கேளீரோ !  

என பாரதி பண் பாடினான். அப்படிப்பட்ட சாஸ்த்திரம் இறைவனை எப்படி யாருக்கு அறிய வைக்கவேண்டும் என்று வகுத்தறிந்துள்ளது. எனவே

  1. மந்த அதிகாரிக்கு – ஈஸ்வரன் வைகுண்ட வாசி, கைலாஸ நாதன் (நிமித்த காரணம்) 
  2. மத்யம அதிகாரிக்கு – ப்ரபஞ்சமே ஈஸ்வரன்(உபாதாந காரணம்)
  3. உத்தம அதிகாரிக்கு – உன்னிடத்தில் உணர்வாக இருப்பவரே இறைவன் (விவர்த்த காரணம்)

சிவ – சொல் விளக்கம்

சிவ என்றால் மங்கலம், இன்பம் எனப்படும். அதாவது பொறிகளைப் பயன்படுத்தாமல் அறிவால் அறியக்கூடிய இன்பம் எனப்பொருள். இது பேரின்பம். 

“அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமருரும் அறியார் “ என்றும், “உலப்பலா ஆனந்தமாய் தேனினைச் சொரிந்து” என்றும் வர்ணிக்கின்றார் மாணிக்கவாசகர்.

மித்ரம் வருணம் – விளக்கம்

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும். மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம். சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

அரன் நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி;
உரைநூல் மறை; உறையும் கோயில்- வரை,நீர்
கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல் நேமி
உருவம் எரி கார்மேனி ஒன்று

பொய்யாழ்வார்

என்று பொய்யாழ்வர் இந்த மித்ர வருண தத்துவத்தை விளக்கிகிறார். அதாவது,

நாமம்/பெயர்– சிவன், நாராயணன், வாகனம் – ரிஷபம், கருடன், நூல்கள் – ஆகமம், வேதம், வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்), தொழில்/கருமம் – அழித்தல், காத்தல், ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம், உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு, ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)

இதைத் தான் வேதம், மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.

இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.

காரண ப்ரம்மன் அனைத்திற்கும் மூலகாரணமான இறைவன், பரம்பொருள். கார்ய ப்ரம்மன் தேவதைகள். கார்ய ப்ரம்மர்களுக்கு பொறுப்புகள் உள்ளன. காரண ப்ரம்மத்தின் ஆற்றலின் ஒரு சிறு துளியே இத்தேவதைகளனைத்தின் ஆற்றல். இதனை

ஏகா ச த³ஶ ஶதம் ச ஸஹஸ்ரம் சாயுதம் ச
நியுதம் ச ப்ரயுதம் சார்பு³த³ம் ச ந்யர்பு³த³ம் ச ।
ஸமுத்³ரஶ்ச மத்⁴யம் சான்தஶ்ச பரார்த⁴ஶ்ச
தன்மே மன: ஶிவஸங்கல்பமஸ்து ॥ 13॥

என ஸிவ ஸங்கல்ப உபநிஷத் கூறுகிறது 

அந்த அந்த புராணத்தில் அந்தந்த தேவதைகள் காரணப் பரம்மனாக வழிபடப்படுகிறார்.  உண்மையில் காரண ப்ரம்மத்திற்கு நாம ரூபங்கள் இல்லை. மித்ரம், வருணம் என்று இரு தேவதைகளை கோடிட்டுக் காட்டி இறைவன் எனும் சிவனுடைய ரூபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், ரூபமில்லா இறைவனை நமக்கு உணர்த்துகிறார் அப்பையர் இந்த மந்திரத்தில்.

ஸ்லோகத்தின் கருப்பொருள்

மனம் வடிவத்தைப் பற்றிக் கொண்டாலும், உண்மையில் இறைவனுக்கு வடிவமில்லை என்ற அறிவுடன் இருக்க வேண்டும்.

சைவமுதல் அளவிலாம் சமயமும் வகுத்து
சமயங்கடந்த மோன சமரச நிலையும் வகுத்த நீ 
மாலறவும் சைவமுதல் மதங்களாகி
மதாதீதமான அருள்மரபு வாழீ 

என்று தாயுமானவர் கூறுவதும் இதுவே.

உண்மையில் வணங்குகின்ற எனக்கும் வடிவமில்லை, வணங்கப்படும் இறைக்கும் வடிவமில்லை. அறியாமையால் என்னை உருவமாக கருதி, காணும் அனைத்தும் நாம, ரூபம் உள்ளவை என அறியாமையினால் எண்ணாத எண்ணமெல்லாம் ஏங்கி ஏங்கித் தவிக்கிறேன். தனித்தன்மைகள் உண்மை என எண்ணுவது மாயை. உணர்ச்சிகள் உண்மை அல்ல, எனினும் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் தேவை. 

இத்தகைய எண்ணத்தில் நிலைத்திருக்க, மனதை சமநிலைப்படுத்தி, ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு உதவும், அப்பையரின் இந்த ஸ்லோகத்தின் விசாரம். 

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 2

ஸ்லோகம்

क्षित्यादिनामवयववतां निश्चितं जन्म तावत्
तन्नास्त्येव क्वचन कलितं कर्त्रधिष्ठानहीनम् ।
नाधिष्ठातुं प्रभवति जडो नाप्यनीशश्च भावः
तस्मादाद्यस्त्वमसि जगतां नाथ जाने विधाता ॥

க்ஷித்யாதிநாமவயவவதாம் நிஶ்சிதம் ஜந்ம தாவத்
தந்நாஸ்த்யேவ க்வசந கலிதம் கர்த்ரதிஷ்டாநஹீநம் ।
நாதிஷ்டாதும் ப்ரபவதி ஜடோ நாப்யநீஶஶ்ச பாவ:
தஸ்மாதாத்யஸ்த்வமஸி ஜகதாம் நாத ஜாநே விதாதா॥

தமிழாக்கம்

புவிமுதல் அங்கமுடை பூதங்களனைத்திற்கும்
உண்டு தோற்றம் என்பது உறுதிபட நிச்சயம் !
வடித்தவனெனும் நிலைகளம் இலாமல் அவை
வடிவங்களென அறியப்படுவதே இல்லை !
தாவரமும் தன்வயமற்ற சங்கமமும் ஒன்றினைத்
தோற்றுவிக்க இயலாது என்பதனால், நாதனே
உலகிற்கு முதல்வனாய் இருந்திடும் உனையே
உருவாக்கமதின் உட்பொருளென அறிவேனே !! 

சொற்களின் பொருள்

நாத - உலகின் தலைவரே!

க்ஷித்யாதிநாம - க்ஷிதி ஆதிநாம - பூமி முதலான (பூமி, பஞ்ச பூதங்கள்) 

அவயவவதாம் - உறுப்புகளுடன் கூடியவைகளுக்கு

ஜந்ம - தோற்றம் (தோன்றியிருக்க வேண்டும்)

தாவத் - என்பது 

நிஶ்சிதம் - உறுதி

கர்த்ரு அதிஷ்டாந ஹீநம் - உருவாக்கியவனின் இருப்பு இல்லாமல் 

க்வசந - எப்பொருளும்

தத - அவை

கலிதம் ஏவ - அறியப்பட்டதே

நாஸ்தி - இல்லை

ஜடோ - உயிரற்ற பொருளால் (ஜடத்தால்) 

அதிஷ்டாதும் - ஒன்றைப் படைப்பதற்கு

ந ப்ரபவதி - இயலாது

அநீஶஶ்ச பாவ: அபி - (வைரயறைகளுடன் கூடிய, தன்வயமற்ற) உயிர,களாலும் 

ந (ப்ரபவதி) - முடியாது

தஸ்மாத் - எனவே

த்வம் - நீங்கள்

ஜகதாம் - உலகிற்கு

ஆத்யஹ - முதல்வராக (காரணமாக)

அஸி - இருக்கிறீர்கள் 

விதாதா - தங்களைப் படைப்பின் காரணமாக

ஞாதே - அறிகிறேன்

விளக்கம்

இந்த பிரபஞ்சம் எண்ணற்ற நிறங்களையும், எண்ணற்ற வடிவங்களையும் உடையதாக இருக்கிறது. இந்த படைப்பு தோன்றியிருக்கிறது என்பது உண்மை. மேலும் படைப்பவன் (கர்த்தா) இல்லாமல், பொருள் இல்லாமல் எந்த ஒரு படைப்பும் இல்லை. எனவே கடவுள் இருக்கிறார். இதனை வேதம் கூறுகிறது. “உலகு ஆதி பகவன் முதற்றே” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இந்த உலகானது கடவுளை முதலாக உடையதுதான். உலக முதல்வன் ஒருவன் உளன்.  உலகத்திற்கு ஆதி இறைவன். 

பெரியோரின் சொற்களே இந்த இறைவனின் இருப்பிற்கு ஆதாரம் (ப்ரமாணம்). திருவள்ளுவரே கூறுகிறார்

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் 

என்று குறள் 850ல்.

இந்த ஸ்லோகம் “ஈஸ்வர அர்த்தித்வ நிரூபணம்” – கடவுளின் இருப்பைக் கூறும் ஸ்லோகம் இது. மேலும் 

உயிருள்ளவற்றிலிருந்து உயிரற்றவை தோன்றுகின்றன. உணர்வற்ற பொருளால் இந்த உலகைப் படைக்க முடியாது. சிற்றறிவு உள்ள உயிர்களால் இந்த உலகைப் படைக்க இயலாது.

என்கிறது இந்த ஸ்லோகம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை. நம்முடைய வரையறைகள் நமக்குத் தெரிகின்றது. நமக்குமேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த சக்தி “ஆனந்தமயமாய்,  அறிவாய்   இருக்கிறது” என்று கூறுகிறது வேதம். 

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளே …..

என வானவில்லின் தோற்றத்திற்கு இறைவனை ஒப்பிடுகிறது நாலடியார். எப்போது வரும், எப்போது மறையும் என்பது நமக்குத் தெரியாது.

அத்தகைய “கடவுள் இல்லை என்று சொல்பவன் தன்னையே இல்லை என்று சொல்பவனாகிறான், கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்பவன் தன்னைக் கடவுளாகவே உணர்கிறான்” என்றும் கூறுகிறது வேதம். எனவே கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், இறைவனை மறவா மனம் தேவை.

ஜகத் (படைப்பு) காரியம். காரணமில்லாமல் காரியம் இல்லை. ஜடப்பொருளோ, ஜீவர்களோ காரணமாக இருக்க முடியாது. எப்படியோ, காரணம் என்று ஒன்று இருக்க வேண்டும். இறை தத்துவம் இருக்கிறது என்பதற்கு இது ப்ரமாணம்.

ஆக, இறைவன் இருக்கிறான் என்பது குருட்டு நம்பிக்கை அல்ல. அறிவுப்பூர்வமான நம்பிக்கை. எப்படி உடலுக்குப் பின்னால் உயிர் தத்துவம், உணர்வுத் தத்துவம் இருக்கிறதோ, அப்படி இந்த மஹா பிரபஞ்சத்தின் ஆதாரமாக ஓர் உயிர் தத்ததுவம் இருந்தே ஆக வேண்டும் என்று அறிவுப்பூர்வமான அநுமானத்தால் இறையின் இருப்பை புரிந்து கொள்ள வேண்டும். இதனையே வள்ளுவர் முதல் குறளில் பயன்படுத்துகிறார்.

எழுத்தெல்லாம் அகர முதல - இது தெரிந்தது
உலகு ஆதிபகவன் முதற்றே - இது தெரியாதது

தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் புரிந்துகொள்வது. இந்த ஸ்லோகம் இதனை விளக்குகிறது.

  1. அனைத்திற்கும் மூலகாரணம் எது?
  2. அந்த மூல காரணம் இருக்கிறதா, இல்லையா?
  3. இருந்தால், அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன?
  4. அதனுடன் தொடர்பு தேவையா?
  5. அத்தகைய தொடர்பால் என்ன கிடைக்கும்?

என விசாரம் செய்யத் தூண்டும் ஸ்லோகம் இது.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 1

ஸ்லோகம்

कस्ते बोद्धुं प्रभवति परं देवदेव प्रभावं
यस्मादित्थं विविधरचना सृष्टिरेषा बभूव ।
भक्तिग्राह्यस्त्वमिह तदपि त्वामहं भक्तिमात्रात्
स्तोतुं वाञ्छाम्यतिमहदिदं साहसं मे सहस्व ॥ १॥

கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம்
யஸ்மாதித்தம் விவிதரசனா ஸ்ருஷ்டிரேஷா பபூவ |  
பக்திக்ராஹ்யஸ்த்வமஸி ததபி த்வாமஹம் பக்திமாத்ராத் 
ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ

தமிழாக்கம்

எவரிடம் விதம்விதம் சிருட்டியின் தோற்றம் 
அவர்தனின் பெருமை அறிய வல்லார் உளரோ!
அடைவர் உனை இருப்பினும் பேரன்பினாலே !
அவா எனக்கு அன்பினால் உனைப் போற்றவே !
அடியனின் இம்முரட்டுத் துணிவு பொறுத்திட்டு
அருள் புரிந்திடுவாயே விண்ணவரின் தேவனே !! 1 

சொற்களின் பொருள்

தேவதேவ - தேவர்களுக்கெல்லாம தேவனாக விளங்குபவனே!

யஸ்மாத் - எவரிடமிருந்து

இத்தம் - இத்தகைய 

விவிதரசனா - விதவிதமான (ஆச்சர்யமான)

ஏஷா - இந்த 

ஸ்ருஷ்டி - படைப்பானது

பபூவ - தோன்றியதோ (தோன்றி, நிலைபெற்று, ஒடுங்குகிறதோ)

தே- (அத்தகைய சிறப்பு வாய்ந்த) உம்முடைய

பரம் - மேலான

ப்ரபாவம் - சிறப்புகளை 

கஹ - எவர் 

போத்தும் - அறிவதற்கு, புரிந்து கொள்வதற்கு

ப்ரபவதி - வல்லார் ?

ததபி - இருந்த போதிலும்

த்வாமஹம் - த்வம் இஹம் - நீங்கள் இங்கு

பக்திக்ராஹ்யா - பேரன்பினால் அடையப்படுபவராக இருக்கிறீர்

அஹம் - நான்

த்வாம் - உங்களை 

பக்திமாத்ராத் - பக்தியினால் மட்டும்

ஸ்தோதும் - போற்றித் துதிப்பதற்கு

வாஞ்சாமி - விரும்புகிறேன்

மே- என்னுடைய

இதம் - இந்த 

அதிமஹத - அதிக முரட்டுத்தனமான 

ஸாஹஸம் - துணிச்சலை

ஸஹஸ்வ - பொருத்தருள்வீராக

விளக்கம்

“தேவர்களுக்கு தேவனே! எவரிடமிருந்து இத்தகைய விதவிதமான, வியப்பான இந்த படைப்பானது தோன்றியதோ, அத்தகைய சிறப்பு வாய்ந்த உம்முடைய மேலான, தன்நிகரற்ற சிறப்புகளை, பெருமைகளை, எவரே அறிவதற்கு வல்லவர்? இருந்தபோதிலும், நீங்கள் இங்கு பேரன்பினால் அடையப்படுபவர். நான் உங்களை பக்தியினால் மட்டும் போற்றித் துதிப்பதற்கு விருப்பமுடையவனாக இருக்கிறேன். என்னுடைய இந்த அதிக முரட்டுத்தனமான துணிச்சலைப் பொறுத்தருள்வீர்களாக” என்று இறைவனின் இலக்கணம், பெருமை, அவனை உணரும் வழி இவற்றுடன் துவக்குகிறார் முதல் ஸ்லோகத்தில். இதில் அப்பையரின் பணிவினை நாம் அறியலாம்.

இறைவனின் பெருமை 

இறையின் பெருமையை புகழ்ந்து முடிக்க முடியாது. அதனால்தான்

அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந்
தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ!!

தனது பெருமை நோக்காது எத்துணை எளியவனாயும் போந்து எந்தச் செயலையும் திருவருள் காரணமாகப் பிறர் பொருட்டுச் செய்பவன் எங்கள் இறைவன். ஆகவே, புள்ளித் தோலை ஆடையாக உடுத்தமை, ஆலாலத்தை ஆரமுதாக உண்டமை முதலிய எல்லாம் அவனுக்குப் பெருமை ஆவனவேயன்றிச் சிறுமையாகா என “தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ” என்றார் மாணிக்கவாசகர். 

பகவத் கீதையில் (10.19) “நாஸ்த்1யன்தோ1 விஸ்த1ரஸ்ய மே”- தெய்வீக மகிமைக்கு முடிவே இல்லை என்றும், 

நான்தோ1 ‌ஸ்தி1 மம தி3வ்யானாம் விபூ4தீ1னாம் ப1ரந்த1ப1 |
ஏஷ தூ1த்3தே3ஶத1ஹ ப்1ரோக்1தோ1 விபூ4தே1ர்விஸ்த1ரோ மயா II

பகவத் கீதை 10.40

“எதிரிகளை வென்றவனே! என் தெய்வீக மகிமைகளுக்கு முடிவே இல்லை. நான் உன்னிடம் சொன்னது என் நித்திய மகிமையின் அடையாளம் மட்டுமே” என்றும் (10.40) 

பகவான் கண்ணன் கூறியதை நினைவு கூற வேண்டும்.

படைப்பெனும் வியப்பு

“குதம் ஆஜாதா குதம் இயம் வ்ருஷ்டி” – இவ்வுலகமும் உடலும் எங்கிருந்து வந்தது என்கிறது நாஸதீய ஸூக்தம் (6). 

“ஐன்மாத்ஸத் யதஹ” – பிரம்மம் என்பது யாரிடமிருந்து (உலகின்) தோற்றமும், எஞ்சிய பகுதியும் என்கிறது பிரம்ம சூத்திரம் 1.1.2. இதனை “தடஸ்ய லக்‌ஷணம்” என்பர், அதாவது படைப்பின் காரணத்தை அநுமாநம் செய்கிறோம். 

விதம் விதமான பல்வேறு படைப்பின் தோற்றம் என்பதற்கு “மனஸா அபி அசிந்தய ரசநா ரூபஸ்ய” என ஆதி சங்கராச்சார்யர், 

எண்ணற்ற விதவிதமான படைப்புகளின் ஆச்சர்யத்தை வர்ணிக்கின்றார். 

இதனையே

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன !!

என மாணிக்கவாசகர் கூறுகிறார். எனவே, படைப்பையும், படைப்பின் சிறப்பையும், படைப்பின் காரணமான பரம்பொருளையும் அனுதினமும் மறவாது சிந்தித்தல் வேண்டும். 

அன்பெனும் பக்தி

அத்தகைய இறைவன் “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை” என வள்ளலாரும், “பக்தி வலையில் படுவோன் காண்க” என மாணிக்கவாசகரும் கூறுகின்றனர்.

“ காதலாகி கணிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது” என்று திருஞான சம்பந்தர் கூறுகிறார். 

“ப4க்1த்யா த்1வனன்யயா ஶக்1ய அஹமேவம்விதோ4 ‌ர்ஜுன | – அர்ஜுனா! அலாதியான கலப்படமற்ற பக்தியினால் மட்டுமே என்னை உன் முன்னால் நின்று இருக்கும் வடிவத்தில் அறிய முடியும்” என கண்ணன் கீதையில் (11.54) அறிவுறுத்துகிறான் இதனையே. 

சிவானந்த லஹரியில் ஆதி சங்கரரின் இந்த பக்தியின் வெளிப்பாட்டினை பல ஸ்லோகங்களில் காணலாம்.  ஆக, நிலையிலா இன்பத்தை தரக்கூடிய உலக இன்பப் பொருட்களின் மீதுள்ள பற்றை நீக்கி, நிலையான இன்பமே வடிவான இறையிடத்தில் அன்பை வைக்க வேண்டும். 

தேனுக்குள் இன்பம் கருப்போ ணிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே

திருமந்திரம்

அத்தேனுக்குள் இன்பமென, ஊணுக்குள் ஒளிந்திருக்கும் இறைவனை ஊணுருகும் பக்தியாலே உணரமுடியும் என்பதை வலியுறுத்துகிறார் அப்பைய தீட்சிதர்.

அப்பையரின் பணிவு

இந்த ஸ்லோகத்தில்,  “ஸாஹஸம் மே ஸஹஸ்வ – என்னுடைய இந்த அதிக முரட்டுத்தனமான துணிச்சலைப் பொறுத்தருள்வீர்களாக” என்ற சொற்றொடரின் மூலம் அப்பைய தீக்‌ஷிதரின் அடக்கத்தை நாம் அறியலாம்.

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து 

திருக்குறள் 130

என்று திருவள்ளுவர் கூறுவது போல, கற்க வேண்டியதைக் கற்று (கற்று) , கோபம் வராமல் தன்னைப் பாதுகாத்து (கதம் காத்து), அடக்கமாக இருக்கும் (அடங்கல்) அப்பையரிடம் அறக்கடவுள் (தர்ம தேவதை) குடிகொண்டிருப்பதை, (அறம் செவ்வி ஆற்றின் நுழைந்து) அவரின் பணிவின் மூலம் நாம் அறிய வேண்டும்.

ஆக,

  1. இறைவன் படைப்பிற்கு காரணம்
  2. இறைவனை முழுமையாக அறிய எவராலும் இயலாது
  3. அன்பினால் மட்டுமே அவரை உணரந்து கொள்ள முடியும்
  4. அன்பை வளர்க்க வேண்டுமெனில், ஆண்டவனைப் போற்றிப் புகழ்ந்து மனமுறுகிப் பாட வேண்டும்.
  5. பணிவுடன் பாட வேண்டும். அடக்கத்துடன் ஆண்டவனைப் போற்றிப் புகழந்து பாடினால், மனமாசுகள களையப்படும். மனம் தெளிவடையும். தெளிந்த மனம், இறைவனை க்ரஹிக்கும் ஆற்றல் பெறும்

இதுதான் இந்த ஸ்லோகம் நமக்கு அளிக்கும் அறிவுரை.

அப்பைய தீக்‌ஷிதரின் “ஆத்மார்ப்பண ஸ்துதி” – முகவுரை

“ஸ்துதி” என்றால் புகழுரை. ஆத்மார்ப்பணம் (ஆத்ம அர்ப்பணம்) என்பது தன்னையே (தன்னிடமிள்ள அனைத்தையும்) இறைவனுக்கு அர்ப்பணித்தலைக் குறிப்பதாகும்.

“அன்றே என் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே

கொண்டிலையோ”

என மாணிக்க வாசகர் கூறுவது போல, 

“துதீய வஸ்து கோவிந்தம் துப்யமேவ ஸமப்ரததே”, அதாவது, உன்னுடைய பொருளை உனக்கே அர்பணிக்கிறேன் என கங்கை நீரை கங்கையிலே அர்ப்பணிப்பது போல,

ஆத்மார்ப்பண ஸ்துதி, நமது அஹங்காரத்தை பழுக்க வைத்து, பக்தியில் லயமாக்குகிறது. பின் அதனை அறிவால் அழித்து ஜீவன் முக்தனாகுவதற்கு வழி வகுக்கிறது.

தன்னுடையது என்ற எண்ணத்தை விடுவதே தானம் (“ஸ்வத்வ நிவ்ருத்திஹி தானம்”) என்கிறார் ஆதி சங்கராச்சார்யர்.

அதனால்தான் யாகங்களில் “இதம் ந மம” – இது என்னுடையதல்ல என ஒவ்வொறு தெய்வத்திற்கும் அளிக்கிறோம். (“ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம” – சோமனுக்கு கொடுத்துவிட்டேன், சோமனுக்குத்தான், எனக்கு இல்லை)

ஆக,

உயிர்களாகிய நாம் சிற்றறிவு உடையவர்கள், இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்ற சீவன்-சிவன் என்ற வேறுபாடின் (“ஜீவேஸ்வர பேதம்”) அடிப்படையில்தான் இந்த பக்தி நூல் (“பக்தி க்ரந்தம்”) உள்ளது. ஆழ் உறக்கத்தைத் தவிர மற்ற அனைத்து நிலைகளிலும்,  உடல், உணர்ச்சி, விவேக சக்தி இவைகள் நம்மில் வேறு வேறாகவே இருக்கின்றன. த்வைத பக்தி செய்தால்தான் அத்வைத ஞானத்திற்கான மனப்பக்குவத்தை நாம் அடையலாம்.

தே1ஷாம் ஸத1த1யுக்1தா1னாம் ப4ஜதா1ம் ப்1ரீதி1பூ1ர்வக1ம் |
த3தா3மி பு3த்3தி4யோக3ம் த1ம் யேன மாமுப1யாந்தி1 தே1 ||

பகவத் கீதை 10.10

த்வைத பக்தியை நன்கு கடைப்பிடிப்பவர்களுக்குத்தான் அத்வைத ஞானத்தை அளிக்கிறேன் என்று கண்ணன் கீதையில் (10.10) கூறுகிறான்.

துன்பம் கலவாத இன்பம் இறைவன் மட்டுமே. நாம் அனுபவிக்கின்ற புலனின்பங்கள் யாவும் துன்பம் கலந்தவையே. இறையின்பத்தை புலன்களால் உணர முடியாது. எனவே இறைவனை வடிவமுடையவனாக பாவனை செய்து, அவ்வடிவங்களைப் போற்றி, தொழுது, இறையின்பத்தை புலனின்பம் போன்று அனுபவிக்கின்றோம்.

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் நாமங்கள் பாடித் தெள்ளேனம் கொட்டாமோ 

என்றார் மாணிக்கவாசகர்.

ஆகவே நாம் புரியும் பக்திக்குப் பின்னால்

  1. இறைவனைப் பற்றிய அறிவு
  2. உயிரைப் பற்றிய அறிவு
  3. உலகம்,உறவுகள் முதலியவை துன்பம் கலந்த இன்பத்தைத்தான் தருகிறது என்ற அறிவு
  4. இந்த இன்ப துன்ப அனுபவிப்பு, பிறவிகள் தோறும் தொடர்வது என்ற அறிவு

இவைகள் இடைவிடாமல் இருந்தால்தான் பக்தி நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். இல்லையெனில் அதுவும் வெறும் இன்பம் கலந்த துன்ப முயற்சியே. “புல்லாய்ப் பூண்டாய் புழுவாய்…..இத்தாவர சங்கமத்துள் எல்லாம் பிறப்பும் பிறந்து இளைத்தேன்” 

என மாணிக்கவாசகர் கூறுவதை அறிய வேண்டும்.

இறைவனைப் பற்றிய அறிவினைப் பெற்றவுடன் இறைவனிடத்தில் அன்பு தோன்றும். இறைவனிடத்தில் அந்த அன்பு அனைத்தையும் செலுத்த உதவ வேண்டும்  என்று அவனையே பிராரத்தனை செய்ய வேண்டும்.

அத்தகைய பிராரத்தனைகளே, அப்பைய தீக்‌ஷிதரின் அறுபது ஸ்லோகங்கள் அடங்கிய “ஆத்மார்ப்பண ஸ்துதி”.

வரும் ஏப்ரல் துவங்கி, ஒவ்வொரு திங்களிலும், இரண்டு அல்லது மூன்று ஸ்லோகங்களுக்கான விளக்கங்களைக் காண்போம். 

பின் குறிப்பு

விளக்கங்களனைத்தும், பூஜ்யஶ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகளின் அருளுரைகளிலிருந்து, அடியேன் அறிய முற்பட்டது.  பிழைகள் அனைத்தும் என் தவறுகளால் மட்டுமே (அறிவதில், புரிவதில், புரிந்ததைக் கூறுவதில்). தவறுகளைத் திருத்திக் கொள்ள, அடியேனுக்கு அறிவுரை வழங்கவும். மிக்க நன்றி.

“Crowmmunications” – I want to understand

Since childhood days I have watched with wonder how my mom and other lady members in our family call out crows and offer food to them before we commence our lunch. This is a routine affair.

I also learnt as a child that we should be like crows when it comes to sharing food. Crows call out fairly loudly all their family and friends to come and share the food what they got. I have also seen and heard their SOS when one of their clan is injured (sometimes fatally wounded/shot).

How do they communicate with each other in their meetings during their “business as usual” days? I am neither an Ornithologist nor an avid bird watcher to understand this. According to Ornithologists at Cornell Lab, communications by crows may be more complex than other birds.

Strange enough, I now regularly watch with awe their meetings . I decided to record the proceedings. In the month of January 2025, I witnessed 5 such meetings. These meetings happened fairly regularly at the end of the day between 17.45 to 18.30 hrs (just around the sun set time). Their meetings lasted for not more than 5 minutes

I have no clue whatsoever on their communications. But I did notice a striking similarity with how we communicate in a group. The voice modulations, gesticulations (vigorous shaking of their tails), display of restlessness, manoeuvring to get strategic seat for effective communication etc were all there for me to see.

Here is a video clip.

What were they trying to communicate?

Were they trying to share their experiences on a daily basis?

Were they discussing strategies for handling the forthcoming summer?

Were they concerned about the menace from the ever growing population of pigeons?

Were they talking about the radiations fron the Cell Phone towers?

I have absolutely no clue. I can’t hear, I can’t see, I can’t think, yet my intellect surely tells me that they had SOMETHING in them that sets an agenda for them to discuss daily, even though THAT which sets the agenda and which EXISTS is beyond my sensory perceptions.

After all, Vedas tell me that, THAT SOMETHING which is beyond my sensory perceptions EXIST inside me and in-fact is ME (tat tvam asi). Vedas do tell me that the same EXISTS inside them too.

That something that EXISTS in me and as me and in those crows too, is what I want to understand and nothing else.

For me understanding THAT SOMETHING is enough. Rest are all perishables and really doesn’t matter.

கயிற்றில் பாம்பு

முன்னுரை

ஊருக்கு வெளியிலே, நீங்கள் தங்கியிருக்கும் அடர்ந்த மரங்களடங்கிய ஓய்வு விடுதிக்கு, சூரியன் மறையும் அந்தி வேளையில், காலையில் துவக்கிய மலை ஏறும் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, சாலையில் ஏதோ ஒன்று வளைந்து, சுருண்டு கிடக்கிறது. உடனே உடலில் ஒரு மின்சாரத் தாக்கு, இதயத்தில் ரத்த ஓட்ட வெள்ளம், புத்தியிலிருந்து வாக்கிற்கும் கால்களுக்கும் ஒரு அவசர தந்தி. “அய்யோ பாம்பு! ஓடு”. ஓடி நின்றபின் உள்ளிருந்து ஒரு குரல் “சரியாகப் பார். உன் கையில்தான் சிறு ஒளி விளக்கு உள்ளதே”. மறுபடியும் அந்த இடத்திற்குச் சென்றால் அந்த “பாம்பு” அங்கேயே உள்ளது. விளக்கு ஒளியில் அது பாம்பு இல்லை, வெறும் கயிறு என்று தெரிகிறது.

“சரி, வெளிச்சம் போதாது. அறியவில்லை சரியாக. அவ்வளவுதான். இதில் என்ன பெரிய தத்துவம்” என நாம் கேட்கலாம்.

வேதாந்தத்தில், இது போல பல உருவகங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அவைகளில் முக்கியமான உருவகங்கள் ஐந்து என்பர். அவைகள்:

1. சிலந்தியும், சிலந்தி வலையும்

2. ஒரு மரத்தில் இரு பறவைகள்

3. குடுவையில் நீர்

4. கயிறும் பாம்பும்

5. குடுவையில் வெளி

பொதுவாக, இந்த உருவகங்கள் மஹா வேத வாக்கியங்கள் எனப்படும் வேதசாரங்களை அறிய உதவும். இவைகளில், கயிறும் பாம்பும் என்ற உருவகத்தை அறிய முயலுவோம்.

“உவமை எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே” என்கிறது தொல்காப்பியம். ஆக, உருவகம் என்பது, ஒரு உயர்ந்த கருத்தினைச் சார்ந்தது. அதன் உபயோகம் அந்த கருத்தினை விளக்க மட்டும்தான். அந்த வரையறைக்குள் இருந்தால்தான் அந்த உருவகத்தின் பயன். எனவே கதிர்மறைக் கருத்துக் கண்ணோட்டத்துடனோ அல்லது உதாரணத்தையோ எடுத்துக் கொண்டு இந்த உருவகத்தின் பலனின்மையை நிலைநிறுத்தாமல், உருவகத்தின் வரையறைக்குள் இருந்து உருவகம் கூறுவிருக்கும் கருத்தினை ஆய வேண்டும். அந்த மனநிலையுடன் இந்த உருவகத்தை இப்போது ஆராய்வோம்.

விளக்கவுரை

இந்த உருவகத்தில்.

1. அரையிருளில் ஏதோ ஒன்று உள்ளது என்பதை அறிய போதுமான வெளிச்சம் உள்ளது,

2. ஆனால் அது என்ன என்பதை அறிய போதுமான வெளிச்சம் இல்லை. கயிற்றை பாம்பு என்று தவறாக எண்ணுவதற்கு இதுதான் சரியான சூழல்.

3. கயிற்றின் யதார்த்தம் மறைக்கப்பட்டு அதன் இடத்தை ஒரு பாம்பு கைப்பற்றுகிறது.

4. கயிறு மறைந்து போவது போல் கயிறு இருந்த இடத்தில் பாம்பு தோன்றும்.

5. பின்னர் விளக்கு இயக்கப்பட்டு “பாம்பு” இருந்த கயிறு பார்க்கப்படுகிறது.

கயிற்றின் மீது பாம்பு எவ்வ்வாறு கற்பிக்கப்பட்டு, இந்த மிகைப்படுத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை இப்போது விவரமாக காணலாம். இந்த உருவகத்தில்

1. கயிறு என்பது – நிலையான அறுதி உண்மையான பிரம்மன் எனும் தூய இருப்பு, தூய உணர்வு. இது பரமாத்மா எனப்படும் பரம்பொருளை குறிக்கும்.  நீக்கமற நிறைந்திருக்கும் இதுவே நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருக்கும் தூய உணர்வான ஆத்மா.

2. பாம்பு என்பது – உடல் மன வளகத்தில் உறையும் ஜீவாத்மாவை குறிக்கும்.

3. அரையிருட்டு என்பது – அறிவின்ஒரு பகுதியும் அறியாமையையும் குறிப்பது.

4. பிரகாசமான ஒளி  என்பது – அறியாமையை நீக்கும் மெய்யறிவு எனும் ஆத்ம ஞானம். இது அறுதி உண்மையுடன் இணைந்த அறிவினை குறிக்கும்.

இந்த ஒப்புமையைப் புரிந்து கொள்ள, ஒரு பகுப்பாய்வு இதோ.

1. பாம்பின் தோற்றத்திற்கு கயிற்றின் இருப்பு முற்றிலும் அவசியம்.

கயிறு என்ற ஒன்று இருக்கிறது. கயிறு இல்லை என்றால், பாம்பு தோன்றி இருக்காது.

அதாவது பரம்பொருள்/ஆத்மா என்றெல்லாம் அழைக்கப்படும் தூய உணர்வு இருந்தால்தான், உலகம் என்ற ஒன்று தோன்றும். அதனால்தான் எந்த அனுபவமும் சாத்தியமாகிறது. காகிதம் இல்லாமல் எழுத்துக்களின் உலகம் இருக்க முடியுமா? இல்லை. அதேபோல, ஒப்பீட்டளவில் உலகம் இருந்தாலும் அதன் தோற்றத்திற்கு அடி மூலக்கூறு பரமபொருளான ஆத்மா. அதனைச் சார்ந்தே  இவ்வுலகம்.

2: குறைந்தபட்சம் சிறிது வெளிச்சம் இருக்க வேண்டும்

அரையிருளில் ஏதோ ஒன்றைப் பார்க்கிறோம். ஒன்றுமே காணவில்லை என்று இல்லை. எதையாவது பார்க்க, குறைந்தபட்சம் சிறிது வெளிச்சம் இருக்க வேண்டும். அந்தி நேரத்தில் மங்கலான வெளிச்சம் இருந்தது, அதனால்தான் எதோ ஒன்றைப் பார்க்க முடிந்தது. வெளிச்சம் இல்லாவிட்டால், எதையும் பார்க்க இயலாது.

புற உலகமாக இருந்தாலும் அல்லது தனிப்பட்ட எண்ணங்களின் உள்உலகமாக இருந்தாலும் நாம் உண்மையில் எதையாவது பார்க்கிறோம்/தெரிந்துகொண்டிருக்கிறோம். எனவே நாம் முற்றிலும் அறியாதவர்கள் அல்ல. யதார்த்தம் நமக்கு முழுமையாக மறைக்கப்படவில்லை. ஓரளவு மட்டுமே. யதார்த்தம் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தால், உலகத்தைப் பற்றிய எந்தப் பார்வையும் நமக்கு இருக்காது.

3: காணும் பாம்பு, பார்த்தவனுக்கு உண்மை

நீங்கள் உண்மையில் அங்கு ஒரு பாம்பை பார்க்கிறீர்கள். நிழற்படம் ஏதுமில்லை. கயிற்றை பாம்பாகப் பார்க்க முயல்கிறீர்கள் என்பதல்ல. பாம்பு உங்களுக்கு மிகவும் உண்மையானது; ஒரு உண்மையான பாம்பு இருப்பதைப் போன்ற பயம்! உண்மையில் அது ஒரு கயிறு என்ற விழிப்புணர்வு இல்லை. பாம்பு பாரத்தவனுக்கு ஒரு தனிப்பட்ட உண்மை (subjective reality); அது உண்மையானது (வெளிப்படையாக) இல்லாவிட்டாலும், பயத்தின்அனுபவம் உண்மையானது மற்றும் நியாயமானது.

அதுபோல, நாம் உலகைப் பார்க்கும்போது, உண்மையில் ஒரு உலகத்தை”வெளியே” பார்க்கிறோம் – அது, ஒதுக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் உத்தரவுகளால் செயல்படுகிறது. உலகின் செயல்பாடுகள், அவைகளின் அனுபவத்திற்கான நம் எதிர்வினைகள், நமது கவலைகள், துன்பங்கள், இன்பங்கள், விருப்பு வெறுப்புகள்… அனைத்தும் நியாயமானவை மற்றும் உண்மையானவை.

4: கயிறு முற்றிலும் உண்மையானது.

முற்றிலும் உண்மை என்றால் எப்போதும் உண்மையானது. நமது மருண்ட பார்வைக்கு முன்பும், மருண்ட பார்வையின்போதும், ஒளியினால் மருவு கலைந்தபின்னும் அந்த கயிறின் இருப்பு மறுக்கமுடியாத உண்மை. எந்திலையிலும் அது கயிறுதான்.  எனவே கயிறு எப்பொழுதும் அதன் கயிற்றின் தன்மையை தக்க வைத்துக் கொள்கிறது. நமது மருவு கயிறின் கயிற்றுத் தன்மையை மாற்ற இயலாது.  கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் நம் அனுபவங்களால் கயிறு பாதிக்கப்படாமல், நாம் காணும் பாம்பிற்கு ஆதாரமாக இருக்கிறது.

நிலையான, மாறாத, அழியாத நீக்கமற நிறை பரம்பொருளை பிரம்மத்தை, வரையறுக்கப்பட்ட நிலையிலா, மாறும், அழியக்கூடிய உலகம் என்று நாம் தவறாகப் புரிந்து கொண்டாலும் – அந்த பிரம்மம் எனும் பரம்பொருள் தீண்டப்படாமல் இருக்கிறது, உலகத்தின் பண்புகளை ஒருபோதும் அது பெறுவதில்லை. எனினும் உலகத்தின் ஆதாரமாக இருக்கிறது. அது தான் அறுதி உண்மை (ultimate reality).

5: ஒப்பீட்டளவில் பாம்பு வெளிப்படையான உண்மையானது.

பாம்பு முற்றிலும் உண்மையானது அல்ல,  நிபந்தனைக்குட்பட்ட உண்மை. என்ன நிபந்தனை? மருவின் தொடர்ச்சி எனும் நிபந்தனை. மருவு தொடர்ந்து இருக்கும் வரை, பாம்பு உண்மை.  பாம்பு முற்றிலும் உண்மையற்றது என்று நாம் கூற முடியாது – ஏனென்றால் மருவின் போது, நாம் பார்ப்பது ஒரு பாம்புதான். இது ஒருவித யதார்த்தத்தைக் கொண்டுள்ளது. ஆனால் பாம்பு முற்றிலும் உண்மையானது என்று நாம் கூற முடியாது – ஏனென்றால் அந்த மருவு நடந்த இடத்தில் – பாம்பு இல்லை, ஒரு கயிறு மட்டுமே உள்ளது! மேலும், அந்த மருவு  நீங்கியதும், நாம் பாம்பைப் பார்க்க மாட்டோம். இன்னும் சொல்லப்போனால் பாம்பை நாம் பார்க்க முடியாது.  அந்த பாம்பு வெளிப்படுத்திய பார்வை, ஒலி, ஸ்பரிச உணர்வு, வாசனை இவை அனைத்தும் போய்விட்டன.  ஆக, பாம்பின் முழுமையான நிலையை சொற்களில் வெளிப்படுத்த முடியாது. இருப்பினும் தொடர்புநிலையில் சொற்களைப் பயன்படுத்தி – பாம்பு நிபந்தனையுடன் உண்மையானது என்று கூறப்படுகிறது. அதேசமயம் கயிறு முற்றிலும் உண்மையானது.

உலகம் ஒரு முழுமையான யதார்த்தம் இல்லை, ஆனால் அது தொடர்பு நிலையில், மாயாவின் நிபந்தனையின் கீழ் வெளிப்படையான உண்மையானது. உலகம் தற்போதைக்கு உண்மையானது, ஆனால் சுய அறிவு உதயமாகும்போது மறைந்துவிடும். ஆனால் பரம்பொருள்  என்றுமே எந்நிலையிலுமே முற்றிலும் உண்மையானது.

6: கயிற்றின் இருப்பு (existence), தோன்றும் பாம்பின் இருப்பை பிரதிபலிக்கிறது.

பின்னர் பாம்பின் குணங்கள் (தோற்றத்தில்) அந்த இருப்பில் (சத்) அடுக்கப்பட்டது போல தோன்றுகின்றது. எனவே தோற்றம் என்பது கயிற்றின் இருப்பு மற்றும் பாம்பின் குணங்களின் கலவையாகும். கயிறு இல்லை என்றால், பாம்பு தோன்றாது. தொடங்குவதற்கு ஏதாவது இருப்பதால் மட்டுமே பாம்பின் தோற்றம் சாத்தியமாகும். எனவே பாம்பின் இருப்பு, உண்மையில், கயிற்றின் இருப்பு. அந்த மருவு மேவிய இடத்தில் பாம்பு இல்லை. இறுதியில் கயிறு மட்டுமே உள்ளது. இருப்பினும் ஒருவர் பாம்பைப் பார்க்கிறார், அதாவது கயிற்றின் சாரம் (கயிற்றுத்தன்மை) மறைக்கப்பட்டிருப்பதால், பாம்பின் குணங்களை அனுமானிக்க வழிசெய்கிறது. எனவே பாம்பின் குணங்கள் கயிற்றின் இருப்பில் கற்பிக்கப்படுகின்றன. இது மாயையை சாத்தியமாக்குகிறது.

உலகத்தின் இருப்பு கடன் வாங்கப்பட்ட இருப்பு, அது ஆத்மாவினுடையது (அதாவது பரம்பொருளுடையது). உலகத்தின் குணங்கள் (உலகம், மேகம், மரம், கல், மழை, நுண்குருத்து (இழைமணி) , எண்ணம் போன்றவை) பிரம்மனின் இருப்பில் கற்பிக்கப்படுகின்றன.

இந்த கண்ணோட்டம் நாம் பரிவர்த்தனை செய்யும் உலகின் வெளிப்படையான யதார்த்தத்தைக் (transactional reality) கொண்டுவருகிறது.

7:  பாம்பைப் பார்த்தவுடன், பார்க்கும் வரை, ஏதாவது ஒரு வழியில் எதிர்வினையாற்றுவோம்.

பயம், கூவுதல்,  ஓடுவது…. எதைச் செய்தாலும்  அனைத்துச் செயலும் பாம்பு இருப்பதை ஒப்புக்கொள்வதைக் குறிக்கிறது. பாம்பாட்டி.ஆக இருந்தாலும்கூட பாம்புகளைப் பற்றிய பரிச்சயத்தால், அலட்சியமாக நடந்து கொண்டாலும் அந்த அலட்சியம் கூட பாம்பின்உண்மையான அங்கீகாரத்தின் எதிர்வினையாகும்.

நாம் உலகத்தை நுகரும் வரை, நாம் உலகத்து வழிகளில் எதிர்வினையாற்றப்போகிறோம். வெவ்வேறு விஷயங்களுக்கான நமது எதிர்வினைகள், நிச்சயமாக, பரிநாமமாகலாம். ஆனால் பொறி புலன் (பார்வை, ஒலி, வாசனை, தொடுதல், சுவை)  பற்றிய நமது நுகர்தல் செயல்படும் வரை – உலகியல் / மாயாவின் ஒரு குறிப்பிட்ட மயக்கம் இருக்கும்.

8: தவறை முடிவுக்குக் கொண்டுவர, தெளிவாகப் பார்ப்பது மட்டுமே அவசியம்.

வேறு எதையும் குறிப்பாகச் செய்வது தேவையற்றது: பார்ப்பதில் தெளிவு இல்லாததால் தவறு ஏற்படுகிறது. எனவே தவறை நீக்குவதற்குத் தேவையான ஒரே காரணி தெளிவாகப் பார்ப்பதுதான்.

வேறு எதையும் செய்வது, எப்படியாவது இன்னும் தெளிவாகப் பார்க்க உதவியாக இருந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, நிதானமாக ஆழ்ந்து சுவாசிப்பது, பகுத்தறிவுடன் சிந்திப்பது, பின்னர் ஒருவரின்அமைதியான உடல்-மனதைப் பயன்படுத்தி பாம்பின் உண்மை குறித்து கேள்வி எழுப்புவது போன்ற செயல்கள், நாம் கண்ட பாம்பிடமிருந்து தப்பி ஓட உதவாது. பார்வையின் தெளிவைக் கொண்டுவரும் அறிவு மட்டுமே வேலை செய்யும்.

மாயாவை அகற்ற, உடலால் புரியும் எந்த வினைகளும், செயல்களும், நடவடிக்கையும் தேவையில்லை. நம்மைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் நாம்கொண்டிருக்கும் மருவினை அகற்றுவது சொல்லாலோ, உடலாலோ அல்ல. ஆத்ம ஞானம் ஒன்றே தேவை. அதைப்பெற உதவிடும் எந்த வினைகளும், செயல்களும், நடவடிக்கையும் வரவேற்க வேண்டியது.

9: மருவினால் நமது தவறு தொடங்கும் போது, பாம்பின் அனைத்து தன்மைகளும் ஒரே நேரத்தில் தோன்றும்.

பாம்பின் வெவ்வேறு பண்புகள் படிப்படியாகத் தோன்றி, பின்னர் நாம் அதனை இணைப்பதில்லை. பாம்பின் அனைத்து வரையறுக்கும் குணங்கள், அனைத்து பொருத்தமான பண்புகள் கொண்ட முழு பாம்பு ஒரே நேரத்தில் தோன்றும். அதேபோல, தவறை உணர்ந்தால், உடனே கயிற்றை சிக்கென “பிடிப்போம “. அதாவது, பாம்பின் வெவ்வேறு பாகங்கள்/பண்புகளுடன் தொடர்புடைய நம்மருவு (தவறுகள்) ஒவ்வொன்றாகச் செல்வது அல்ல. பாம்பு முழுவதும் (அதன் எல்லையற்ற குணங்களுடன்) ஒரேயடியாக வெளியேறுகிறது.

உலகங்கள் மற்றும் உயிரினங்கள், அவற்றின் தனிப்பட்ட எல்லையற்ற பண்புகள் – அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும்.

முதலில் வந்தது நேரம், வெளி. தொடர்ந்து 5 மீதமுள்ள கூறுகள். பின்னர் நெபுலாக்கள், பின்னர் நட்சத்திரங்கள், பின்னர் கிரகங்கள் போன்றவை என்றெல்லாம் ஒருவர் சொல்லலாம். மனித மனதைத் தாண்டிய பரந்த தன்மையைப் புரிந்துகொள்ள வரையறுக்கப்பட்ட மனதுக்கு மட்டுமே இந்த விளக்கம் உதவும். உண்மையில், அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும். அது வெளிப்படையாக வராமல் இருக்கலாம். மாறாக அது விதையில் மறைந்த மரமென சாத்திய நிலையில்  இருக்கும். காலப்போக்கில் அது வெளிப்படும். எனவே, அது வெளிப்படையாகவோ அல்லது வெளிப்படுத்தப்படாததாகவோ இருந்தாலும், ஆரம்பமில்லாத தொடக்கத்தில் இருந்து, அது ஒரே நேரத்தில் தோன்றியது.

ஆத்ம ஞானத்தால் மாயை மறையும்போது, அதன் பல படைப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மறைந்துவிடும். ஒரு ஜீவன்முக்தாவிற்கு (இவ்வாழ்விலேயே விடுதலை பெற்றவர்) – உலகம் நிச்சயமாக உடல் ரீதியாக மறைந்துவிடாது. இருமையின் தோற்றம் இன்னும் தொடர்கிறது. இருப்பினும், உலகம் உறுதியாகவும் சந்தேகமின்றியும் ஒரே பிரம்மம் என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

10: பாம்பு கரைந்தவுடன் வேறு எந்த பிரச்சனையும் இல்லை.

பிரகாசமான கை விளக்கு எரிந்ததும், பாம்பைப் பார்க்கும் உங்கள் பயம்-அனுபவம் உடனே போய்விடும் என்பது அல்ல. உண்மையில் பயம் சிறிது நேரம் நீடிக்கும் – உடலின் இரசாயன மாற்றங்கள் மற்றும் பாம்புப்பற்றிய எண்ணங்கள் மனதில் மறைந்துபோகும் போது சில பதிவுகளை விட்டுச்செல்லும். எனவே பாம்பு கரைந்து விடும் என்பதே சரியான சொற்றொடர். சிறிது நேரமெடுத்தாலும் கவலைகள் மறைகின்றன. இதானால்தான் பாம்பு மறைகிறது என்பதைவிட கரைகிறது என்கிறோம்.

அதேபோல், ஆத்ம ஞானத்தால் நாம் வீடுபேறு பெற்ற நிலையில் நமது ஆன்மீக அறியாமை அழிக்கப்படும்போது, உலகப் பிரச்சனைக்கு தீர்வுகாணப்படுவதில்லை. மாறாக உலகமே வெவ்வேறு உணர்வு/உணர்ச்சியற்றபொருள்களின் உலகமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. தவறான பார்வையின்அடிப்படையில் கண்ட உலகம் கரைந்துவிட்டது. எனவே உலகை முற்றிலும் முழு உண்மையாக காண்பதன் மூலம், இனி எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவேண்டிய அவசியமில்லை. வீடுபேறு அடைந்து தான், பிரச்சனைகளை விடுவிக்கின்றோம் என்று ஏதுமில்லை.அதற்குப் பதிலாக, விடுதலை பெற்றவர், தொடங்குவதற்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை என்பதை புரிந்துகொள்கிறார்.

11: பாம்பையும் கயிற்றையும் ஒன்றாகப் பார்க்கவே முடியாது:

ஒன்று நாம் பாம்பைப் பார்க்கிறோம், அல்லது கயிற்றைப் பார்க்கிறோம். அவற்றை நாம் ஒருபோதும் சமமாக உண்மையாகப் பார்க்க முடியாது. தவறு நீங்கிவிட்டால், பாம்பின் உண்மையும் போய்விடும்.கயிறு எப்படி பாம்பாக இருந்தது என்பதை ஒருவர் இன்னும் பார்க்க முயற்சி செய்யலாம். எனினும் விசாரணையில் எந்த மாற்றமும் இருக்காது. ஏனெனில் அடைந்த அறிவு முழுமையானது.

அதே போல, பிரம்மமும் உலகமும் ஒரே சமயத்தில் சமமாக இருக்க முடியாது. உலகக் கண்ணோட்டம் உண்மையானதாகத் தோன்றும் வரை, பிரம்மம் உண்மையானதாக இருக்க முடியாது. உலகம் தெரிந்தால், ஒருவர் உண்மையாக விடுதலை பெறவில்லை; புத்தியின்வழி, அறிவுபூர்வமாக மட்டுமே பெற்றுள்ளார்.  ஒரு ஜீவன் முக்திக்கு பிரம்மம் மட்டுமே உண்மையானது; உலகின் உறுதியான உண்மை, என்றென்றும் இல்லாமல் போய்விட்டது.

முடிவுரை

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவெனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடுற்ற வீக்கம்
கலங்குவதெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவில்லேந்தி
இலங்கையில் பொருதாரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.

கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் வருகிற ஒரு பாடல் இது. இந்தஉருவகத்தை தழுவியது. ஒரு பூமாலையைப் பார்த்தால் சட்டென்று பாம்பு போல் தோன்றிவிடுகிறது. அதே மாதிரிதான் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பிரபஞ்சம் என்னும் மாயத் தோற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. யாரைக் கண்டால் இந்தமாயை விலகும்? பாம்பல்ல, மாலையுமல்ல, பரம்பொருள் என்பதை எவன் உணரவைப்பானோ, அவனே வேதங்களின் சாரமான ராமன்.

இது என்ன? ஒருமையை விளக்கும் முடிவில், இருமையை ராமனாக எடுத்துக்காட்டுகிறாயே என வினவலாம்.

“நீங்கள் கயிற்றைப் பார்க்கும்போது, கயிறு உண்மையில் ஒரு மாயை அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒருவேளை பாம்பு முழு உண்மையாகஇருக்கலாம். நீங்கள் நிஜத்தைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள், திடீரென்று கயிற்றின் மாயையைப் பார்க்க ஆரம்பித்தீர்கள். உங்கள் பயம் மறைந்துவிட்டது, மாறாக தவறாக.

இந்த சிந்தனையை எப்படி மறுக்க முடியும்?” இப்படியும் ஒருவர் இந்த உருவகத்தைப்பற்றி கேட்கலாம்.

பாம்பு-கயிறு உருவகம், ஆத்ம ஞான விசாரணைக்கான வழிமுறைகளில் ஒன்று.  இது அறிவார்ந்த விவாதத்திற்காக அல்ல.  இது ஒரு தனிப்பட்ட சுய விசாரணை. மற்ற உருவகங்களப் போல இதுவும் ஒரு வரையறுக்கப்பட்ட குறிக்கோளைக் கொண்டது; எனவே கேள்விக்கு உட்பட்டது. மேலே உள்ள சந்தேகங்கள் ஒவ்வொரு உதாரணத்தையும் எவ்வாறு நிராகரிக்கமுடியும் என்பதை நிரூபிக்கிறது. அதனால்தான், ஒரு தகுதிவாய்ந்த மாணவர், உருவகத்தைப் பற்றி விசாரிப்பதில் உள்ள நுட்பமான வித்தியாசத்தை அறிவர். உருவகத்தினால் அறிய உதவுகிறதா என்று விசாரிப்பர்,  உருவகத்தின் செல்லுபடியை கேள்விக்குட்படுத்தும் விசாரிப்புகளை தவிர்ப்பர்.

பின்குறிப்பு

இந்த உருவகம் அஷ்டாவக்ர கீதையில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அஷ்டாவக்ர கீதையின் விளக்கவுரைகளை அறிய கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும்.

https://soundar53.substack.com/s/ashtavakra-gita

அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும்.

https://www.amazon.com/s?i=stripbooks&rh=p_27%3AP.+Soundara+Rajan&s=relevancerank&text=P.+Soundara+Rajan&ref=dp_byline_sr_book_1

https://notionpress.com/author/374389

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

அந்த நாளும் வந்திடாதோ

மெய்யறிவு மாணவனின் ஏக்கம்

அறியாமைக் காட்டதனில் தனியாகத் திரிந்தலைந்த என்னை,

நெறியுடன் வாழ வல்லமைதந்திட்ட என் தாய் தந்தையரின்

பெருந்தவத்தால் புவிதனில் பொருள் புகழ் பெருமை பெற்றிடினும்,

சிறியோன் என் சிந்தனையில் சிறிதேனுமில்லை மறைஞானம்!!

திரையதனில் தோன்றும் வண்ணமாயையே வாழ்வென அறிந்து,

நரைமுடியும் விழுதருணம் விழைகிறேன் நான்மறை கூறும்

சச்சிதானந்த மெய்ப்பொருளை அறியும்  வேதாந்த வழிதனை!

நடவினையின் ஆட்சிதனை தடை செய்ய இயலுமோ தரணியிலே!!

தூயஇருப்பெனும் அறிவான அனந்தமே அறுதி உண்மையென

மருவேதுமின்றி எதிர்மறை மொழியில் உரைத்தன நான்மறைகள்!

இருப்பெனும் அறிவானந்தமே அறுதி உண்மையெனின், இந்த

இறைவன் எங்கிருந்து வந்தான் இடைச்சாதி நானென்று ?

பொறிபுலன்களை புறம் நோக்கிப் படைத்து, கண்ணிமைக்கும்

நொடிப் பொழுதில் காதம்பல கடந்திடும் மனம் கொடுத்து,

பொருள் நிறை அண்டம்தனை சார்ந்திராதே பற்றுடனே என

சாரதியாய் அவன் வந்து சாத்திரம் சொல்வது சரிதானோ ?

சிறியோன் என் சிந்தையுதி இச்சிதறல்களைச் சீரழித்து, என்

மனதினிலந்த  உண்மைதனை உணர்த்திட, அண்ட பிண்டத்தில்

மாயக்காட்சிகள் நடத்திடும் மாயோனான அந்த இறையே,

ஆத்மா எனும் நான் என்ற மறை மொழியை உள்ளாய்ந்தால்,

சிறுவித்து ஒன்றில் பெருந்தருவை மறைத்துப் பின் சிறப்பித்து,

சிலந்தி வலை வழியே அண்டப் பரிமாண தத்துவத்தை விவரித்து

அலங்கலில் தோன்றும் அரவு கொண்டு ஐம்பெரும் பூதம் விளக்கி

அலங்காரப் பொன் நகைகளில் அடிப்படைக் காரணம் சொல்லி,

கார் இருள் நிறை கருவறை கிழித்து தாய்க்கு வலிதந்து

பாரினில் எனை இறக்கிப் பின் காலன் வரும் நேரமதில்

பாசஉறவுகளுக்கு வலிதந்து காலிலா கட்டிலில் செலுத்தி

நாடகமிப்படி நடத்திடும் மாயோனே அந்த நான் அன்றோ!!

அலங்கலான அந்த நான் யாரென்றறியா அரவே இந்த நான்!

நிழலை நிஜமென இறுகப் பற்றிடும் மருவுநாயகன் இந்த நான்!

பற்றுதல் பலவிதம் ஒவ்வொன்றும் தனிப்பட்ட அமைச்சகம்! அப்

பற்று அமைச்சரவையின் பிரதமரே அறியாமையாம் இந்த நான்!!

நீரினைப் இறுகப்பற்றினால் குளத்திலே நீந்த இயலாது - எனினும்

பிறவிப் பெருங்கடல் நீந்திட இறுகப்பற்றுவது இவ்வுடலையன்றோ !

சிறுவித்து ஒன்றைப் பெருந்தருவாய் சிறப்பிக்கும் அந்த நான்

சிரித்திட்டேன் விந்தையுடன் இந்த நான்தனின் மடமை கண்டு!!

ஆதிஅந்தமிலா பரமனுரையாம் மறையோதும் வேதவிற்பன்னரும்

காயமே பொய்யதனால் காண்பாய் உனையெனும் ஞானியும்

கருமமே கண்ணென மெய்வருத்தி வாழ்ந்திடும் யோகியும் கூறிடும்

காலத்தால் அழியா வாழ்வியல் உண்மையன்றோ அந்த நான்!!

அந்த நாளும் வந்திடாதோ அந்த நானை இந்த நான் அறிந்திட!!